தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் குளிர்காலத்தில் அதிகம் காணப்படும் பொதுச் சட்டங்கள்
குளிர்காலத்தில் பெரும்பாலும் மூட்டப்படும் தீயைத் தூங்க முன்னர் அணைப்பது அவசியமாகும். அதேபோன்றுதான் பற்றியெரிய வாய்ப்புள்ள சூடாக்கிகளையும் அணைக்க வேண்டும். அபூ மூஸா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : "மதீனாவில் இரவு நேரத்தில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் வீட்டுக்காரர்களும் இருந்தனர். அவர்களின் நிலை குறித்து நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது ''நிச்சயமாக இந்த நெருப்பு உங்களுக்கு ஆபத்தானது ஆகும். எனவே, நீங்கள் உறங்கச் செல்லும்போது நெருப்பை அணைத்து விடுங்கள்'' என்றார்கள். (புஹாரி 6294, முஸ்லிம் 2016). மற்றுமொரு நபிமொழியில் : "நீங்கள் உறங்கும் போது உங்களது வீடுகளில் நெருப்பை விட்டு வைக்க வேண்டாம்" என இடம்பெற்றுள்ளது. (6293, முஸ்லிம் 2015).
சூடாகவும், குளிராகவும், தென்றலாகவும், சூறாவளியாகவும், வடக்காகவும், தெற்காகவும், மழையுடன் கலந்தும், வெறும் காற்றாகவும் பல முறைகளில் மாறி, மாறி வீசச் செய்யும் அல்லாஹ்வின் வல்லமையை நினைவுகூர்தல் வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான் : "காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன". (பகரா : 164).
அக்காற்று அல்லாஹ்வின் தண்டனையாக இருக்கலாமோ என அச்சப்பட வேண்டும். நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆஇஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள், ஒரேயடியாகத் தமது உள்நாக்குத் தெரியும் அளவுக்குச் சிரித்ததை ஒருபோதும் நான் கண்டதில்லை. அவர்கள் (பெரும்பாலும்) புன்னகைப்பவர்களாகவே இருந்தார்கள். மேகத்தையோ அல்லது (சூறாவளிக்) காற்றையோ கண்டால், நபி (ஸல்) அவர்களது முகத்தில் (ஒரு விதமான கலக்கம்) தென்படும். (ஒரு நாள்) நான், "அல்லாஹ்வின் தூதரே! மக்கள் மேகத்தைக் காணும்போது அது மழை மேகமாக இருக்கலாம் என்றெண்ணி மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால், தாங்கள் மேகத்தைக் காணும்போது ஒரு விதமான கலக்கம் தங்களது முகத்தில் தென்படக் காண்கிறேனே (ஏன்)?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆஇஷா, அதில் (இறைவனின்) வேதனை இருக்கலாம் என்பதால், என்னால் கலக்கமடையாமல் இருக்க இயலவில்லை. ("ஆத்" எனும்) ஒரு சமூகத்தார் (சூறாவளிக்) காற்றால் வேதனை செய்யப்பட்டனர். அந்தச் சமூகத்தார் (மேகமாக வந்த) அந்த வேதனையைப் பார்த்துவிட்டு, "இது நமக்கு மழையைப் பொழிவிக்கும் மேகம்" என்றே கூறினர்" என பதிலளித்தார்கள். (முஸ்லிம் 899).
-
அக்காற்றிலுள்ள நலவை அல்லாஹ்விடம் கேட்டல். ஆஇஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள் சூறாவளிக் காற்று வீசும்போது, "இறைவா, இந்தக் காற்றின் நன்மையையும் அதனுள்ளே மறைந்திருக்கும் நன்மையையும் அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்தக் காற்றின் தீங்கிலிருந்தும், அதனுள்ளே மறைந்திருக்கும் தீங்கிலிருந்தும், அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்" என்று கூறுவார்கள். (முஸ்லிம் 898).
அதனைத் தூற்றக் கூடாது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் காற்றை சபித்தார். அப்போது நபியவர்கள் : "காற்றை சபிக்காதீர், ஏனெனில் அது ஏவப்பட்டுள்ளது. உரிய காரணமின்றி ஒன்றை சபித்தால் அந்த சாபம் சபித்தவனுக்கே திரும்புகின்றது" என்றார்கள். (திர்மிதி 1978), மற்றுமொரு நபிமொழியில் : "நீங்கள் காற்றைத் தூற்ற வேண்டாம்" என இடம்பெற்றுள்ளது. (திர்மிதி 2252). இமாம் ஷாபிஈ (ரஹ்) கூறினார்கள் : "காற்றை யாரும் தூற்றலாகாது. ஏனெனில் அது அல்லாஹ்விற்கு வழிப்படும் அவனது படைப்பாகும், மேலும் அவனது படைகளில் ஒரு படையாகும், அவன் நாடினால் அதனை கருணையாகவோ, தண்டனையாகவோ ஆக்குவான்".
அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் இடி முழங்குவதைக் கேட்டால் பேச்சை நிறுத்தி விட்டு "ஸுப்ஹானல்லதீ யுஸப்பிஹுர் ரஃது பிஹம்தீ வல்மலாஇகது மின் கீஃபதிஹி" என ஓதுவார்கள். இவ்வார்த்தை அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதாகும் : "மேலும் இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள் அவனையஞ்சியும் (அவனை) தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றனர். இன்னும் அவனே இடிகளை விழச்செய்து, அவற்றைக் கொண்டு, தான் நாடியவரைத் தாக்குகின்றான்; (இவ்வாறிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கிக்கின்றனர், அவனோ மிகுந்த வல்லமையுடையவனாக இருக்கின்றான்." (ரஃது : 13).
மழை பொழியும் போது என்ன செய்ய வேண்டும்?
துஆக் கேட்பதும் மழை பொழியும் போது செய்ய வேண்டியதில் உள்ளவையாகும். அது பதிலளிக்கப்பட பொருத்தமான சந்தர்ப்பமென பல அறிவிப்புக்கள் உள்ளன.
நபி (ஸல்) அவர்கள் மழையைக் கண்டால் "அல்லாஹும்ம ஸய்யிபன் நாஃபிஆ" என ஓதுவார்களென ஆஇஷா (ரலி) அறிவிக்கின்றார்கள். (புஹாரி 1032). "ஸய்யிப்" என்பது பலமாக விழக்கூடிய கன மழையாகும்.
மழை பொழியும் போதும், அதன் பின்னரும் ஓத வேண்டிய துஆக்கள்
மழை பயனுள்ளதாக அமையவும் பிரார்த்திக்க வேண்டும். ஏனெனில் சில வேளை மழை அதிகமாகப் பெய்யும், ஆனால் அதில் பயனேதும் இருக்க மாட்டாது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "வறட்சி என்பது மழை பொழியாமலிருப்பதல்ல, மாறாக வறட்சி என்பது மழை பொழிய, பொழிய பூமியில் பயிர்கள் முளைக்காமல் இருப்பதாகும்". (முஸ்லிம் 2904).
-
மழை பொழியும் போது இது அல்லாஹ்வின் அருள் எனக் கூறுவது ஸுன்னத்தாகும். நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆஇஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (சூறாவளிக்) காற்று, மழைமேகம் ஆகியவை மிகுந்துள்ள நாட்களில் நபி (ஸல்) அவர்களின் முகத்தில் (ஒரு விதமான கலக்கம்) தென்படும்; முன்னும் பின்னும் நடப்பார்கள். (நிம்மதியற்று ஒருவிதத் தவிப்புடன் காணப்படுவார்கள்.) மழை பொழிந்துவிட்டால் அந்த (தவிப்பு) நிலை அவர்களைவிட்டு நீங்கிவிடும்; மகிழ்ச்சி வந்துவிடும். நான் அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டதற்கு, "அது என் சமுதாயத்தார்மீது சாட்டப்பட்ட (இறைவனின்) வேதனையாக இருக்குமோ என்று நான் அஞ்சினேன்" என்று விடையளித்தார்கள். அவர்கள் மழையைக் காணும்போது "(இது இறைவனின்) அருள்" என்று கூறுவார்கள். (முஸ்லிம் 899).
மழை பொழியும் போதும் பொழிந்த பின்னரும் "முதிர்னா பிபழ்லில்லாஹ் வரஹ்மதிஹி" (அல்லாஹ்வின் கருணையினாலும் அவனுடைய அருட்கொடையினாலும் நமக்கும் மழை பொழிந்தது) எனக் கூறுவதும் ஸுன்னத்தாகும். ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனீ(ரலி) கூறுகின்றார் : நபி(ஸல்) அவர்கள் 'ஹுதைபிய்யா' எனுமிடத்தில் எங்களுக்கு ஸுபுஹ் தொழுகை நடத்தினார்கள். அன்றிரவு மழை பெய்திருந்தது. தொழுது முடித்ததும் மக்களை நோக்கி, 'உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டார்கள். 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே இதைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்' என்று நாங்கள் கூறினோம். ''என்னை விசுவாசிக்கக் கூடியவர்களும் என்னை நிராகரிக்கக் கூடியவர்களுமான என் அடியார்கள் இரண்டு பிரிவுகளாக ஆனார்கள். அல்லாஹ்வின் கருணையினாலும் அவனுடைய அருட்கொடையினாலும் நமக்கும் மழை பொழிந்தது எனக் கூறுபவர்கள் என்னை நம்பி, நட்சத்திரங்களை மறுத்தவர்களாவர். இந்த நட்சத்திரத்தினால் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறுபவர்கள் என்னை நிராகரித்து, நட்சத்திரங்களை விசுவாசித்தவர்களாவர் என்று இறைவன் கூறினான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி 846).
அதிக மழையால் அச்சம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் ?