கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் இறைத்தூதர்களை நம்புதல்

இறைத்தூதர்களை நம்புவது இறைநம்பிக்கையின் ஆறு தூண்களில் ஒன்றாகும். இறைத்தூதர்களை நம்புவதன் அர்த்தம், அதன் முக்கியத்துவம், அவர்களது பண்புகள், அவர்களுக்கு வழங்கப்பட்ட சில அற்புதங்கள் பற்றி இப்பாடத்தில் கற்போம்.

  • இறைத்தூதர்களை நம்புவதன் அர்த்தத்தை அறிதல்.
  • நபிமார்கள், இறைத்தூதர்களின் பண்புகளை அறிதல்.
  • அவர்களது சில அற்புதங்களை அறிதல்.
  • அவர்களை நம்பிக்கை கொள்வதால் கிடைக்கும் பயன்களை அறிதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

இந்தப் பாடத்தின் மொழிபெயர்ப்பு பின்வரும் மொழிகளில் கிடைக்கிறது:

இறைத்தூதர்களை நம்புவதன் அர்த்தம்

அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி, அவனுக்கு இணைவைக்காமலிருக்கும் ஓரிறைக் கொள்கையின்பால் அழைக்கும் தூதர்களை அல்லாஹ் ஒவ்வொரு சமூகத்திற்கும் அனுப்பியுள்ளான் என உறுதியாக உண்மைப்படுத்தல். அல்லாஹ் கூறுகின்றான் : "அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனல்லாது வணங்கப்படும் தாகூத்களை விட்டு விலகிக் கொள்ளுங்கள்!'' என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம். (நஹ்ல் : 36).

அனைத்து தூதர்களும் உண்மையாளர்கள், உண்மைப்படுத்தப் பட்டவர்கள், இறையச்சமுள்ளவர்கள், நம்பிக்கையாளர்கள், நேர்வழிபெற்றவர்கள், நேர்வழிகாட்டுபவர்கள். அவர்களுக்கு அல்லாஹ் அருளிய அனைத்தையும் மாற்றாமல், மறைக்காமல், தம்மிடமிருந்து எதையும் அதிகரிக்காமல், குறைக்காமல் எத்திவைத்தார்கள், அல்லாஹ் கூறுகின்றான் : “தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர தூதர்கள்மீது வேறெதுவும் உண்டா?” (நஹ்ல் : 35).

இறைத்தூதின் பால் மக்களின் தேவை:

மக்களுக்கு மார்க்க சட்டங்களைத் தெளிவுபடுத்தவும், சரியான, சத்தியத்தின் பக்கம் வழிகாட்டவும் இறைத்தூது அவசியமானதாகும். இறைத்தூதுதான் இவ்வுலகின் உயிர்நாடியாகவும், ஒளியாகும் வாழ்க்கையாகவும் உள்ளது. உயிர்நாடியும், ஒளியும், வாழ்க்கையுமின்ற இவ்வுலகிற்கு ஏது சீர்திருத்தம்?

இதனால்தான் அல்லாஹ் தனது தூதுக்கு உயிர் எனப் பெயரிட்டுள்ளான். உயிரில்லையெனில் வாழ்வே இல்லை. அல்லாஹ் கூறுகின்றான் : "மேலும் இவ்வாறே நமது கட்டளையில் உயிரான குர்ஆனாகிய இதை உமக்கு வஹியாக அறிவித்தோம். வேதம் என்றால் என்ன? ஈமான் என்றால் என்ன? என்பதை நபியே நீர் அறிந்தவராக இருக்கவில்லை. எனினும் நாம் அதனைப் பிரகாசமானதாக ஆக்கி, நமது அடியார்களில் நாம் நாடுவோரை அதன் மூலம் நேர்வழியில் செலுத்துகிறோம்". (ஷூரா : 52). அதாவது பகுத்தறிவு நலவு, கெடுதிகளைப் பொதுவாக அறிந்திருந்தாலும் அவற்றை விரிவாகவும், அவற்றின் உட்பிரிவுகளையும் அதனால் அறிய முடியாது. வணக்கங்களை நிறைவேற்றும் முறைகளை வஹி, இறைத்தூதின்றி அறிய முடியாது.

ஈருலக வெற்றி, மகிழ்ச்சிக்குரிய வழி இறைத்தூதர்களின் கரங்களிலேயே உள்ளது. நலவு, கெடுதிகளை நுணுக்கமாக அறிவதும் அவர்கள் மூலமாகவே முடியும். இறைத்தூதைப் புறக்கணித்தவர் அவரது புறக்கணிப்பிற்கேற்ப தடுமாற்றமும், கவலையும், துர்ப்பாக்கியமும் ஏற்படுகின்றது. அல்லாஹ் கூறுகின்றான் : (பின்பு, நாம் சொன்னோம் “நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.” அன்றி யார் (இதை ஏற்க) மறுத்து, நம் அத்தாட்சிகளை பொய்ப்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரக வாசிகள்; அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் தங்கி இருப்பர். (பகரா : 38, 39).

ஈமானின் தூண்களில் ஒன்று :

இறைத்தூதர்களை நம்பிக்கை கொள்வது ஈமானின் ஆறு தூண்களில் ஒன்றாகும். அல்லாஹ் கூறுகின்றான் : “(இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். அவனுடைய தூதர்களுக்கிடையே நாம் வேறுபடுத்த மாட்டோம்” (பகரா : 285). வேறுபாடின்றி அனைத்து தூதர்களையும் நம்புவது அவசியமென்பதை இவ்வசனம் அறிவிக்கின்றது. யூத, கிறிஸ்தவர்களைப் போன்று சில தூதர்களை ஏற்று, சிலரை மறுக்க மாட்டோம்.

நபி (ஸல்) அவர்கள் இறைநம்பிக்கையைப் பற்றி : “நீர் அல்லாஹ்வையும், அவனது வானவர்கள், வேதங்கள், தூதர்கள், மறுமை நாளையும், விதியையும் நம்புவதாகும் என்றார்கள்”. (முஸ்லிம் : 08).

இறைத்தூதர்களின் அத்தாட்சிகளும், இறைஅற்புதங்களும்

இறைத்தூதர்களின் உண்மையையும் நபித்துவத்தையும் பறைசாற்றும் பல அத்தாட்சிகளையும் ஆதாரங்களையும் கொடுத்து அவர்களை அல்லாஹ் பலப்படுத்தினான். உண்மையையும் நபித்துவத்தையும் உறுதிப்படுத்த வழங்கப்பட்ட மனித சக்திக்கு அப்பாற்பட்ட வெளிப்படையான அத்தாட்சிகள், அற்புதங்களும் அவற்றிலுள்ளதாகும். இறைஅற்புதம் என்பது மனிதர்களால் அதைப் போன்று கொண்டுவர முடியாத விதத்தில் அல்லாஹ் தனது தூதர்களுக்கு வெளிப்படுத்தும் வழமைக்கு மாறான நிகழ்வுகளாகும்.

நபிமார்களுக்கு வழங்கப்பட்ட சில இறைஅற்புதங்கள்

١
மூஸா (அலை) அவர்களின் தடி ஒரு பாம்பாக உருவெடுத்தல் .
٢
ஈஸா (அலை) தமது சமூகத்தினர் தத்தமது வீடுகளில் உண்பவற்றையும், சேமித்து வைப்பவற்றையும் அவர்களுக்குக் கூறுதல் .
٣
எமது நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்காக சந்திரன் இரண்டாகப் பிளத்தல் .

தூதர்களை நம்புவதன் உள்ளடக்கம் எவை?

1. அவர்களுடைய தூதுத்துதவம் அல்லாஹ்விடமிருந்து வந்த சத்தியமாகும் என நம்புதல். மேலும் அனைத்து இறைத்தூதுகளும் ஓரிறைக் கொள்கையின்பால் அழைப்பதில் ஏகோபித்துள்ளன.

அல்லாஹ் கூறுகின்றான் : "அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனல்லாது வணங்கப்படும் தாகூத்களை விட்டு விலகிக் கொள்ளுங்கள்!'' என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம். (நஹ்ல் : 36).

ஒவ்வொரு சமூகத்திற்கும் பொருந்தும் வகையில் ஹராம், ஹலால் போன்ற துணைச் சட்டங்களில் நபிமார்களின் மார்க்கங்கள் சிலவேளை வேறுபடலாம்.

அனைத்து நபிமார்கள், தூதர்களையும் நம்புதல். முஹம்மத், இப்ராஹீம், மூஸா, ஈஸா, நூஹ் (அலைஹிமுஸ்ஸலாம்) போன்ற அல்லாஹ் பெயர் குறிப்பிட்டுக் கூறியோரை அப்பெயர்களுடனேயே நாம் நம்ப வேண்டும். ஏனையோரைப் பொதுவாக நம்ப வேண்டும். அவர்களில் ஒருவருடைய இறைத்தூதை மறுத்தாலும் அனைவரையும் மறுத்தவாரகி விடுவான்.

அல்குர்ஆன், மற்றும் ஆதாரபூர்வமான நபிமொழிகளில் உள்ள அத்தூதர்களுடைய செய்திகள், அற்புதங்களை உண்மைப்படுத்துதல். உதாரணமாக நபி மூஸாவிற்காக கடல் பல பாதைகளாகப் பிரிந்ததைக் கூறலாம்.

4. எமக்கு அனுப்பப்பட்ட தூதருடைய மார்க்கத்தை நடைமுறைப்படுத்துதல். அத்தூதர்தான் நபிமார்களில் சிறந்தவரும், இறுதியானவருமான முஹம்மத் (ஸல்) அவர்களாவர்.

இறைத்தூதர்களின் பண்புகள் சில :

1. அவர்கள் மனிதர்களாவர்

அவர்களுக்கும் ஏனையோருக்கும் இடையிலான வேறுபாடு அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து இறைச் செய்தி வருவதே. அவன் கூறுகின்றான் : "உமக்கு முன்னால் நாம் ஆண்களையே தூதர்களாக அனுப்பி, அவர்களுக்கு நாம் வஹியும் அறிவித்தோம்". (அன்பியா : 7). அல்லாஹ்வின் பரிபாலனத்தன்மை, இறைத்தன்மை ஏதும் அவர்களுக்கில்லை. எனினும் அவர்கள் தோற்றத்தில் முழுமையடைந்த, பண்பாட்டில் உச்சத்தைத் தொட்ட மனிதப் புனிதர்களாகும். அத்துடன் மக்களில் அதி சிறந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகும். இறைத்தூதின் சிரமங்களை சுமந்து, நபித்துவப் பணிகளை மேற்கொள்ளுமளவு புத்திக்கூர்மையும் நாவன்மையும் அவர்களுக்கு உள்ளன. இறைத்தூதர்களை அல்லாஹ் மனிதர்களில் இருந்து தெரிவு செய்யக் காரணம் அவர்கள் தமது இனத்தவர்களுக்கே முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். அப்போது இறைத்தூதரைப் பின்பற்றுவது அம்மக்களது சக்திக்குட்பட்டதாக, முடியுமானதாக ஆகின்றது.

2. இறைத்தூதின் மூலம் அல்லாஹ் அவர்களை சிறப்புறச் செய்துள்ளான்.

அனைத்து மக்களிலும் அல்லாஹ் இவர்களை இறைச்செய்தியின் மூலம் சிறப்புறச் செய்துள்ளான். அல்லாஹ் கூறுகின்றான் : "நான் உங்களைப் போன்ற மனிதன்தான். (உண்மையாக) வணங்கப்படத் தகுதியான உங்கள் இறைவன் ஒருவனே என்று எனக்கு (வஹீ) அறிவிக்கப்படுகிறது". (கஹ்ப் : 110). நபித்துவம் என்பது வெறும் ஆன்மீக அமைதியாலோ, புத்திக்கூர்மை தர்க்கவியல் ஆற்றலாலோ முயற்சித்துப் பெறப்படக்கூடியதல்ல. மாறாக அது அல்லாஹ்வின் தெரிவாகும். பல மக்களுக்கு மத்தியில் அல்லாஹ் தூர்களைத் தெரிவு செய்துள்ளான். அவன் கூறுகின்றான் : "தனது தூதை எங்கு வைக்க வேண்டுமென்பதை அல்லாஹ் மிக அறிந்தவன்". (அன்ஆம் : 124).

3. அவர்கள் தவறுகளிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள்

அல்லாஹ்விடமிருந்து அவர்கள் எத்திவைக்கும் செய்திகளில் தவறிழைக்கமாட்டார்கள். அதிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளார்கள். மேலும் அல்லாஹ்வின் வஹீயை அமுல்படுத்துவதிலும் அவர்கள் தவறிழைக்க மாட்டார்கள்.

4. உண்மை

இறைத்தூதர்கள் தமது சொல், செயல்களில் உண்மையாளர்களாகும். அல்லாஹ் கூறுகிறான் : "இதுதான் அளவற்ற அருளாளன் அளித்த வாக்குறுதியாகும். அதில் இறைத்தூதர்கள் உண்மையே உரைத்துள்ளார்கள்". (யாஸீன் : 52).

5. பொறுமை

அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தின் பால் நற்செய்தி கூறியும், எச்சரிக்கை செய்தும் அழைப்பு விடுத்தார்கள். அப்போது அவர்களுக்கு பல வகையான நோவினைகளும் சிரமங்களும் ஏற்பட்டன. அல்லாஹ்வின் வார்த்தை உயர வேண்டுமென்பதற்காக அவர்கள் பொறுமையுடன் அவற்றை சகித்துக் கொண்டார்கள். அல்லாஹ் கூறுகின்றான் : " (நபியே!) தூதர்களில் உறுதிமிக்கவர்கள் பொறுமை காத்தது போன்று நீரும் பொறுமை காப்பீராக!. (அஹ்காப் : 35).

இறைத்தூதர்களை நம்பிக்கை கொள்வதால் ஏற்படும் பயன்கள் :

١
அல்லாஹ் தன் அடியார்கள் மீது கொண்டுள்ள அக்கறை மற்றும் பூரண கருணையை அறிந்து கொள்ளல். ஒவ்வொரு சமூகத்திற்கும் வழிகாட்ட அவர்களுக்கு தூதர்களை அனுப்பியுள்ளான். அல்லாஹ்வை எவ்வாறு வணங்க வேண்டுமென அவர்களுக்குத் தெளிவுபடுத்தினார்கள். ஏனெனில் மனித அறிவால் மாத்திரம் அதை அறிய முடியாது. அல்லாஹ் கூறுகின்றான் : "(நபியே!) அகிலத்தாருக்கு அருட்கொடையாகவே அன்றி உம்மை நாம் அனுப்பவில்லை". (அன்பியா : 107).
٢
இப்பாரிய அருட்கொடைக்காக அந்த இறைவனுக்கு நன்று செலுத்துதல்.
٣
இறைத்தூதர்களை நேசித்து, மகத்துவப்படுத்தி, அவர்களது தகுதிகளுக்கேற்றவாறு அவர்களைப் புகழ்தல். ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வை வணங்கி, அவனது தூதை எத்திவைத்து அவனது அடியார்களுக்கு நலவு நாடியுள்ளனர்.
٤
அல்லாஹ்விடமிருந்து அத்தூதர்கள் கொண்டு வந்த தூதைப் பின்பற்றுதல். அதுதான் அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி அதன் படி செயற்படுதல். எனவே விசுவாசிகளுடைய வாழ்வில் நேர்வழியும், நலவும் கிடைத்து, ஈருலக வெற்றியும் அவர்களுக்குக் கிடைக்கின்றது.

அல்லாஹ் கூறுகின்றான் : "என்னுடைய நேர்வழியை எவர் பின்பற்றுகிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார், துர்ப்பாக்கியமுடையவனாகவும் மாட்டார். எவன் எனது உபதேசத்தைப் புறக்கணிக்கின்றானோ நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு". (தாஹா : 123, 124) .

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்