தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் ஈதுல் பித்ர் மற்றும் ஈதுல் அழ்ஹா பெருநாள் தினங்கள்.
ஈதுல் பித்ர்
இது பத்தாவது மாதமாகிய ஷவ்வால் மாதத்தின் முதலாம் நாளாகும். ரமழான் மாதம் நிறைவடைந்தவுடன் இது வருகின்றது. இதனால் இதற்கு ஈதுல் பித்ர் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதாவது ரமழான் மாதத்தில் மக்கள் நோன்பு நோற்று அல்லாஹ்வை வணங்கியது போல் இத்தினத்தில் நோன்பை விட்டு அவனை வணங்குகின்றார்கள். புனித ரமழானில் நோன்பைப் பூரணமாக நோற்க இலகுபடுத்திக் கொடுத்து அருள்புரிந்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் இப்பெருநாளைக் கொண்டாடுகின்றார்கள். அல்லாஹ் கூறுகின்றான் : “குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்)”. (பகரா : 185).
ஈதுல் பித்ர் தினத்தில் என்ன செய்ய வேண்டும்?
பெருநாள் தினத்தில் உணவுத் தேவையுடையோர் யாரும் இருக்கக் கூடாதென்பதற்காக அத்தினத்திற்கான செலவு போக மேலதிகமான வசதியிருக்கும் அனைவரும் அரிசி, கோதுமை, பேரீத்தம் போன்ற ஊரின் பிரதான உணவிலிருந்து ஒரு ஸாவு அளவு முஸ்லிம்களிலுள்ள ஏழை, வறியவர்களுக்குக் கொடுக்க வேண்டுமென அல்லாஹ் கடமையாக்கியுள்ளான்.
ரமழான் இறுதி நாள் சூரியன் மறைந்ததிலிருந்து பெருநாள் தொழுகை வரை. அதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னரும் கொடுக்கலாம்.
அரிசி, கோதுமை, பேரீத்தம் போன்ற ஊரின் பிரதான உணவிலிருந்து ஒரு ஸாவு கொடுக்க வேண்டும். ஸாவு என்பது முகத்தல் அளவை. எனினும் அதனை நிறுவை மூலம் மதிப்பிடுவது நவீன அளவை முறைகளில் சரிசெய்ய இலகுவாக இருக்கும். நிறுவையில் அதன் அளவு சுமார் 3 கிலோ கிராம் ஆகும்.
பெருநாள் தினத்தில் தனக்கும் மனைவி, பிள்ளைகள் போன்ற தனது செலவுக்குக் கீழ் இருப்போருக்கும் அத்தினத்திற்கான செலவு போக மேலதிகமான வசதியிருக்கும் அனைவரும் இதனைக் கொடுக்க வேண்டும். தாயின் வயிற்றிலிருக்கும் சிசுவுக்காகவும் கொடுப்பது விரும்பத்தக்கது. ஒவ்வொருவருக்காகவும் ஊரிலுள்ள பிரதான உணவிலிருந்து சுமார் 3 கிலோ கிராம் கொடுக்க வேண்டும்.
ஸகாதுல் பித்ர் வழங்குவதன் உள்நோக்கு
நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தர்மத்தைக் கடமையாக்கி, ''நோன்பாளிகளின் வீண் மற்றும் ஆபாசப் பேச்சுகளைத் தூய்மைப்படுத்தும் முகமாகவும் (அதாவது தவறுகளைத் தூய்மைப்படுத்தி, குறைகளை நிவர்த்தி செய்யவும்), ஏழைகளின் உணவாகவும் (பெருநாள் தர்மம்) உள்ளது. எவர் அதைத் தொழுகைக்கு முன்பே செலுத்துகிறாரோ, அது ஏற்றுக் கொள்ளப்பட்ட தர்மமாகும். எவர் அதைத் தொழுகைக்குப் பின்பு செலுத்துகிறாரோ, அது தர்மங்களில் ஒரு தர்மமாகும்'' (அபூதாவூத் 1609).
இது முஸ்லிம்களின் இரண்டாவது பெருநாள் தினமாகும். இது துல் ஹஜ் மாதத்தின் இஸ்லாமிய நாட்காட்டியில் பன்னிரண்டாவது மாதம் பத்தாவது தினத்தில் வருகின்றது. இத்தினத்தில் பல சிறப்புக்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில :
1. இது வருடத்தின் சிறந்த தினங்களுள் ஒன்று.
வருடத்தின் மிகச்சிறந்த நாட்கள் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து தினங்களாகும். நபி ஸல் அவர்கள் கூறினார்கள் : “இந்த துல்ஹஜ் மாதத்தில் முதல் பத்து நாட்களில் செய்யும் அமல்களை நேசிப்பது போல் அல்லாஹ் வேறு எந்த அமல்களையும் நேசிப்பது கிடையாது என்று கூறியவுடன் அங்கிருந்த தோழர்கள், யா ரஸூல்லல்லாஹ்! ஜிஹாத் செய்வதை விடவும் அதை அல்லாஹ் நேசிக்கின்றானா? என்று கேட்டபோது, ஆம், என்று கூறி விட்டு என்றாலும் ஜிஹாதில் தனது உயிரையும், தனது பொருளையும் அல்லாஹ்வுக்காக அர்ப்பணித்தவர்களைத் தவிர என்று கூறினார்கள். (புஹாரி-969, திர்மிதி-757)
கஃபாவை வலம் வருதல், பிராணிகளை அறுத்துப் பலியிடல், கல்லெறிதல் போன்ற ஹஜ் வணக்கத்தின் பிரதான செயற்பாடுகள் அன்றைய தினத்தில் தான் நடைபெறுகின்றன.
ஈதுல் அழ்ஹா தினத்தில் என்ன செய்ய வேண்டும்?
ஈதுல் அழ்ஹா தினத்தில் ஹஜ் செய்யாத அனைவருக்கும் ஈதுல் பித்ரில் செய்யும் அனைத்தும் செய்வது ஸுன்னத்தாகும். ஆனால் ஸகாதுல் பித்ர் மாத்திரம் ஈதுல் பித்ருக்குக் குறிப்பானதாகும். ஈதுல் அழ்ஹாவில் அல்லாஹ்வை நெருங்குவதற்காக உழ்ஹிய்யா எனும் ஸுன்னத்தான வணக்கம் குறிப்பாக்கப்பட்டுள்ளது.
ஈதுல் அழ்ஹா பெருநாள் தொழுகை முதல் துல்ஹஜ் மாதம் பதின்மூன்றாம் நாள் மஃரிப் வரையிலான காலப்பகுதியில் அல்லாஹ்வை நெருங்கும் முகமாக ஆடு, மாடு, ஒட்டகைகளை அறுத்துப் பலியிடுவதே உழ்ஹிய்யா (குர்பானி) எனும் வணக்கமாகும். அல்லாஹ் கூறுகின்றான் “எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, அவனுக்காக அறுத்துப் பலியிடுவீராக”. (கவ்ஸர் : 02). இது பெருநாள் தொழுகையும், உழ்ஹிய்யாவும் தான் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
உழ்ஹிய்யாவின் சட்டம்
வசதி பெற்றவர்களுக்கு இது வலியுறுத்தப்பட்ட ஸுன்னாவாகும். ஒரு முஸ்லிம் தனக்காகவும், தனது குடும்பத்தினருக்காகவும் உழ்ஹிய்யாக் கொடுக்க வேண்டும்.
குர்பானி கொடுக்க விரும்புவர் துல்ஹஜ் பிறை கண்ட முதல் நாளிலிருந்து குர்பானி கொடுக்கும் வரை தலைமுடி, நகங்களை எடுக்கக்கூடாது.
பலி கொடுக்கும் பிராணிக்குரிய நிபந்தனைகள்
அவை ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியனவே. ஏனைய பிராணிகள், பறவைகள் உழ்ஹிய்யாவில் செல்லுபடியாக மாட்டாது. ஓர் ஆடு ஒரு குடும்பத் தலைவர், மற்றும் அவருடைய குடும்ப அங்கத்தினர்களுக்குப் போதுமானது. ஒரு மாட்டில், அல்லது ஓர் ஒட்டகத்தில் ஏழு நபர்கள் பங்கெடுக்கலாம்.
குறிப்பிட்ட வயதை அடைந்திருக்க வேண்டும்
செம்மறி ஆட்டில் ஆறு மாதங்கள், சாதாரண ஆட்டில் ஒரு வருடம், மாட்டில் இரு வருடங்கள், ஒட்டகத்தில் ஐந்து வருடங்கள் பூர்த்தியான பிராணியையே பலியிட முடியும்.
வெளிப்படையான குறைகளற்றதாக அப்பிராணிகள் இருக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “நான்கு பிராணிகளை குர்பானிக்காக அறுப்பது கூடாது. அவையாவன: நன்கு தெரியும் படியாக கண் பொட்டையான பிராணி, வெளிப்படையாகத் தெரியும்படியாக நோயுற்றிருக்கும் பிராணி, ஊனம் வெளிப்படையாகத் தெரியுமளவிற்குள்ள நொண்டியான பிராணி, எலும்பு மஜ்ஜை பலவீனமான நன்கு மெலிந்த பிராணி”. (திர்மிதி 1497, நஸாஈ 4371)