தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் முஹம்மத் (ஸல்) அவர்களை நம்பிக்கை கொள்ளல்
எமது நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் விடயத்தில் எமக்குள்ள கடமைகள் :
1. முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய அடியாரும் தூதருமாவார். முன்னோர்கள், பின்னோர்கள் அனைவருக்கும் தலைவராவார். அவர்தான் இறுதித் தூதர், அவருக்குப் பின் நபியில்லை என நாம் நம்பிக்கை கொள்ளல் வேண்டும். அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட தூதை எத்திவைத்தார்கள், அமானிதத்தை நிறைவேற்றினார்கள், சமூகத்திற்கு நலவு நாடினார்கள், அல்லாஹ்வின் பாதையில் உண்மையாகவே அறப்போர் புரிந்தார்கள்.
2. அவர் அறிவிக்கும் தகவல்களை உண்மைப்படுத்தல் வேண்டும், ஏவல்களுக்குக் கட்டுப்படல் வேண்டும், வில்லக்கல்களை விட்டும் தூரமாக வேண்டும், அவர்கள் காட்டிய பிரகாரமே அல்லாஹ்வை நாம் வணங்க வேண்டும், அவர்களை மாத்திரமே நாம் பின்பற்ற வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான் : “அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது”. (அஹ்ஸாப் : 21).
3. பெற்றோர், பிள்ளை, அனைத்து மனிதர்களையும் விட நபியவர்களின் நேசத்திற்கு முன்னுரிமை வழங்குவது அவசியமாகும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "உங்களில் ஒருவரிடத்தில் தனது பெற்றோர், பிள்ளை, அனைத்து மனிதர்களை விடவும் நான் நேசத்திற்குரியவனாகும் வரை அவருடைய ஈமான் முழுமையடைய மாட்டாது". (ஆதாரம் : புஹாரி 15, முஸ்லிம் 44). அன்னாரின் மீதான உண்மையான நேசம் அன்னாரது ஸுன்னாவைப் பின்பற்றி அன்னார் வழியில் நடப்பதன் மூலமே உருவாகும், உண்மையான மகிழ்ச்சி, முழுமையான நேர்வழி அவர்களுக்கு வழிப்படுவதன் மூலமே உருவாகின்றது. அல்லாஹ் கூறுகின்றான் : "நீங்கள் அவர்களுக்கு கட்டுப்பட்டால் நேர்வழி பெறுவீர்கள், தெளிவாக எத்திவைப்பதைத் தவிர இ்த்தூதர் மீது வேறொன்றுமில்லை". (நூர் : 54).
4. நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்ததை ஏற்று, அவர்களது வழிமுறைக்குக் கட்டுப்பட்டு, அன்னாரின் வழியை கண்ணியத்துடனும், மகத்துவத்துடனும் நோக்குதல். அல்லாஹ் கூறுகின்றான் : “உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்”. (நிஸா : 65).
5. அன்னாரது கட்டளைகளுக்கு மாறுசெய்வதிலிருந்து எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். ஏனெனில் அது சோதனை, வழிகேடு, நோவினை தரும் வேதனை ஆகியவற்றுக்குக் காரணமாகின்றது. அல்லாஹ் கூறுகின்றான் : “ஆகவே எவர் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்”. (நூர் : 63).
ஏனைய இறைத்தூதுகளை விட்டும் இறுதித்தூது சில தனித்துவங்கள், சிறப்புக்களால் தனித்து நிற்கின்றன. அவற்றுள் சில :
1. முஹம்மத் ஸல் அவர்களுக்கு வழங்கப்பட்ட இத்தூது அனைத்து தூதுகளுக்கும் முத்திரையாக உள்ளது. அல்லாஹ் கூறுகின்றான் : “முஹம்மது (ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்”. (அஹ்ஸாப் : 40).
2. இது ஏனைய அனைத்து தூதுகளையும் மாற்றிவிட்டது. எனவே முஹம்மத் (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்டதன் பின்னர் அவர்களது மார்க்கத்தைத் தவிர வேறெதனையும் அல்லாஹ் ஏற்க மாட்டான். அவர்களின் வழியாகவே தவிர எவரும் சுவனம் நுழைய முடியாது. அவர் இறைத்தூதர்களில் மிக கண்ணியமானவர். அவரது சமூகமே சிறந்த சமூகம், அவரது மார்க்கமே பரிபூரணமான மார்க்கமாகும். அல்லாஹ் கூறுகின்றான் : “இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்”. (ஆலஇம்ரான் : 85). நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “இந்த முஹம்மதின் உயிர் எவன் கைவசமுள்ளதோ அவனின் மீது சத்தியமாக இச்சமூகத்தின் எந்தவொரு யூதரோ, கிறிஸ்தவரோ என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு, பின் நான் அனுப்பப்பட்ட மார்க்கத்தை நம்பவில்லையோ அவன் நரகிலேயே இருப்பான்”. (ஆதாரம் : முஸ்லிம் 153, அஹ்மத் 8609).
3. இத்தூது மனு, ஜின்கள் அனைவருக்குமானது. ஜின்கள் கூறியதாக அல்லாஹ் கூறுகின்றான் : "எமது சமூகமே அல்லாஹ்வின் அழைப்பாளருக்கு நீங்கள் பதிலளியுங்கள்”. (அஹ்காப் : 31). மேலும் கூறுகின்றான் : “இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை” (ஸபஃ : 28). நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “பிற நபிமார்களை விட ஆறு விடயங்கள் மூலம் நான் சிறப்பிக்கப்பட்டுள்ளேன். (எதிரிகள் மனதில்) அச்சமேற்படுவதைக் கொண்டு உதவப்பட்டுள்ளேன். கனீமத் எனக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. பூமி எனக்குப் பரிசுத்தமானதாகவும், தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது, நான் அனைத்து மக்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளேன், என் மூலமே நபித்துவம் முத்திரையிடப்பட்டுள்ளது”. (ஆதாரம் : புஹாரி 2815, முஸ்லிம் 523).
ஒரு நபியுடைய தோழர்களும், உதவியாளர்களும் அவருடைய சிறந்த சமூகமாக இருந்தேயொழிய அல்லாஹ் எந்த நபியையும் அனுப்பவில்லை . அவர்களுடைய காலமே சிறந்த காலமாகும். இம்மார்க்கத்தைச் சுமந்து, கலப்படமின்றி, மாசுபடாமல் தூய்மையாக மக்களுக்கு எத்தவி வைப்பதற்காக அல்லாஹ் தனது நபியின் தோழமைக்கு தனது படைப்பினங்களில் நபிமார்களுக்கு அடுத்து சிறந்த மக்களையே தெரிவு செய்துள்ளான்.
நபித்தோழரின் வரைவிலக்கணம்
நபி ஸல் அவர்களை முஸ்லிமாக சந்தித்து, அதே நிலையில் மரணித்தவரே ஸஹாபி (நபித்தோழர்) எனப்படுவார்.
அல்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் பல இடங்களில் அவர்களை சிலாகித்து, அவர்களது பண்புகளை, சிறப்புக்களை எடுத்துக்கூறி பல இறைச்செய்திகள் உள்ளன :
நபித்தோழர்கள், நபியின் குடும்பத்தார் விடயத்தில் எமது கடமைகள்
நபித்தோழர்கள், நபியின் குடும்பத்தார் விடயத்தில் ஒரு முஸ்லிம் மீது பல கடமைகள் உள்ளன :
1.அவர்களை நேசித்தல், கண்ணியப்படுத்தல், அவர்களுக்காகப் பிரார்த்தனை புரிதல்
தமது மார்க்கத்தைப் பாதுகாப்பதற்காகவும், அல்லாஹ்வின் பொருத்தத்தைத் தேடியும் தமது தாயகம் மக்காவைத் துறந்து மதீனாவிற்கு இடம்பெயர்ந்த முஹாஜிரீன்களை அல்லாஹ் சிலாகித்துக் கூறியுள்ளான். அதனைத் தொடர்ந்து வந்தோருக்கு வாழ்விடமளித்து, தம்மிடமுள்ள சொத்து, சுகங்களில் அவர்களையும் பங்குதாரர்களாக்கி, பொதுநலம் பேணிய அன்ஸாரித் தோழர்களையும் புகழ்ந்துள்ளான். பின்பு, மறுமை வரை வரக்கூடிய அனைத்து மக்களிலும் அத்தோழர்களின் சிறப்பு, தகுதிகளை அறிந்து, அவர்களை நேசித்து, அவர்களுக்காகப் பிரார்த்தனை புரிவதுடன், தமது உள்ளங்களில் அவர்களைப் பற்றிய எவ்விதப் பகையோ, வெறுப்போ வைத்துக் கொள்ளாத நல்லடியார்களைப் புகழ்ந்து கூறியுள்ளான்.
அல்லாஹ் கூறுகின்றான் : “எவர்கள் தம் வீடுகளையும், தம் சொத்துகளையும் விட்டு, அல்லாஹ்வின் அருளையும், அவன் திருப் பொருத்தத்தையும் தேடியவர்களாக வெளியேற்றப்பட்டனரோ அந்த ஏழை முஹாஜிர்களுக்கும் (ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் அப்பொருளில் பங்குண்டு); அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர் அவர்கள் தாம் உண்மையாளர்கள். இன்னும் சிலருக்கும் (இதில் பங்குண்டு; அவர்கள் மதீனாவில் முஹாஜிர்களுக்கு) முன்னரே ஈமானுடன் வீட்டை அமைத்துக் கொண்டவர்கள்; அவர்கள் நாடு துறந்து தங்களிடம் குடியேறி வந்தவர்களை நேசிக்கின்றனர்; அன்றியும் அ(வ்வாறு குடியேறி)வர்களுக்குக் கொடுக்கப் பட்டதிலிருந்து தங்கள் நெஞ்சங்களில் தேவைப்பட மாட்டார்கள்; மேலும், தங்களுக்குத் தேவையிருந்த போதிலும், தங்களைவிட அவர்களையே (உதவி பெறுவதற்குத் தக்கவர்களாகத்) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் - இவ்வாறு எவர்கள் உள்ளத்தின் உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டார்களோ, அத்தகையவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள். அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர். (ஹஷ்ர் : 8- 10).
2. அனைத்து நபித்தோழர்களையும அல்லாஹ் பொருந்திக் கொள்ளப் பிரார்த்தித்தல் :
அவர்களில் ஒருவருடைய பெயர் கூறப்பட்டால் ரலியல்லாஹு அன்ஹு அல்லாஹ் அவரைப் பொருந்திக் கொள்வானாக எனக் கூறுவது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவசியமாகும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டு, அவர்களது செயல்கள், வழிப்படுதலை ஏற்றுக் கொண்டதாகவும், அவர்களும் அல்லாஹ் தமக்கு வழங்கிய அருட்கொடைகளைப் பொருந்திக்கொண்டதாகவும் கூறுகின்றான் : “இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை (எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்”. (தவ்பா : 100).
1. நபித்தோழர்கள் அனைவரும் சிறந்தவர்கள், நல்லோர்கள். அவர்களில் மிகச்சிறந்தவர்கள் நான்கு கலீபாக்களாகும். அவர்கள் முறையே : அபூ பக்ர், உமர், உஸ்மான், அலீ ரலியல்லாஹு அன்ஹும்.
2. நபித்தோழர்கள் மனிதர்கள், தவறுகளிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்களல்லர். சில வேளை அவர்களாலும் தவறு நிகழலாம். எனினும் பொதுவாக ஏனையோரை விட அவர்களுடைய தவறுகள் மிகக் குறைவு, நன்மைகள் மிக அதிகம். இம்மார்க்கத்தை சுமப்பதற்கு மக்களில் மிகச் சிறந்தவர்களையே தனது நபிக்குத் தோழர்களாகத் தெரிவு செய்துள்ளான். நபியவர்கள் கூறினார்கள் "மக்களில் சிறந்தவர்கள் நான் தூதராக அனுப்பப்பட்ட காலத்திலுள்ளவர்களே, பின் அவர்களைத் தொடர்ந்து வருபவர்களாகும், பின்னர் அவர்களைத் தொடர்ந்து வருபவர்களாகும்". (ஆதாரம் : முஸ்லிம்).
3. அனைத்து நபித்தோழர்களும் நீதமானவர்கள், நல்லோர்கள் என நாம் சாட்சி கூற வேண்டும். அவர்களது நலவுகளைக் கூறுவோம், அவர்களால் ஏற்பட்ட தவறு, பிழைகளைத் துருவி ஆராய மாட்டோம். அவற்றையெல்லாம் மிகைக்குமளவு அவர்களிடம் உண்மையான இறைநம்பிக்கையும், நற்செயல்களும் உள்ளன. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "எனது தோழர்களை ஏசாதீர், உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தை தர்மம் செய்தாலும் அவர்கள் செய்த தர்மத்தில் ஒரு கையளவோ அல்லது அதன் பாதியைக் கூட அடைய மாட்டாது". (ஆதாரம் : புஹாரி).
நபியவர்களின் மனைவியர், பிள்ளைகள், மற்றும் அலீ, உகைல், ஜஃபர், அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹும் ஆகிய அன்னாரது சிற்றப்பாக்களின் பிள்ளைகளும், அவர்களின் சந்ததியினருமே நபியவர்களின் குடும்பத்தினராவர்.
அவர்களில் மிகச் சிறந்தவர்கள் நபியவர்களை நேரில் சந்தித்த அலீ பின் அபீதாலிப், பாத்திமா பின்துந் நபி (ஸல்), அத்தம்பதியினரின் புதல்வர்களான சுவனத்து வாலிபர்களின் தலைவர்கள் ஹஸன், ஹுஸைன், நபியவர்களின் மனைவியரான கதீஜா பின்து குவைலித், ஆஇஷா பின்து அபீபக்ர் (ரலியல்லாஹு அன்ஹும்) போன்றோராகும்.
நபியின் மனைவியருக்கு உயர்ந்த பண்புகளையும், அழகிய குணங்களையும் போதித்து விட்டு அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான் : “(நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்”. (அஹ்ஸாப் : 33).
நபியின் குடும்பத்தாரை நேசித்தல் :
நபியவர்களின் உபதேசத்திற்குக் கட்டுப்படும் முகமாகவும், தனது குடும்பத்தில் அன்னார் அதிக கரிசனை எடுத்து, அழகிய முறையில் நடந்து கொண்டதாலும், அன்னாரின் குடும்பத்திலுள்ள அன்னரைப் பின்பற்றும் விசுவாசிகளை ஒரு முஸ்லிம் நேசிக்க வேண்டும். அதனை நபியவர்களை நேசிப்பதன் ஒரு பகுதியாக ஆக்கிக் கொள்ள வேண்டும். நபியவர்கள் கூறினார்கள் : "எனது குடும்ப விடயத்தில் உங்களுக்கு அல்லாஹ்வை நினைவூட்டுகின்றேன். எனது குடும்ப விடயத்தில் உங்களுக்கு அல்லாஹ்வை நினைவூட்டுகின்றேன்". ஆதாரம் முஸ்லிம் 2408. இரக்கமுள்ள ஒரு தந்தை எனது பிள்ளைகள் விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் என்று கூறுவதைப் போன்றே இவ்வுபதேசமும் உள்ளது.
இரு பிரிவினரை விட்டும் முஸ்லிம் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் :
நபியின் குடும்பத்தினர் தவறுகளிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் அல்லர் :
நபியின் குடும்பத்தினரும் பிற கோத்திரங்களைப் போன்றுதான் . அவர்களில் முஸ்லிம்களும் உள்ளனர், காபிர்களும் உள்ளனர், நல்லோரும் உள்ளனர், தீயோரும் உள்ளனர். அவர்களில் நல்லோரை நாம் நேசித்து, அவர்களுக்கு நற்கூலி கிடைக்க எதிர்பார்ப்போம், தீயோரைப் பற்றி அஞ்சி, அவர்களது நேர்வழிக்காகப் பிரார்த்திப்போம். நபியின் குடும்பத்தாருக்கு சிறப்புள்ளது என்பது அவர்கள் அனைவரையும் எல்லா நிலைகளிலும் சிறப்பிப்பது என்பதல்ல. பல விடயங்களைக் கருத்திற்கொள்ளும் போது மக்கள் ஏற்றத்தாழ்வு அடைகின்றனர். சிலவேளை பிற குடும்பங்களில் இவர்களை விட சிறந்தவர்கள் இருக்கலாம்.