தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் வட்டி
அல்லாஹ்வின் மதிநுட்பத்திற்கமைய இஸ்லாமிய ஷரீஅத்தில் வட்டி பெரும்பாவங்களில் ஒன்றாகிவிட்டது. இதில் தனிநபர், சமூகம் அனைவருக்கும் பாரிய சோதனை மற்றும் அழிவு இருப்பதால் அனைத்து மதங்கள், இறைவேதங்களிலும் இது தடுக்கப்பட்ட ஒன்றாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "எனவே யூதர்களாக இருந்த அவர்களுடைய அக்கிரமத்தின் காரணமாக அவர்களுக்கு (முன்னர்) ஆகுமாக்கப்பட்டிருந்த நல்ல (ஆகார) வகைகளை அவர்களுக்கு ஹராமாக்கி (விலக்கி) விட்டோம்; இன்னும் அவர்கள் அநேகரை அல்லாஹ்வின் பாதையில் செல்லவிடாது தடுத்துக் கொண்டிருந்ததனாலும் (அவர்களுக்கு இவ்வாறு தடை செய்தோம்.). வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம்". (நிஸா : 160, 161).
இது பற்றி வந்திருக்கும் கடுமையான எச்சரிக்கை வட்டியின் விபரீதத்தைத் தெளிவுபடுத்துகின்றது. அல்லாஹ் கூறுகின்றான் : "ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் - முதல் - உங்களுக்குண்டு; (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள், - நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்". (பகரா : 278. 279). எனவே அல்லாஹ் வட்டியைத் தடுத்து, ஹராமாக்கி, அதில் ஈடுபடுவோருடன் போர்ப் பிரகடனம் செய்துள்ளான்.
நபி (ஸல்) அவர்களும் இதனை ஹராமென வலியுறுத்திக் கூறியுள்ளார்கள் : "வட்டியை உண்பவன், அதனை உண்ணக் கொடுப்பவன், அதற்கு சாட்சியம் அளிக்கும் இருவர், கணக்கு எழுதுபவன் ஆகிய அனைவரையும் நபிகள் (ஸல்) அவர்கள் சபித்தார்கள். பாவத்தில் அவர்கள் அனைவரும் சமம் என்றார்கள்" (முஸ்லிம் 1598).
வட்டியின் வரைவிலக்கணம் :
மொழி ரீதியாக வட்டி : அதிகரித்தல், வளர்ச்சி என்பதைக் குறிக்கும் சொல். பின்வரும் இறைவசனமும் அக்கருத்திலுள்ளதுதான் : "ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை விட அதிகமானவர்களாக இருக்கிறார்கள் என்னும் காரணத்தால் நீங்கள் உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையில் ஏமாற்றுவதற்கு சாதனங்களாக்கிக் கொள்ளாதீர்கள்". (நஹ்ல் : 92). அதாவது எண்ணிக்கையில் அதிகமானவர்கள்.
பரிபாசையில் வட்டி என்பது :
குறிப்பிட்ட சில பொருட்களில் குறிப்பிட்ட விதத்தில் மார்க்கம் தடுத்த முறையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு, மற்றும் தவணையிடல் .
வட்டியின் வகைகள்
மேலதிக வட்டி
இது வஹீ மூலம் வட்டியெனக் குறித்துக் கூறப்பட்ட பொருட்களிலும், அதனுடன் சேர்த்துப் பார்க்கப்படும் பொருட்களிலும் ஏற்படக்கூடியதாகும். ஒரே இனத்தைச் சேர்ந்த இரண்டு பொருட்களுக்கு மத்தியில் பண்டமாற்று செய்யும் போது மேலதிகமாக பெறப்படுவது வட்டியாகும். உதாரணமாக பழுதடைந்த பேரீத்தம்பழம் இரண்டு ஸாவு அளவிற்குப் பதிலாக நல்ல பேரீத்தம்பழம் ஒரு ஸாவு வாங்குவதைக் கூறலாம்.
தவணை முறை வட்டி
இது கரத்துக்குக் கரம் உடனடியாக செய்யப்பட வேண்டிய வியாபாரத்தில் தவணையை அதிகரிப்பதன் மூலம் ஏற்படும் வட்டியாகும். மேலதிக வட்டியில் கூறப்பட்டுள்ள ஒரே இனத்தைச் சேர்ந்த இரண்டு பொருட்களுக்கு மத்தியில் பண்டமாற்று செய்யும்போது பொருளைக் கையகப்படுத்துவதைத் தாமதப்படுத்தலாகும். உதாரணமாக குரக்கன் ஒரு ஸாவு அளவைக் கொடுத்து வாற்கோதுமை ஒரு ஸாவு அளவை உடனடியாகப் பரிமாற்றாமல் தவணை முறையில் மேற்கொள்வதாகும்.
வட்டி பற்றிய இஸ்லாமிய தீர்ப்பு
அல்குர்ஆன், ஸுன்னா, மற்றும் அறிஞர்களின் ஏகோபித்த கருத்துக்களின் அடிப்படையில் வட்டி ஹராமானதாகும். இமாம் நவவீ (ரஹ்) கூறுகின்றார்கள் : வட்டியின் வரையறை, வரைவிலக்கணத்தில் வேறுபட்டாலும் பொதுவாக வட்டி ஹராம் என்பதில் அனைத்து முஸ்லிம்களும் ஒருமித்துள்ளனர். (பார்க்க : அல்மஜ்மூஃ 9/ 391).
வட்டி தடுக்கப்பட்டதற்கான காரணம் :
1. யதார்த்தபூர்வமான பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவித்தல். ஏனென்றால், வட்டி உண்பவன் தனக்கோ, சமூகத்திற்கோ பயனளிக்கும் வகையில் விவசாயம், கைத்தொழில், வியாபாரம் போன்ற எந்தப் பயனுள்ள பணியிலும் தனது பணத்தை முதலீடு செய்வதில்லை.
2. முதலீடு இல்லாமல் சம்பாதிப்பதைத் தடுத்தல். ஏனெனில் இரு தரப்பினரதும் நலன்களை அடையும் வகையில் இஸ்லாம் நிதி பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்துகிறது. ஒவ்வொருவரும் ஏதாவதொன்றை வழங்கி, அதற்குப் பிரதியை எடுக்கின்றனர். வட்டியில் இது அடையப்படுவதில்லை.
3. வட்டி மக்களுக்கு மத்தியில் நலவு நடப்பதைத் தடுக்கின்றது. அவர்களிடையே நலவு மற்றும் உபகாரத்தைப் பரப்புவதில் இஸ்லாமியக் குறிக்கோளுக்கு இது மாற்றமாகும்.
4. வறியவர்கள் மீதான செல்வந்தர்களின் ஆக்கிரமிப்பைத் தடுத்தல். கடன் வழங்குபவர் பொதுவாக கடன் வாங்குபவரைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்துவார். அதற்காக வட்டிக்குப் பணம் கொடுப்பார்.
5. அநீதியைத் தடுத்தல் : வட்டியால் இரு தரப்பினரில் ஒருவருக்கு அநீதி ஏற்படுகின்றது. அல்லாஹ் அனைத்து வித அநீதிகளையும் தடுத்துள்ளான்.
வட்டியின் தீங்குகள்
வட்டியினால் ஏற்படும் தீங்குகளும் ஆபத்துகளும் மிகப் பாரியவை, மற்றும் தனிநபர்கள், சமூகங்களின் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் அவை விரிவடைந்து கொண்டே செல்கின்றன.
1. தார்மீக மற்றும் ஆன்மீக தீங்குகள்
இது பேராசை, வன்நெஞ்சம் மற்றும் பணத்தின் அடிமைத்தனம் ஆகியவற்றை அதன் உரிமையாளரின் ஆத்மாவில் பதிக்கிறது. எனவே பிறருக்கு அநீதியிழைப்பதையும், அவர்களது தேவைகள், பலவீனம், வறுமையைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்வதையும் தனக்கு அனுமதித்துக் கொள்கின்றான். மறுபுறம் பணத்தேவையுடையவனின் உள்ளத்தை நோகடிக்கின்றான். எனவே பரந்த இப்பூமியும்அவனுக்கு சுருங்கி, நிர்க்கதிக்கு உள்ளாகின்றான்.
வட்டி சமுதாயத்தை சீரழிக்கவும் சிதைக்கவும் செய்யும் பலமான காரணியாகும், பலமானவர்கள் பலவீனமானவர்களை விழுங்குகிறார்கள். யாரும் பிறருக்கு ஒரு இலாபத்தை எதிர்பாத்தே தவிர உதவ முன்வர மாட்டார்கள்.
3. பொருளாதார தீங்குகள்
அனைத்து மட்டங்களிலும் பொருளாதார அமைப்பை சீர்குலைக்க வட்டி வழிவகுக்கின்றது. மக்களிடையே கடன் ஏறிக்கொண்டே செல்கின்றது. சமூக்கில் யதார்த்தமான பயனுள்ள அடைவுகள் செயலிழக்கின்றன, அல்லது பின்னடைவை சந்திக்கின்றன.