தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் உம்ராச் செய்யும் முறை
உம்ரா : அது கஃபாவை வலம் வந்து, ஸபா- மர்வாக்கிடையில் ஸஈ செய்து, பின் தலைமுடியை நீக்குவதன் மூலம் அல்லாஹ்வை வணங்குவதாகும்.
உம்ராச் செய்வதன் சட்டம்
சக்தியுள்ளவர் வாழ்நாளில் ஒரு தடவை உம்ராச் செய்வது கடமையாகும். அதன் பின்னர் வசதி, வாய்ப்புகளுக்கேற்ப பல தடவைகள் நிறைவேற்றுவது ஸுன்னத்தாகும்.
“ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்”. (பகரா : 196).
ஆஇஷா (ரலி) கூறுகின்றார்கள் “அல்லாஹ்வின் தூதரே! பெண்கள் மீது ஜிஹாத் கடமையா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “போரிடுதல் இல்லாத ஜிஹாத் அவர்கள் மீது கடமையாக உள்ளது; அதுதான் ஹஜ்ஜும் உம்ராவும்” என்று விடையளித்தார்கள்”. (அஹ்மத் 25322, இப்னு மாஜா 2901).
உம்ராவின் சிறப்பு
வருடத்தின் எக்காலத்திலும் உம்ராச் செய்ய முடியும். ஹஜ்ஜுடைய மாதங்களில் அதற்கு மேலும் சிறப்புள்ளது. ரமழானில் செய்யும் உம்ராவின் கூலி பன்மடங்காக்கப்பட்டு ஹஜ்ஜுக்கு நிகராகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "ரமழானில் செய்யப்படும் ஓர் உம்ரா ஒரு ஹஜ்ஜுக்கு அல்லது என்னோடு செய்யும் ஒரு ஹஜ்ஜுக்கு நிகராகும்'' என்றார்கள். (புஹாரி 1863, முஸ்லிம் 1256).
உம்ராச் செய்யும் முறை
உம்ரா செய்யவிருக்கும் இஹ்ராம் நிய்யத் வைக்கும் போது தனது ஆடைகளைக் களைந்து, குளித்து விட்டு, தலைக்கும் தாடிக்கும் நறுமணம் பூசிக்கொண்டு இஹ்ராத்திற்கான தைக்கப்படாத ஆடையை அணிந்து கொள்ள வேண்டும்.
பின் கடமையான தொழுகை நேரமாக இருந்தால் அதனை நிறைவேற்ற வேண்டும், அல்லது வுழூவின் ஸுன்னத் இரு ரக்அத்களைத் தொழ வேண்டும். தொழுது முடிந்ததும் உம்ராச் செய்வதை உள்ளத்தால் நிய்யத் வைத்து, "லப்பைகல்லாஹும்ம உம்ரதன்" எனக் கூற வேண்டும்.
மஸ்ஜிதுல் ஹராமை அடைந்ததும் பள்ளிக்குள் நுழையும் போது ஓத வேண்டிய துஆவை ஓதி வலது காலை முன்வைத்து நுழைய வேண்டும். கஃபாவை அடைந்ததும் தவாப் செய்ய முன் தல்பியாவை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆண்கள் மாத்திரம் மக்கா சென்றதும் செய்யும் தவாஃபில் ‘இழ்திபாஃ’ எனப்படும் முறையில் இஹ்ராம் ஆடையை மாற்றிக் கொள்வது ஸுன்னத்தாகும். ஆடையின் மத்தியை வலது புயத்தில் கீழ் போட்டு வலது புயம் வெளியில் தெரியுமாறும், ஆடையின் இரு ஓரங்களையும் இடது புயத்தின் மேலும் போடுவதே ‘இழ்திபாஃ’ எனப்படுகிறது.
பின் தவாபை ஆரம்பிப்பதற்காக ஹஜருல் அஸ்வத் எனும் கல்லை நெருங்கி அதனை முத்தமிட முடியுமென்றால் முத்தமிட வேண்டும். இயலாத பட்சத்தில் அதனை முன்னோக்கி கையினால் சைகை மாத்திரம் செய்ய வேண்டும். தனது இடது புறம் கஃபா இருக்க அவ்வாறே முன்னோக்கி நகர்ந்து ஏழு முறை சுற்ற வேண்டும். முதல் மூன்று சுற்றிலும் காலடிகளை சிறியதாக எடுத்து வைத்து அவசர அவசரமாக நடந்து செல்ல வேண்டும். இதற்கு "ரமல்" எனப்படுகின்றது.
ருக்னுல் யமானீ எனும் முனையை அடைந்தால் அதனை முத்தமிடாமல் தொட வேண்டும். முடியாவிட்டால் சைகை செய்ய வேண்டிய அவசியமில்லை. ருக்னுல் யமானீ ஹஜருல் அஸ்வத் ஆகியவற்றுக்கிடையில் “ரப்பனா ஆதினா ஃபித் துன்யா ஹஸனஹ், வஃபில் ஆகிரதி ஹஸனதவ் வகினா அதாபன் நார்” எனும் துஆவை ஓத வேண்டும்.
ஒவ்வொரு சுற்றிலும் ஹஜருல் அஸ்வத் கல்லைத் தாண்டும் போது தக்பீர் கூற வேண்டும். தவாபின் ஏனைய பகுதிகளில் தான் விரும்பிய திக்ரு, துஆக்களை ஓதுவதுடன் அல்குர்ஆனையும் ஓதலாம்.
தவாப் ஏழு சுற்றுக்களையும் நிறை வேற்றி முடிந்த பிறகு இஹ்ராம் துணியை முறையாக அணிந்து கொள்ள வேண்டும். பின் முடியுமாயிருந்தால் மகாம் இப்ராஹீமுக்கு பின் நின்று முடியாவிட்டால் பள்ளியின் எப்பகுதியிலும் நின்று இரண்டு ரக்அத்துகள் தொழ வேண்டும். முதல் ரக்அத்தில் பாதிஹாவுக்குப் பின் ஸூரத்துல் காஃபிரூனும், இரண்டாவது ரக்அத்தில் ஸூரத்துல் இக்லாஸும் ஓத வேண்டும்.
பின் ஸஈ செய்யுமிடத்திற்குச் சென்று ஸபாக் குன்றை நெருங்கியதும் "இன்னஸ் ஸபா வல் மர்வத மின் ஷஆஇரில்லாஹ்" என ஓதிவிட்டு, அல்லாஹ் ஆரம்பித்ததிலிருந்தே நானும் ஆரம்பிக்கின்றேன் எனக் கூற வேண்டும்.
அதன் பிறகு ஸபா குன்றில் ஏறி கிப்லாவை முன்னோக்கி நின்று இரு கைகளையும் உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்து, பிரார்த்தனை புரிய வேண்டும். நபியவர்கள் தனது பிரார்த்தனையில் பின் வருமாறு கூறினார்கள் : “லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர், லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, அன்ஜஸ வஃதஹ், வ நஸர அப்தஹ், வ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ்.” அதைப் போன்று மூன்று விடுத்தம் கூறினார்கள். அதன் பிறகு தான் விரும்பிய துஆக்களை கேட்பார்கள்.
பின் ஸபாவிலிருந்து இறங்கி மர்வா குன்றை நோக்கி நடக்க வேண்டும். இடையில் பச்சை நிற இரு விளக்குகளுக்கு இடையில் ஆண்கள் முடியுமானளவு வேகமாக ஓடுவது விரும்பத்தக்கது. பெண்கள் அவ்விடங்களில் ஓடுவது மார்க்கத்திலுள்ளதல்ல. மாறாக ஸஈ முழுவதிலும் நடந்தே செல்ல வேண்டும்.
பின் மர்வா வரை தொடர்ந்து நடந்து சென்று அக்குன்றில் ஏறி கிப்லாவை முன்னோக்கி குறிப்பிட்ட அல்குர்ஆன் வசனத்தைத் தவிர ஸபா குன்றில் ஓதிய அனைத்துப் பிரார்த்தனை, திக்ருகளையும் இங்கும் ஓத வேண்டும்.
ஏழு சுற்றுக்கள் முடியும் வரை இவ்வாறு செய்ய வேண்டும். ஸஃபா” வில் இருந்து “மர்வா” வை நோக்கி செல்வது ஒரு விடுத்தமாகவும், மீண்டும் “மர்வா” வில் இருந்து “ஸஃபா” நோக்கி வருவது இன்னுமொரு விடுத்தமாகவும் கருதப் படும். ஸஈயில் முடியுமானளவு பிரார்த்தனை, திக்ருகளை அதிகப்படுத்துவதும், சிறு, பெரு தொடக்குகளிலிருந்து சுத்தமாயிருப்பதும் விரும்பத்தக்கது.
உம்ரா செய்பவர் ஸஈ செய்து முடிந்ததும் தலைமுடியை மழிக்க வேண்டும், அல்லது கத்தரிக்க வேண்டும். ஆண்களுக்கு மழித்தல்தான் மிகச் சிறந்தது.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறுகின்றார்கள் : நபி (ஸல்) அவர்கள், 'இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு அருள் புரிவாயாக!'' எனப் பிரார்த்தித்தார்கள் உடனே, தோழர்கள் 'முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்...'' என்றனர். (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள், 'இறைவா! தலையை மழித்துக் கொள்பவர்களுக்கு அருள் புரிவாயாக!'' என்று பிரார்த்தித்தபோது தோழர்கள் 'முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும்...'' என்றனர். நபி (ஸல்) அவர்கள் மூன்றாவது முறையாகவும் அதைக் கூறியபோது 'முடியைக் குறைத்துக் கொள்பவர்களுக்கும் (அருள் புரிவாயாக!)'' எனக் கூறினார்கள். (புஹாரி 1727, முஸ்லிம் 1301).
பெண் தனது முடிகளை ஒன்று சேர்த்து விரல் மடிப்பளவு கத்தரிக்க வேண்டும். மேற்கூறப்பட்டவற்றை இஹ்ராம் அணிந்த ஒருவர் நிறைவேற்றினால் அவரது உம்ரா நிறைவடைந்து விடுகின்றது. ஏற்கனவே தடுக்கப்பட்டிருந்த அனைத்தும் அனுமதிக்கப்படுகின்றது.