தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் ஸகாத் விதியாகும் பொருட்கள்
ஸகாத் விதியாகும் பொருட்கள் எவை?
ஒரு முஸ்லிம் தனது சுய பாவணைக்காக வைத்திருக்கும் பொருட்களில் ஸகாத் விதியாக மாட்டாது. உதாரணமாக தான் வசிக்கும் வீடு, பயன் படுத்தும் வாகனம் இவை இரண்டும் எவ்வளவு பெறுமதிமிக்கதாக இருந்தாலும் சரியே, அதேபோன்றுதான் தனது ஆடைகள், உணவு, பானங்களிலும் ஸகாத் விதியாக மாட்டாது.
தேவைக்குப் பயன்படும் பொருட்களல்லாமல் வளர்சிக்காகவும், அதிகரிப்புக்காகவும் இயல்பாக வைக்கப்பட்டுள்ள பொருட்கள் சிலவற்றில் அல்லாஹ் ஸகாதை விதியாக்கியுள்ளான். அவை வருமாறு :
ஒரு சொத்து மார்க்கத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவை அடைந்து அதற்கு சந்திரக் கணிப்பீட்டின் படி ஒரு வருடம் பூர்த்தியாகினால் மாத்திரமே அதில் ஸகாத் விதியாகும். அதன் காலம் 354 நாட்களாகும்.
தங்கம், வெள்ளியில் ஸகாத் விதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவு :
ஒரு முஸ்லிமிடம் இந்தளவு தங்கம் அல்லது வெள்ளி இருந்து அதற்கு ஒரு வருடம் பூர்த்தியானால் அதிலிருந்து 2.5 % வீதம் ஸகாதாக வழங்க வேண்டும்.
இதில் அனைத்து வித நாணயக வகைகளும் அடங்கும். அவை கையிருப்பில் இருந்தாலும், வங்கிகளில் வைப்பிலடப்பட்டிருந்தாலும் சரி.
நாணயங்களை தங்கத்தின் பெறுமதிக்கு மதிப்பிட்டு, ஸகாத் விதியாக நிர்ணயிக்கப்பட்ட அளவான சுமார் 85 கிராம் அல்லது அதற்கு மேல் இருந்து, அவருடைய உடமையாகவே ஒரு வருடம் பூரணமானால் அதிலிருந்து 2.5 % வீதம் ஸகாதாக வழங்க வேண்டும்.
நாணயத்தில் ஸகாத் விதியாகும் அளவைக் கணிப்பதற்கான ஓர் உதாரணம்
தங்கத்தின் விலை மாறுபடக்கூடியது. ஸகாத் விதியாகும் போது தங்கம் ஒரு கிராமின் விலை 25 டொலர்கள் என நீம் வைத்துக் கொண்டால் 25 (தங்கம் ஒரு கிராமின் அன்னளவான விலை) × 85 (தங்கத்தின் நிறையளவு, அது மாறுபடமாட்டாது) = 2125 டொலர்கள். இதுதான் நாணயத்தில் ஸகாத் விதியாக இருக்க வேண்டிய அளவாகும். (25 × 85 = 2125).
இதன் மூலம் நாடப்படுவது வர்த்தகத்திற்காக தயாரிக்கப்பட்ட அனைத்து கட்டிடங்கள், அங்காடிகள் போன்ற சொத்துக்கள், அல்லது உணவு, நுகர்வோர் பொருட்கள் போன்றனவாகும்.
வியாபாரப் பொருட்களுக்கு ஸகாத் வழங்கும் முறை
வியாபாரத்திற்காத் தயாரித்த அனைத்து பொருட்களையும் ஒரு வருடம் தண்டும் போது கணக்கிட வேண்டும். ஸகாத் கொடுக்கும் போது அப்பொருட்களுக்குள்ள சந்தை விலையை வைத்தே மதிப்பீடு அமைய வேண்டும். அதன் பெறுமதி நிர்ணயிக்கப்பட்ட அளவை அடைந்தால் அதிலிருந்து 2.5 % வீதம் கொடுக்க வேண்டும்.
அல்லாஹ் கூறுகின்றான் : “நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்”. (பகரா : 267).
விளைச்சல்களில் குறிப்பிட்ட வகையில் மாத்திரம் தான் ஸகாத் விதியாகும். அனைத்திலுமல்ல. அதுவும் மார்க்கம் நிர்ணயம் செய்துள்ள அளவை அடைந்தால் தான்.
மக்களின் நிலமைகளைக் கருத்திற் கொண்டு மழை,ஆற்றுநீர் போன்றவற்றின் மூலம் நீர்பாய்ச்சுவதற்கும் செலவு செய்து நீர்பாய்ச்சுவதற்கும் இடையில் கடமையாகும் அளவில் வேறுபாடு ஏற்படும்.
பயிர்கள், பழங்களில் ஸகாத் விதியாவதற்கான நிபந்தனைகள்
1. விளைச்சல் நிர்ணயிக்கப்பட்ட அளவை அடைந்திருத்தல்.
நபி (ஸல்) அவர்கள் இதில் ஸகாத் விதியாக இருக்க வேண்டிய நிர்ணயிக்கப்பட்ட அளவை வரையறுத்துக் கூறியுள்ளார்கள். அதனை விடக் குறைந்தால் ஸகாத் விதியாக மாட்டாது. அன்னார் கூறினார்கள் : "ஐந்து வஸக்குகளுக்கு குறைந்ததில் ஸகாத் இல்லை". (புஹாரி 1447, முஸ்லிம் 979). "வஸக்" என்பது அரபுகளிடத்தில் இருந்த அளவை முறையாகும். எனினும் அதனை கோதுமை, அரிசி போன்றவற்றால் நிறுவையில் சுமார் 580 - 600 கிலோ கிராம் அளவிற்கு மதிப்பிடலாம். அதனை விடக் குறைவாக அறுவடை இருந்தால் ஸகாத் விதியாக மாட்டாது.
2. அந்த விளைச்சல்கள் ஸகாத் விதியாகும் வகையைச் சார்ந்ததாக இருத்தல் வேண்டும்.
கோதுமை, பார்லி, திராட்சை, பேரீச்சம், அரிசி மற்றும் சோளம் போன்ற பழுதடையாமல் சேமித்து, களஞ்சியப்படுத்த முடியுமான விவசாய பயிர்களிலேயே ஸகாத் விதியாகும். தர்பூசணி, மாதுளை, கீரை மற்றும் உருளைக்கிழங்கு போன்ற சேமிக்க முடியாத பழங்கள், கீரை வகைகளில் ஸகாத் விதியாக மாட்டாது.
3. அறுவடை பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
அறுவடை செய்யப்பட்ட பயிர்கள் , பறிக்கப்பட்ட கனிகளில்தான் ஸகாத் விதியாகும். வருடம் பூர்த்தியாவதற்கு இதில் தொடர்பு கிடையாது. வருடத்தில் இரு தடவைகள் அறுவடை நடைபெறுமென்றால் ஒவ்வொரு அறுவடையின் போதும் ஸகாத் விதியாகின்றது. ஒரு தடவை ஸகாத் வழங்கிவிட்டு பின்னர் எஞ்சியதை வருடக்கணக்கில் களஞ்சியப் படுத்தி வைத்தாலும் அவ்வருடங்களுக்காக ஸகாத் இல்லை.
மனிதன் பயனடையும் ஒட்டகம், மாடு, ஆடு போன்றனவே இந்தக் கால்நடைகள் மூலம் நாடப்படுகின்றன.
இக்கால்நடைகளை தனது அடியார்களுக்காகப் படைத்ததை அல்லாஹ் ஓர் அருட்கொடையாகக் கூறிக்காட்டுகின்றான். மக்கள் அதன் மாமிசங்களைப் புசிப்பதற்காகவும், அதன் தோல்களால் ஆடைகள் செய்து அணியவும், பயணங்களின் போது அவர்களையும், அவர்களது பொதிகளையும் சுமப்பதற்காகவும் இவற்றைப் படைத்ததாகக் கூறுகின்றான். அல்லாஹ் கூறுகின்றான் : “கால் நடைகளையும் அவனே படைத்தான்; அவற்றில் உங்களுக்குக் கத கதப்பு(ள்ள ஆடையனிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன; அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கிறீர்கள். அவற்றை நீங்கள் மாலை நேரத்தில் (வீட்டுக்குத்) திரும்பி ஓட்டி வரும் போதும், காலை நேரத்தில் (மேய்ச்சலுக்காக) அவிழ்த்துவிடும் போதும், அவற்றில் உங்களுக்கு(ப் பொலிவும்) அழகுமிருக்கிறது. மேலும், மிக்க கஷ்டத்துடனன்றி நீங்கள் சென்றடைய முடியாத ஊர்களுக்கு அவை உங்களுடைய சுமைகளைச் சுமந்து செல்கின்றன - நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக இரக்கமுடையவன்; அன்பு மிக்கவன்”. (நஹ்ல் : 5-7).