கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் வேதங்களை நம்புதல்

அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்ட வேதங்களை நம்பிக்கை கொள்வது ஈமானின் தூண்களில் ஒன்றாகும். வேதங்களை நம்புவதன் அர்த்தம், அதன் முக்கியத்துவம், அவற்றில் சிலதின் பெயர்கள், தற்போதுள்ள வேதங்கள் பற்றிய எமது நிலைப்பாடு என்பன பற்றி இப்பாடத்தில் கற்போம்.

  • வேதங்களை நம்புவதன் அர்த்தம், அதன் முக்கியத்துவத்தை அறிதல்.
  •  தற்போதுள்ள வேதங்கள் பற்றிய முஸ்லிமின் நிலைப்பாட்டை அறிதல்.
  • அல்குர்ஆனின் பாலுள்ள முஸ்லிம்களின் கடமையை அறிதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

இந்தப் பாடத்தின் மொழிபெயர்ப்பு பின்வரும் மொழிகளில் கிடைக்கிறது:

வேதங்களை நம்புவதன் அர்த்தம்

தனது அடியார்களுக்காக தனது தூதர்கள் மீது அல்லாஹ் வேதங்களை அருளியுள்ளான் என உறுதியாக உண்மைப்படுத்துதல். இவ்வேதங்கள் அல்லாஹ் தனது தகுதிக்கேற்ப பேசிய பேச்சாகும். இவ்வேதங்களில் மனிதர்களுக்கு ஈருலகிற்குமான சத்தியம், ஒளி, நேர்வழி உள்ளன.

வேதங்களை நம்புவதன் முக்கியத்துவம்

வேதங்களை நம்புவதும் இறைநம்பிக்கையின் ஒரு தூணாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும், அவனது தூதருக்கு அருளிய வேதத்தையும், அதற்கு முன் அருளிய வேதத்தையும் விசுவாசியுங்கள்". (நிஸா : 136). இங்கு அல்லாஹ் அவனையும், அவனது தூதரையும், அத்தூதருக்கு அருளிய வேதமாகிய அல்குர்ஆனையும், அதற்கு முன்னர் அருளப்பட்ட வேதங்களையும் நம்பிக்கை கொள்ளுமாறு பணித்துள்ளான்.

நபி (ஸல்) அவர்கள் இறைநம்பிக்கையைப் பற்றி : “நீர் அல்லாஹ்வையும், அவனது வானவர்கள், வேதங்கள், தூதர்கள், மறுமை நாளையும், விதியையும் நம்புவதாகும் என்றார்கள்”. (முஸ்லிம் : 08).

வேதங்களை நம்புவதன் உள்ளடக்கம் எவை ?

١
வேதங்கள் உண்மையிலேயே அல்லாஹ்விடமிருந்து தான் இறங்கியதென்பதை நம்புதல் .
٢
அவை அல்லாஹ்வின் வார்த்தை என்பதை நம்புதல்.
٣
எமது நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட அல்குர்ஆன், மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட தவ்ராத், ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட இன்ஜீல் போன்ற அல்லாஹ் தனது வேதங்களில் பெயர் குறிப்பட்டவற்றை அப்பெயர்களுடன் நம்புதல்.
٤
அவ்வேதங்களில் ஆதாரபூர்வமான செய்திளை நம்புதல்.

முன்னைய வேதங்களில் எமது நிலைப்பாடு என்ன?

மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட தவ்ராத், ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட இன்ஜீல் ஆகியன அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்ட சத்தியம் என முஸ்லிம் நம்பிக்கை கொள்கின்றான். மானிடர்களின் ஈருல வாழ்விற்கான ஒளி, நேர்வழியை உள்ளடக்கிய செய்திகள், போதனைகள், சட்டதிட்டங்களை அவ்விரண்டும் உள்ளடக்கியுள்ளன. என்றாலும் யூதர்களும், கிறிஸ்தவர்களும் தமது வேதங்களைத் திரிபு படுத்தி, அவற்றில் கூட்டல், குறைத்தல்களை மேற்கொண்டுள்ளதாக அல்லாஹ் அல்குர்ஆனில் எமக்கு அறிவித்துள்ளான். எனவே அவை அல்லாஹ் இறக்கியதைப் போன்றே தற்போதில்லை.

தற்போதுள்ள தவ்ராத் (பைபிளின் பழைய ஏற்பாடு) மூஸா (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட தவ்ராத் அன்று. ஏனெனில் யூதர்கள் அதனைத் திரிபுபடுத்தி, மாற்றி, அதன் சட்டதிட்டங்களில் தமது கையாடல்களைச் செய்து விட்டார்கள். அல்லாஹ் கூறுகின்றான் : "வார்த்தைகளை அதற்குரிய இடங்களை விட்டும் திரிபுபடுத்துவோரும் யூதர்களில் உளர்". (நிஸா : 46).

அதேபோன்றே தற்போதுள்ள இன்ஜீலும் பைபிளின் புதிய ஏற்பாடு நபி ஈஸாவிற்கு அருளப்பட்டதல்ல. கிறிஸ்தவர்களும் இன்ஜீலைத் திரிபு படுத்தி, அதன் சட்டங்களில் பல மாற்றங்களைச் செய்து விட்டனர். அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான் : “நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவார் இருக்கின்றார்கள் - அவர்கள் வேதத்தை ஓதும்போதுத் தங்கள் நாவுகளைச் சாய்த்து ஓதுகிறார்கள் - (அதனால் உண்டாகும் மாற்றங்களையும்) வேதத்தின் ஒரு பகுதிதானென்று நீங்கள் எண்ணிக் கொள்வதற்காக; ஆனால் அது வேதத்தில் உள்ளதல்ல; “அது அல்லாஹ்விடம் இருந்து (வந்தது)” என்றும் அவர்கள் கூறுகிறார்கள்; ஆனால் அது அல்லாஹ்விடமிருந்து (வந்ததும்) அல்ல; இன்னும் அறிந்து கொண்டே அவர்கள் அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றார்கள்”. (ஆலஇம்ரான் : 78).

“அன்றியும் எவர்கள் தங்களை, “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்கள்” என்று கூறிக்கொள்கிறார்களோ அவர்களிடமிருந்தும் நாம் உறுதிமொழி வாங்கினோம்; ஆனால் அவர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்; ஆகவே, இறுதி நாள் வரை அவர்களிடையே பகைமையும், வெறுப்பும் நிலைக்கச் செய்தோம்; இன்னும், அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அல்லாஹ் அவர்களுக்கு எடுத்துக் காட்டுவான்”. (மாஇதா : 14). இதனால் தான் தவ்ராத், இன்ஜீல் இரண்டையும் உள்ளடக்கிய, தற்போது வேதக்காரர்களிடம் உள்ள பைபிளில் பல தவறான கொள்கைகள், தவறான தகவல்கள், பொய்யான கதைகள் உள்ளதைக் காண்கிறோம். இவ்வேதங்களில் உள்ள தகவல்களில் அல்குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான நபிமொழிகள் உறுதிப்படுத்துபவற்றையே நாமும் உண்மைப்படுத்தல் வேண்டும். அவ்விரண்டும் பொய்ப்பித்துள்ளதை நாமும் பொய்ப்பிக்க வேண்டும். எஞ்சியதை உண்மைப்படுத்தாமலும், பொய்ப்பிக்காமலும் மௌனிக்க வேண்டும்.

அத்துடன் அல்குர்ஆன் கூறியுள்ளதைப் போன்று இன்றுள்ள தவ்ராத் மற்றும் இன்ஜீலில் திரிபுகளும், மாற்றங்ளும் நிகழ்ந்துள்ளதை நம்ப வேண்டும். எனினும் ஒரு முஸ்லிம் அவ்வேதங்களை இழிவுபடுத்தாது, மாசுபடுத்தாது மதிக்க வேண்டும். ஏனெனில் திரிபுக்குட்படாத அல்லாஹ்வின் சில வார்த்தைகள் எஞ்சியுள்ளன.

அல்குர்ஆன் விடயத்தில் எமது கடமை என்ன?

١
அல்குர்ஆனை நேசித்து, அதனை மகத்துவப்படுத்தி, மதித்து நடப்பது எமது கடமையாகும். ஏனெனில் அது படைத்தவனின் வார்த்தையாகும், வார்த்தைகளில் அதுதான் மிக உண்மையானதும், சிறந்ததுமாகும்.
٢
அதை ஓதுவதுடன், அதன் அத்தியாயங்கள், வசனங்களை ஆராய்வதும் எமது கடமையாகும். அல்குர்ஆனின் போதனைகள், தகவல்கள், சம்பவங்களை சிந்தித்து, சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிய எமது வாழ்வை அவற்றுடன் உரசிப் பார்க்க வேண்டும்.
٣
அதன் சட்டதிட்டங்களைப் பின்பற்றி, அதன் ஏவல், ஒழுக்க விழுமியங்களுக்குக் கட்டுப்பட்டு, அவற்றை எமது வாழ்க்கை முறையாக ஆக்கிக் கொள்வது எமது கடமையாகும்.

நபி (ஸல்) அவர்களது குணத்தைப் பற்றி அன்னை ஆஇஷா (ரலி) அவர்களிடம் வினவப்பட்ட போது "அல்குர்ஆனாகவே அவரது குணம் இருந்தது". (ஆதாரம் : முஸ்லிம் 746, அஹ்மத் 24601).

இந்நபிமொழியின் அர்த்தம் என்னவெனில் நபியவர்களின் வாழ்க்கை, செயற்பாடுகள் அனைத்தும் அல்குர்ஆனின் சட்டதிட்டங்களை அமுல்படுத்துவதாகவே இருந்தன. அல்குர்ஆனின் நேர்வழியை நபியவர்களே முழுமையாகப் பின்பற்றினார்கள். எம்மில் ஒவ்வொருவருக்கும்அன்னாரே அழகிய முன்மாதிரியாக உள்ளார்கள். அல்லாஹ் கூறுகின்றான் : “அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது”. (அஹ்ஸாப் : 21).

மொழிகளில், சூழல்களில் வேறுபட்டாலும் உலகின் நாலாபாகங்களிலும் அல்குர்ஆனை ஓதவும், மனனமிடவும் இலகுபடுத்திக் கொடுக்கப்பட்டிருப்பதே அல்லாஹ் அதனைப் பாதுகாத்திருப்பதற்குப் பாரிய சாட்சியாகும்.

அல்குர்ஆனின் சிறப்புக்களும் தனித்துவங்களும் :

அல்குர்ஆன் எமது முன்மாதிரி நபி முஹம்மத் ஸல் அவர்களுக்கு இறக்கப்பட்ட அல்லாஹ்வின் வார்த்தைகளாகும். அதனால் விசுவாசி இவ்வேதத்தை மகத்துவப்படுத்தி, அதன் சட்டங்களைக் கடைபிடித்து, அதனை ஓதி, ஆராய முனைகின்றான். இவ்வுலகில் எமக்கு வழிகாட்டியாகவும், எமது மறுமையின் வெற்றிக்கான காரணமாகவும் இக்குர்ஆன் இருப்பதே எமக்குப் போதுமானதாகும். ஏனைய வேதங்களை விட்டும் தனித்து நிற்கும் பல சிறப்புக்களும், தனித்துவங்களும் இக்குர்ஆனுக்கு உண்டு. அவற்றுள் சில :

1. இறைச்சட்டங்களின் சுருக்கத்தை இக்குர்ஆன் உள்ளடக்கியுள்ளது.

முன்னைய வேதங்களில் ஏவப்பட்டுள்ள ஓரிறைக் கொள்கையை உறுதிப்படுத்தவும், உண்மைப்படுத்தவும் இக்குர்ஆன் வந்துள்ளது. அல்லாஹ் கூறுகின்றான் : “மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது”. (மாஇதா : 48). "தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும்" என்பதன் அர்த்தம் அவ்வேதங்களில் உள்ள தகவல்கள், அடிப்படைக் கொள்கைகளுக்கு நேர்பாடாக இருப்பதாகும். "அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது" என்பதன் அர்த்தம் உறுதிப்படுத்தக் கூடியதாகவும், சாட்சியாகவும் உள்ளது என்பதாகும்.

2. அனைத்து இன, மொழியினரும் அதனைக் கடைபிடிப்பது அவசியமாகும்

அல்குர்ஆன் இறங்கியதிலிருந்து எவ்வளவு காலம் கடந்தாலும் இதனை அமுல்படுத்துவது அவசியமாகும். ஆனால் முன்னைய வேதங்கள் குறிப்பிட்ட கலங்களில் வாழ்ந்த குறிப்பிட்ட சமூகத்தினருக்கே அருளப்பட்டன. அல்லாஹ் கூறுகின்றான் :“உங்களையும், (இதை அடைந்தவர்களையும் நான் அச்சமூட்டி எச்சரிப்பதற்காக இந்த குர்ஆன் எனக்கு வஹீயாக அருளப்பட்டுள்ளது”. (அன்ஆம் : 19).

3. அல்கு்ர்ஆனைப் பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுள்ளான்

எனவே இதுவரை எவ்விதத் திரிபுகளும் நிகழவில்லை. இதற்குப் பின்னரும் ஒரு நாளும் நிகழவும் மாட்டாது. அல்லாஹ் கூறுகின்றான் : "நிச்சயமாக நாமே இவ்வேதத்தை இறக்கினோம், இதனைப் பாதுகாப்பதும் நாங்களே" (ஹிஜ்ர் : 9).இதனால் இவ்வேதத்தில் இடம்பெறும் அனைத்துத் தகவல்களும் உண்மையானதே. அவற்றை உண்மைப்படுத்துவது அவசியமாகும்.

வேதங்களை நம்புவதில் பல பயன்கள் உள்ளன . அவற்றுள் சில :

١
அல்லாஹ் தன் அடியார்கள் மீது கொண்டுள்ள அக்கறை மற்றும் பூரண கருணையை அறிந்து கொள்ளல். ஒவ்வொரு சமூகத்திற்கும் வழிகாட்டவும், ஈருலக வெற்றியைப் பெற்றுக் கொடுக்கவும் அவர்களுக்கு வேதங்களை அனுப்பியுள்ளான்.
٢
மார்க்க சட்டங்களில் அல்லாஹ்வின் மதிநுட்பத்தை அறிந்து கொள்ளல். ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்களது இயல்பு, சூழ்நிலைகளுக்கு ஏற்ப சட்டங்களை வகுத்துள்ளான். அல்லாஹ் கூறுகின்றான் : “உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்”. (மாஇதா : 48).
٣
இவ்வேதங்களை இறக்கியதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துதல்.இவ்வேதங்கள் ஈருலகிற்குமான ஒளியாகவும் நேர்வழியாகவும் உள்ளது. அதனால் இப்பாரிய அருட்கொடைக்கு ஒவ்வாருவரும் நன்றி செலுத்துவது கடமையாகின்றது.

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்