தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் மதீனாவைத் தரிசித்தல்
நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டதன் மூலம் அந்நகரின் சிறப்பு மேலோங்கி விட்டது. மக்காவிற்கு அடுத்ததாக பூமியில் சிறந்த இடமாக்கப்பட்டது. அதனைத் தரிசிப்பது அனைத்து காலங்களிலும் உள்ளது, ஹஜ் வணக்கத்துடன் அதற்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதன் நபவி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர (அதிக நன்மையை எதிர்பார்த்து)ப் பயணம் மேற்கொள்ளக் கூடாது”. (புஹாரி 1189, முஸ்லிம் 1397, அபூதாவூத் 2033). மதீனாவிற்குப் பல சிறப்புகள் உள்ளன. அவற்றுள் சில :
நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்ததும் முதலில் செய்த காரியம் அறிவு, அழைப்புப்பணி, மக்களுக்கு சேவை செய்தல் போன்றவற்றுக்கு மத்திய நிலையமாக மாறிய புனித மஸ்ஜிதுந் நபவியை நிர்மாணித்ததாகும். அன்னார் கூறினார்கள் : “மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்”. (புஹாரி 1190, முஸ்லிம் 1394).
2. இது புனித பூமியாகும்.
அல்லாஹ்வின் வஹியின் அடிப்படையில் நபியவர்கள் இதனைப் புனிதப்படுத்தியுள்ளார்கள். அங்கு இரத்தங்கள் ஓட்டப்படலாகாது, ஆயுதங்கள் ஏந்தப்படமுடியாது, யாரும் அச்சுறுத்தப்பட முடியாது, மரங்கள் வெட்டப்படலாகாது, போன்ற பல சட்டங்கள் அதன் புனிதத்துவத்தில் அடங்குகின்றன. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது;இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக் கூடாது; யாரேனும் தவறவிட்ட பொருட்களை, அது பற்றி அறிவிப்புச் செய்பவரைத் தவிர மற்றவர்கள் எடுக்கக் கூடாது! பிராணிகளுக்குத் தீனியாகவே தவிர இங்குள்ள மரங்களை வெட்டக் கூடாது; போருக்காக இங்கு ஆயுதம் ஏந்தக் கூடாது". (புஹாரி 1833, அபூதாவூத் 2035, அஹ்மத் 959).
3. அங்குள்ள உணவு, பழங்கள், வாழ்க்கை அனைத்திலும் பரகத் செய்யப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்தித்தார்கள் : "இறைவா! எமது பழவகைகளில் பரகத் செய்வாயாக!, எமது மதீனாவில் பரகத் செய்வாயாக!. ஸாவு, முத்து ஆகிய எமது அளவை முறைகளில் பரகத் செய்வாயாக!.இறைவா! நிச்சயமாக இப்ராஹீம் உனது அடியாரும், உற்ற நண்பரும், உனது நபியுமாவார், நானும் உனது அடியானாவேன், உனது நபியாவேன். அவர் மக்காவிற்காக உன்னிடம் பிரார்த்தித்தார். அவர் மக்காவிற்காக கேட்டதில் இரு மடங்கு நான் மதீனாவிற்காகக் கேட்கின்றேன்" (முஸ்லிம் 1373).
4. தஜ்ஜால் மற்றும் கொள்ளை நோயிலிருந்து இந்நகரை அல்லாஹ் பாதுகாத்துள்ளான்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மதீனாவின் வாசல்களில் வானவர்கள் இருப்பர்! மதீனாவிற்குள் (பிளேக் போன்ற) கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாது!“(புகாரி1880, முஸ்லிம் 1379).
5. மதீனாவாசிகள், அதில் வசிப்பது, மரணிப்பது போன்றவற்றின் சிறப்பு :
மதீனாவின் கடுமை, அதன் வாழ்க்கைச் சிரமங்களைப் பொறுத்துக் கொள்வோருக்கு நபியவர்கள் மறுமையில் ஷபாஅத் (பரிந்துரை) செய்வதாக வாக்களித்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஃத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : "மக்கள் அறிந்துகொள்பவர்களாயிருந்தால் மதீனாவே அவர்களுக்குச் சிறந்ததாகும். எவரும் அதை வெறுத்து அதை விட்டுச் சென்றால், அவரை விடச் சிறந்தவரை அதில் அல்லாஹ் குடியமர்த்தாமல் இருப்பதில்லை. அங்கு ஏற்படும் பசி பட்டினியையும் கடினமான வாழ்க்கையையும் சகித்துக்கொண்டு அங்கு நிலைத்திருப்பவருக்கு மறுமை நாளில் நான் பரிந்துரைப்பவனாக அல்லது சாட்சியம் அளிப்பவனாக இருப்பேன்.". (முஸ்லிம் 1363).
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "மதீனாவில் யாருக்கு மரணிக்க முடியுமோ அங்கு அவர் மரணிக்கட்டும். ஏனெனில் அங்கு மரணிப்பவருக்கு நான் பரிந்துரை செய்வேன்". (திர்மித் 3917, இப்னு மாஜா 3112).
6. மதீனாதான் இறைநம்பிக்கையின் ஒதுங்குதளம், அது தன்னிடமிருந்து தீயவை, கெட்டவர்களை அப்புறப்படுத்தி விடும்.
பூமியில் எவ்வளவு நெருக்கடி ஏற்பட்டாலும் இறுதியில் ஈமான் மதீனாவில் தான் ஒதுங்குகின்றது. கெட்டவர்கள், தீயவர்களுக்கு அங்கு தொடர்ந்து நிலைத்திருக்க இடமில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "பாம்பு தனது புற்றில் (சென்று) அபயம் பெறுவதைப் போன்று இறைநம்பிக்கை (ஈமான்) மதீனாவில் ஒதுங்கி அபயம் பெறும்". (புஹாரி 1876, முஸ்லிம் 147), மேலும் கூறினார்கள் : "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அவர்களில் எவரேனும் மதீனாவை வெறுத்து அதிலிருந்து வெளியேறினால், அவருக்குப் பதிலாக அவரைவிடச் சிறந்தவரை அங்கு அல்லாஹ் அமர்த்தாமல் இருப்பதில்லை. கவனியுங்கள்: மதீனா, (கொல்லனின்) உலையைப் போன்று அசுத்தங்களை அகற்றிவிடும். இரும்பின் துருவை (கொல்லனின்) உலை நீக்கிவிடுவதைப் போன்று, மதீனா தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றாமல் இறுதி நாள் நிகழாது". (முஸ்லிம் 1382).
7. இந்நகரம் பாவங்களைப் போக்கி விடும்.
நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஸைத் பின் ஸாபித் ரலி அவர்கள் கூறினார்கள் : "மதீனா தூய்மையானது; நெருப்பு, வௌ்ளியின் அழுக்கை நீக்குவதைப் போல் அது பாவங்களைப் போக்கிவிடுகிறது'' . (புஹாரி 3824).
மதீனா செல்வோர் சில ஒழுங்குகளைக் கடைபிடிக்க வேண்டும். அவை :
1. மதீனாச் செல்ல இருப்பவர் அப்பயணத்தின் மூலம் நபியவர்களின் பள்ளியான மஸ்ஜிதுந் நபவீயை தரிசிப்பதையே நோக்காகக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதன் நபவி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர (அதிக நன்மையை எதிர்பார்த்து)ப் பயணம் மேற்கொள்ளக் கூடாது”. (புஹாரி 1189, முஸ்லிம் 1397).
2. பள்ளியை அடைந்ததும் வலது காலை முன்வைத்து "அல்லாஹும்மப்தஹ் லீ அப்வாப ரஹ்மதிக" எனும் துஆவைக் கூறி உட்செல்ல வேண்டும். (முஸ்லிம் 713).
3. பள்ளிக் காணிக்கையாக இரு ரக்அத்கள் தொழ வேண்டும். அதனை ரவ்ழா எனும் பகுதியில் நிறைவேற்றினால் மிகச் சிறந்ததாகும்.
4. நபியவர்களின் கப்ரையும், அன்னாரது இரு தோழர்களான அபூ பக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரின் கப்ருகளையும் தரிசிப்பது ஸுன்னத்தாகும். நபியவர்களின் கப்ருக்கு நேராக நின்று அமைதியாக ஒழுக்கத்துடன் குரலைத் தாழ்த்தி நபியே உம்மீது ஸலாமும், அல்லாஹ்வின் அருளும் பரகத்தும் நிலவட்டுமாக, நீங்கள் உண்மையாக அல்லாஹ்வின் தூதர்தாம், தூதை எத்திவைத்தீர்கள், அமானிதத்தை நிறைவேற்றினீர்கள், சமூகத்திற்கு நலவு நாடினீர்கள், அல்லாஹ்வின் பாதையில் உண்மையாகவே போராடினீர்கள் என நான் சாட்சி கூறுகின்றேன் எனக் கூற வேண்டும்.
பின் வலது புறமாக இரு எட்டுக்கள் வைத்து அபூ பக்ர் (ரலி) அவர்களின் கப்ருக்கு நேராக வந்து அவர்களுக்கு ஸலாம் கூறி, அவர்களுக்கு அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்க வேண்டி விட்டு, பின் வலது புறமாக இரு எட்டுக்கள் வைத்து உமர் (ரலி) அவர்களின் கப்ருக்கு நேராக வந்து அவர்களுக்கும் ஸலாம் கூறி, அவர்களுக்கும் அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்க பிரார்த்திக்க வேண்டும்.
5. மஸ்ஜிதுந் நபவீக்கு வருபவர் ஹதீஸில் வாக்களிக்கப்பட்ட பாரிய நன்மைகளை அடைந்து கொள்ளும் பொருட்டு அங்கு அதிகமாகத் தொழுகையில் ஈடுபட வேண்டும். அன்னார் கூறினார்கள் : “மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்”. (புஹாரி 1190, முஸ்லிம் 1394).
6. மதீனாவிலுள்ள குபா பள்ளி வாயிலில் தொழுவதற்காக அங்கு செல்வதும் ஸுன்னத்தாகும். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹ்ல் பின் ஹுனைப் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "யார் மஸ்ஜிது குபா ஆகிய இப்பள்ளிக்கு புறப்பட்டு வந்து அதில் தொழுகின்றாரோ அவருக்கு ஓர் உம்ராவிற்குச் சமமான நன்மை உண்டு". (நஸாஈ 699).
7. பகீஃ மண்ணறை, உஹத் போரின் வீரத் தியாகிகளது மண்ணறை போன்றவற்றையும் தரிசிப்பது ஸுன்னத்தாகும். ஏனெனில் நபி ஸல் அவர்கள் அவர்களைத் தரிசித்து அவர்களுக்காக பின்வருமாறு பிரார்த்திப்பார்கள் : "அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல்முஸ்லிமீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு ல லாஹிகூன். அஸ்அலுல்லாஹ லனா வ லகுமுல் ஆஃபிய்யா" (முஸ்லிம் 975).
8. இப்புனித நகரில் இயன்றளவு அல்லாஹ்வின் மார்க்கத்தில் உறுதியாகவும், அவனுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டும் இருக்க முழுமுயற்சி செய்வதுடன், பாவங்கள், நூதனங்களில் வீழ்ந்திடாமல் கடும் பிராயத்தனம் மேற்கொள்வதும் அவசியமாகும்.
9. மதீனாவில் மரங்களை வெட்டவோ, வேட்டையாடவோ கூடாது. இது பற்றி பல நபிமொழிகள் இடம்பெற்றுள்ளன. அதில் ஒன்று : "இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனித நகரமாக அறிவித்தார்கள். நான் மதீனாவின் இரு கருங்கல் மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியைப் புனிதமானதாக அறிவிக்கிறேன். அதன் முள்மரங்கள் வெட்டப்படக் கூடாது; அதன் வேட்டைப் பிராணிகள் வேட்டையாடப்படக் கூடாது". (முஸ்லிம் 1362).
10. ஒரு முஸ்லிம் மதீனாவில் இருக்கும் போது தான் ஈமான் எனும் ஜோதி சுடர்விட்டு, உலகின் நாலாபாகங்களுக்கும் அறிவு பரவிய ஓர் ஊரில்தான் இருக்கிறோம் என்பதை உணர வேண்டும். அல்லாஹ்வின் பக்கம் தெளிவாக இட்டுச்செல்லும் அறிவை இங்கு கற்க முயற்சிக்க வேண்டும், குறிப்பாக மஸ்ஜிதுந் நபவீயில் கல்வி தேடுவது இன்னும் சிறந்தது. நபி (ஸல்) அவர்கள் கூறியதைத் தான் கேட்டதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "நல்லதைக் கற்கும் நோக்கில், அல்லது கற்பிக்கும் நோக்கில் எமது இந்த மஸ்ஜிதில் நுழைந்தவர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவரைப் போலாவார். வேறு நோக்கங்களுக்காக நுழைந்தவர் தனக்குத் தேவையற்றைப் பார்ப்பவரைப் போலாவார்". (அஹ்மத் 10814).