தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் விதியை நம்புதல்
விதியை நம்புதன் அர்த்தம் :
விதியை நம்புதல் என்பது அனைத்து நலவுகளும், கெடுதிகளும் அல்லாஹ் நிர்ணயித்த ஏற்பாட்டின் அடிப்படையிலேயே நிகழ்கின்றன. அவன் நாடியதை செய்யக் கூடியவன், அவனது நாட்டமின்றி எதுவும் நடக்காது, எப்பொருளும் அவனது நாட்டத்தை விட்டு வெளியேற மாட்டாது. உலகில் அவனது ஏற்பாட்டை விட்டு வெளியேறும் எப்பொருளும் இல்லை. அவனது திட்டத்தை விட்டு எதுவும் வெளியேற மாட்டாது என்பதை ஆணித்தரமாக உண்மைப்படுத்தலாகும். அவ்வாறிருந்தும் அல்லாஹ் அடியார்களுக்கு ஏவல், விலக்கல்களை விதித்துள்ளான். பலவந்தமின்றி தாமாக தமது செயற்பாடுகளைத் தெரிவு செய்வோராகவும் அவர்களை ஆக்கியுள்ளான். அத்துடன் அவர்களது சக்திக்கும் நாட்டத்திற்கும் ஏற்றவாறுதான் அச்செயல்கள் நிகழ்கின்றன. அல்லாஹ் அவர்களையும் அவர்களது சக்திகளையும் படைத்தவனாவான். தான் நாடியோருக்கு தனது அருளால் நேர்வழி காட்டுகின்றான், தனது மதிநுட்பத்தினால் நாடியோரை வழிதவறச் செய்கின்றான். அவன் செய்பவற்றைப் பற்றி வினவப்பட மாட்டான், ஆனால் அவர்கள் வினவப்படுவார்கள்.
விதி என்பதன் வரைவிலக்கணம்
விதி என்பது : ஆதியிலேயே அனைத்து விடயங்களையும் நிர்ணயித்தல், அவை குறிப்பிட்ட விதித்தில் அறியப்பட்ட நேரத்தில் நிகழும் என்பதை அறிதல், அவற்றை எழுதுதல், நாடுதல், அவன் நிர்ணயித்த பிரகாரம் அவை நிகழ்தல், அவற்றை படைத்தல் அனைத்தும் விதியை நம்புவதில் அடங்கும்.
விதியை நம்புதல் கடமையாகும், அது ஈமானின் தூண்களில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்கள் இறைநம்பிக்கையைப் பற்றி : “நீர் அல்லாஹ்வையும், அவனது வானவர்கள், வேதங்கள், தூதர்கள், மறுமை நாளையும், விதியையும் நம்புவதாகும் என்றார்கள்”. (முஸ்லிம் : 08).
விதியை நம்புவதன் உள்ளடக்கம் என்ன?
விதியை நம்புதல் நான்கு விடயங்களை உள்ளடங்குகின்றன :
1. அல்லாஹ்வின் அறிவு
அனைத்து வஸ்துக்களையும் அல்லாஹ் பொதுவாகவும், விரிவாகவும் அறிந்து வைத்துள்ளான், தனது அனைத்து படைப்பினங்களையும் அவர்களைப் படைப்பதற்கு முன்னரே அறிந்துள்ளான். அவர்களது வாழ்வாதாரம், வாழ்நாள், சொல், செயல்கள், ஆடல், அசைவுகள், இரகசியங்கள், பரகசியங்கள் அனைத்தையும் அவன் அறிந்துள்ளதுடன் அவர்களில் சுவனவாதிகள், நரகவாதிகளையும் அறிந்து வைத்துள்ளான் என நாம் நம்புதல் வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான் : "அவன்தான் அல்லாஹ். உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அவனையன்றி வேறு யாருமில்லை. அவன் மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் நன்கறிபவன்". (ஹஷ்ர் : 22).
2. எழுதி வைத்தல்
தான் அறிந்துள்ள அனைத்தையும் பாதுகாக்கப்பட்ட ஏட்டில் அல்லாஹ் எழுதிவைத்துள்ளான் என்பதை நம்புதல். பின்வரும் இறைவசனமும், நபிமொழியும் அதற்கு ஆதாரமாக அமைகின்றன. அல்லாஹ் கூறுகின்றான் : "பூமியிலோ, உங்களிலோ எந்தவொரு துன்பம் நேர்ந்தாலும் அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னர் பதிவேட்டில் இல்லாமலில்லை". (ஹதீத் : 22). நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "அல்லாஹ் வானங்கள், பூமியைப் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே படைப்பினங்களின் விதிகளை எழுதி விட்டான்". (ஆதாரம் : முஸ்லிம் 2653).
3. அல்லாஹ்வின் நாட்டம்
எதுவும் பின்வாங்க முடியாத அல்லாஹ்வின் சக்திவாய்ந்த நாட்டத்தையும், எதுவும் தோல்வியடையாத அவனது சக்தியையும் நம்பிக்கை கொள்ளல். அனைத்து நிகழ்வுகளும் அல்லாஹ்வின் நாட்டம், சக்தியின் மூலமே நிகழ்கின்றன. அவன் நாடியது நிகழும், நாடாதது நிகழாது. அல்லாஹ் கூறுகின்றான் : "அல்லாஹ் நாடினாலேயன்றி நீங்கள் நாட மாட்டீர்கள்". (தக்வீர் : 29).
4. படைத்தல்
அனைத்தையும் அல்லாஹ்தான் உருவாக்கியவன், அவன் மாத்திரமே படைப்பாளன், அவனன்றி அனைத்தும் அவனது படைப்பினங்கள், அவன் அனைத்தின்மீதும் ஆற்றலுள்ளவன் என நம்புதல். அல்லாஹ் கூறுகின்றான் : "அவனே அனைத்தையும் படைத்து, பின்னர் அதனை முறைப்படி நிர்ணயித்தான்". (புர்கான் : 2).
மனிதனுக்கு தேர்வுரிமை, ஆற்றல், விருப்பம் அனைத்தும் உண்டு :
விதியை நம்புவதால் மனிதனுக்கு தனது செயற்பாடுகளில் தேர்வுரிமையோ நாட்டமோ, ஆற்றலோ இல்லை என்பதல்ல. அவை மனிதனுக்குண்டு என்பதை உறுதிப்படுத்தும் பல ஆதாரங்கள் மார்க்கத்திலும் நடைமுறையிலும் உள்ளன.
மார்க்க ரீதியான ஆதாரங்கள் : நாட்டத்தைப் பற்றி பின்வருமாறு கூறுகின்றான் : "அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக". (நபஃ : 39). ஆற்றல் பற்றி பின்வருமாறு கூறுகின்றான் : "அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே!” (பகரா : 286).
நடைமுறையிலான ஆதாரம் : ஒவ்வொரு மனிதனுக்கும் நாட்டமும் ஆற்றலும் உள்ளன, அவற்றின் மூலம்தான் தான் விரும்பியதை செய்கின்றான். விரும்பியதை விடுகின்றான். நடத்தல் போன்ற தனது விருப்பத்துடன் நடைபெறும் செலுக்கும், நடுக்கம், தவறி விழுதல் போன்ற தன்னை மீறி நடைபெறும் செலுக்கும் இடையில் வேறு பிரித்துப் பார்க்கின்றான். எனினும் மனிதனது நாட்டம் ஆற்றல் அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டம், ஆற்றலுக்குற்பட்டே நடக்கின்றன. அல்லாஹ் கூறுகின்றான் : “உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்). ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்”. (தக்வீர் : 28, 29). மனிதனுக்கு விருப்பம் இருப்பதாக உறுதிப்படுத்தி விட்டு, அது அவனது நாட்டத்திற்குக் கீழ்தான் இருப்பதாக வலியுறுத்திக் கூறியுள்ளான். மேலும் முழு பிரபஞ்சமும் அல்லாஹ்வுக்குரியதாகும். எனவே அவனது அறிவும், நாட்டமுமின்றி எதுவும் நிகழாது.
மனித ஆற்றல், தேர்வுரிமையுடன் தான் ஏவல், விலக்கல் சட்டங்கள் தொடர்புபடுகின்றன. நேர்வழியைத் தெரிவு செய்ததற்காக நல்லோருக்கு நற்கூலியும், வழிகேட்டைத் தெரிவு செய்ததற்காக தீயோருக்குத் தண்டனையும் வழங்கப்படுகின்றது. அல்லாஹ் எமது சக்தியை மீறி எதனையும் எமக்கு கடமையாக்கவில்லை. விதியைக் காரணமாகக் கூறி வணக்க வழிபாடுகளை விடுவதை ஒரு போதும் அவன் ஏற்கமாட்டான்.
அத்துடன் மனிதன் பாவம் செய்ய முன்னர் அல்லாஹ்வுடைய அறிவு, விதி பற்றி அறிவதில்லை. அல்லாஹ் அவனுக்கு ஆற்றலையும் தேர்வுரிமையையும் வழங்கியுள்ளான். நலவு, கெடுதிகளின் வழிகளைத் தெளிவுபடுத்தியுள்ளான். அப்போது அவன் பாவத்தில் ஈடுபட்டால் வழிப்படுதலை விட பாவத்தை அவனாகத்தான் தேர்வு செய்துள்ளான். அப்பாவத்திற்குரிய தண்டனையையும் அவனே சுமக்க வேண்டும்.
விதியை நம்புவதால் கிடைக்கும் பயன்கள் :
முஸ்லிமின் வாழ்வில் விதியை நம்புவதால் கிடைக்கும் பயன்கள் அளப்பரியது . அவற்றுள் சில :
1. விதி தான் நற்செயல்களில் ஈடுபடவும், உற்சாகத்துடன் செயற்படவும், இவ்வுலகில் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற முயற்சிக்கவும் மிக உந்துசக்தியாக உள்ளது.
விசுவாசிகள் அல்லாஹ்வின் மீது பொறுப்புச் சாட்டுவதுடன், காரண, காரியங்களை மேற்கொள்ளவும், அவை அல்லாஹ்வின் அனுமதியின்றி எவ்வித முடிவையும் தரமாட்டாது என நம்பிக்கை கொள்ளவும் பணிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் அல்லாஹ்தான் காரண காரியங்களையும் படைத்து, அவற்றின் முடிவுகளையும் படைத்துள்ளான். நபி ஸல் அவர்கள் கூறினார்கள் : “உனக்குப் பயனளிப்பதையே நீ ஆசைப்படு. இறைவனிடம் உதவி தேடு. நீ தளர்ந்துவிடாதே. உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது, "நான் (இப்படிச்) செய்திருந்தால் அப்படி அப்படி ஆயிருக்குமே!" என்று (அங்கலாய்த்துக்) கூறாதே. மாறாக, "அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்து விட்டான்" என்று சொல். ஏனெனில், ("இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே" என்பதைச் சுட்டும்) "லவ்" எனும் (இடைச்)சொல்லானது ஷைத்தானின் செயலுக்கே வழி வகுக்கும்”. (முஸ்லிம் : 2663).
2. மனிதன் தன்னிலை அறிந்து பெருமை, மமதை கொள்ளாமலிருத்தல். ஏனெனில் அவனுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதையோ எதிர்கால நிகழ்வுகளையோ அவனால் அறிய முடியாது. எனவே மனிதன் தனது இயலாமையையும், தான் தனது இரட்சகனிடம் எப்போதும் தேவையுள்ளவன் என்பதையும் ஏற்றுக் கொள்கின்றான்.
ஒரு மனிதனுக்கு நலவு நடக்கும் போது மமதை கொண்டு பூரிப்படைகின்றான். தீமை, சோதனை ஏற்படும் போது பொறுமையிழந்து கவலைப் படுகின்றான். விதியை நம்புவது தவிர வேறெதும் மேற்கண்ட தவறான குணத்திலிருந்து மனிதனைப் பாதுகாக்கப் போவதில்லை. அவனுக்கு ஏற்பட்டதெல்லாம் விதியில் நிர்ணயிக்கப்பட்டவைகளும் அல்லாஹ்வின் அறிவு முந்திக் கொண்டவைகளும் தான்.
3. பொறாமைத் தீயை இது அழித்தொழிக்கின்றது. எனவே ஒரு விசுவாசி மக்களுக்கு அல்லாஹ் வழங்கிய அவனது சிறப்புக்களைப் பார்த்து பொறாமைப் பட மாட்டான். ஏனெனில் அல்லாஹ்தான் அவர்களுக்கு வாழ்வாதாரமளித்து அவற்றை நிர்ணயித்துள்ளான். பிறரைப் பார்த்து பொறாமைப் படுவதன் மூலம் தான் அல்லாஹ்வின் விதியில் தான் குறுக்கிடுகின்றோம் என்பதை அந்த விசுவாசி அறிகின்றான்.
4. விதியை நம்புவது சிரமங்களுக்கு முகம் கொடுக்கும் தைரியத்தை உள்ளத்தில் தூண்டி, திடகாத்திரத்தை வலுப்படுத்துகின்றது. ஏனெனில் ஆயுள்களும், வாழ்வாதாரங்களும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மனிதனுக்கு அவனுக்காக எழுதப்பட்டதைத் தவிர எதுவும் நடக்காது என்பதை அவ்வுள்ளங்கள் அறிந்து வைத்துள்ளன.
5. விதியை நம்புவது ஒரு விசுவாசியின் உள்ளத்தில் ஈமானின் பல யதார்த்தங்களை விதைக்கின்றது. அவன் எப்போதும் அல்லாஹ்விடம் உதவி தேடிக் கொண்டிருக்கின்றான். அவனையே சார்ந்து, காரண காரியங்களைச் செய்வதுடன் அவனிடமே பொறுப்புச் சாட்டி விடுகின்றான். மேலும் எப்போதும் அவன் தனது இரட்சகனிடம் தேவையுடையவனாக, மார்க்கத்தில் உறுதிக்காக அவனிடம் உதவி தேடியவனாக இருக்கின்றான்.
6. விதியை நம்புவது உள அமைதியைத் தோற்றுவிக்கின்றது. ஒரு விசுவாசி தனக்கு நடந்தது தன்னை விட்டும் தவற இருந்ததல்ல, தனக்குத் தவறியது தனக்குக் கிடைக்கவிருந்ததல்ல என்பதை அறிந்து வைத்துள்ளான்.