தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமைகள்
இஸ்லாம் பெற்றோருக்கு அதிக கண்ணியமளித்துள்ளது. இஸ்லாத்தில் மிக முக்கிய ஏவலான அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதுடன் பெற்றோருக்கு உபகாரம் புரிவதை இணைத்துள்ளது, அல்லாஹ் கூறுகின்றான் : "அவனையன்றி நீங்கள் வேறு யாரையும் வணங்கக் கூடாதென்றும், பெற்றோருக்கு உபகாரம் புரியுமாறும் உமது இரட்சகன் உமக்குக் கட்டளையிட்டுள்ளான்". (இஸ்ரா : 23). ஏனெனில் அல்லாஹ்விற்கு அடுத்து பிள்ளைகளின் இருப்பிற்கு அவ்விருவருமே காரணமாகும். தமது பிள்ளைகளின் ஆறுதலுக்காகவும், அவர்களைப் பராமரித்து, கவனித்துக் கொள்ளவும் பெற்றோர்கள் எதிர்கொண்ட சிரமம், கஷ்டம், நோவினை, விழித்திருத்தல், குறைவான ஓய்வு, நிம்மதியின்மை போன்றவற்றுக்கு எந்தப் பிள்ளையாலும் பிரதி செய்யவோ, வெகுமதியளிக்கவோ முடியாது.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்காக செய்த, மற்றும் செய்து கொண்டிருக்கும் நல்ல முயற்சிகளுக்கு வெகுமதியாக அப்பிள்ளைகள் இவர்களுக்கு நிறைவேற்ற வேண்டிய சில கடமைகளை விதித்துள்ளது அல்லாஹ்வின் நீதத்திலுள்ளதாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "தன் தாய் தந்தையருக்கு நன்மை செய்யும் படியாக நாம் மனிதனுக்கு வஸிய்யத்து செய்திருக்கிறோம்". (அன்கபூத் : 8). மேலும் கூறுகின்றான் : "இவ்வுலகில் அவர்களுடன் நல்ல முறையின் சேர்ந்திருங்கள்". (லுக்மான் : 15). நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்'' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்'' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். 'உன் தாய்'' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'பிறகு, உன் தந்தை'' என்றார்கள். (புஹாரி 5971, முஸ்லிம் 2548).
பெற்றோருக்கு உபகாரம் புரிவதன் சிறப்பு
பெற்றோருக்கு உபகாரம் புரிவது பிள்ளைகள் மீதான கட்டாயக் கடமையாகும். அதிலே பாரிய, மகத்தான கூலிகளுண்டு. பெற்றோருக்கு உபகாரம் புரிவதில்தான் ஈருலகிலும் பல நன்மைகள் உண்டு, வாழ்வு வளமாகவும், வாழ்வாதாரம் பெருகவும், சுவனம் நுழையவும் அல்லாஹ்வின் அனுமதியின் பிரகாரம் அதுவே காரணமாகும். நபி (ஸல்) அவர்கள், "மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்" என்று கூறினார்கள். "யார் (மூக்கு), அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், "தம் பெற்றோரில் ஒருவரையோ அல்லது அவர்கள் இருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் ஊழியம் செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவரின் (மூக்குத் தான்)" என்று பதிலளித்தார்கள். (முஸ்லிம் 2551).
பெற்றோருக்கு உபகாரம் புரிவது மிகச் சிறந்த அமல்களில் ஒன்றாகவும், அல்லாஹ்வுக்கு மிக விருப்பத்திற்குரியதாகவும் உள்ளது. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறுகின்றார் : "நான் நபி (ஸல்) அவர்களிடம், "(நற்)செயல்களில் சிறந்தது எது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது" என்று பதிலளித்தார்கள். நான் "பிறகு எது?" என்று கேட்டேன். "தாய் தந்தையருக்கு நன்மை புரிவது" என்றார்கள். நான், "பிறகு எது?" என்று கேட்டேன். அதற்கு "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது" என்றார்கள்". (புஹாரி 527, முஸ்லிம் 85).
எனவே பெற்றோருக்கு உபகாரம் புரிவது ஸுன்னத்தான அறப்போரை விட சிறந்தது, ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், 'நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உனக்குத் தாய் தந்தை இருக்கின்றனரா?' என்று கேட்டார்கள். அவர், 'ஆம் (இருக்கிறார்கள்)'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், '(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு'' என்றார்கள். (புஹாரி 5972, முஸ்லிம் 2549).
பெற்றோரைத் துன்புறுத்துதல்
பெற்றோரைத் துன்புறுத்துதல் மிகப் பெரும் பாவங்களில் உள்ளதாகும். நபி (ஸல்) அவர்கள், "மிகப்பெரிய பாவம் அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோரைத் துன்புறுத்துவதும்.." என்று கூறினார்கள். (புஹாரி 6919, முஸ்லிம் 87).