கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் அல்குர்ஆன் ஓதுவதன் சட்டங்கள் மற்றும் ஒழுங்குகள்

அல்குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சாகும், அதனை ஓதும் அனைவரும் ஓதுவதன் சில சட்டங்கள், ஒழுங்குகளை அறிந்திருப்பது அவசியமாகும். இந்தச் சட்டங்கள், ஒழுக்கங்களின் சிலதை இப்பாடத்தில் கற்போம்.

அல்குர்ஆன் ஓதுவதன் சட்டங்கள், ஒழுங்குகளை அறிதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

அல்குர்ஆனை மனனமிடுவதன் சட்டம்

١
அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்வது ஒரு சமூகக் கடமையென்பது அனைத்து அறிஞர்களினதும் ஒருமித்த கருத்தாகும். முஸ்லிம்களில் போதியளவினர் அதனை மனனமிட்டால் ஏனையோருக்குக் குற்றமிருக்காது.
٢
அல்குர்ஆனில் தொழுகை செல்லுபடியாவதற்கு அவசியமான ஸூரா பாதிஹாவை ஓதுவது அனைத்து முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்.
٣
பொதுவாக ஒரு முஸ்லிம் அல்குர்ஆனில் தனக்கு முடியுமானதை அதிகமாக மனனமிடுவது விரும்பத்தக்கதாகும். அல்குர்ஆனை மனனமிடுவதில் பாரிய சிறப்புகளும் மகத்தான கூலியும் உண்டு.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆஇஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "அல்குர்ஆனை மனனமாக ஓதுபவர் கடமை தவறாத கண்ணியமிக்கத் தூதர்(களான வானவர்)களுடன் இருப்பார்". (புஹாரி 4937).

அல்குர்ஆன் ஓதுவதன் சட்டம்

ஒரு முஸ்லிம் தன்னால் முடியுமானளவு அல்குர்ஆனை அதிகமாக ஓத வேண்டும், அல்லாஹ் கூறுகின்றான் : "நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ - தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுகிறார்களோ - நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள்". (பாதிர் : 29).

அல்குர்ஆன் ஓதுவதை மௌனமாக செவிமடுப்பதன் சட்டம்

கடமையான தொழுகை மற்றும் குத்பாப் பேருரைகளில் அல்குர்ஆன் ஓதுவதை மௌனமாக செவிமடுப்பது முஸ்லிமின் கடமையாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "நீங்கள் அருள் புரியப்படுவதற்காக குர்ஆன் ஓதப்படும்போது அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாகக்) கேளுங்கள்; அப்பொழுது நிசப்தமாக இருங்கள்". (அஃராப் : 204).

அல்லாஹ்வின் வார்த்தைக்கு மதிப்பளித்து ஒழுக்கம் பேணும் பொருட்டு குர்ஆன் ஓதப்படும் ஏனைய நேரங்களிலும் மௌனித்து, செவிமடுப்படுது விரும்பத்தக்கதாகும்.

அல்குர்ஆன் அடிப்படையில் செயல்படுவதன் சட்டம்

அல்குர்ஆனை விசுவாசித்து, அதிலுள்ள ஹலாலை ஹலாலாகவும், ஹராத்தை ஹராமாகவும் ஏற்பதன் மூலம் அதன் சட்டங்களை அமுல்படுத்துவது, அதன் தடைகளைத் தவிர்ந்து, ஏவல்களை எடுத்து, அதன்படி செயல்படுவது அனைவர் மீதும் கடமையாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள் : "அல்குர்ஆனை ஓதி, அதனை மனனமிட்டு, அதிலுள்ள ஹலாலை ஹலாலாக ஏற்று, ஹராத்தை ஹராமாக ஏற்பவரை அல்லாஹ் சுவனத்தில் பிரவேசிக்கச் செய்கின்றான். தனது குடும்பத்திலிருந்து நரகிற்குச் செல்லவிருக்கும் பத்து பேர் விடயத்தில் இவரது பரிந்துரையை ஏற்கின்றான்". (திர்மிதீ 2905).

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாக அபூ அப்திர்ரஹ்மான் அஸ்ஸுலமீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : "நாம் நபி (ஸல்) அவர்களிடமிருந்து பத்து வசனங்களைக் ஓதக் கற்றால் அதிலுள்ள விடயங்களைக் கற்காமல் அடுத்த பத்து வசனங்களைக் கற்க மாட்டோம்". (ஹாகிம் 2047).

அல்குர்ஆனைப் புறக்கணிக்காமல் தொடர்ந்து ஓதுதல்.

குர்ஆனைத் தொடர்ந்து ஓதுவதன் மூலம் அதில் அதிக கரிசனை என்பது அவசியமாகும். அதனை மறக்காதிருக்கவும், புறக்கணிக்காது இருக்கவும் தினமும் சிறிதளவாயின் அல்குர்ஆன் ஓதுவது அவசியமாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "“என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள்” என்று (நம்) தூதர் கூறுவார்". (புர்கான் : 30).

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் : "குர்ஆனை (ஓதி அதை)க் கவனித்து வாருங்கள். ஏனெனில், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! கயிற்றில் கட்டிவைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தை விட மிக வேகமாகக் குர்ஆன் (நினைவிலிருந்து) தப்பக்கூடியதாகும்". (புஹாரி 5033).

அல்குர்ஆன் ஓதுவதன் ஒழுங்குகள்

நாம் ஓதும் குர்ஆன் ஏற்கப்படவும், அதற்கான கூலி கிடைக்கவும் ஓதும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள் சில உள்ளன. அவற்றுள் சில ஓதுவதற்கு முன்னரும், மற்றும் சில ஓதும் போதும் கடைபிடிக்க வேண்டும்:

அல்குர்ஆன் ஓதுவதற்கு முன்னர் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் :

١
அல்லாஹ்வின் திருப்தியையும், கூலியையும் எதிர்பார்ப்பதன் மூலம் ஓதும் போது அல்லாஹ்வுக்காக என்ற உளத்தூய்மையை வரவழைத்துக் கொள்ளல். அல்லாஹ் கூறுகின்றான் : "அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக அவனை அவர்கள் வணங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை". (பய்யினா : 05). இவ்வொழுக்கம் குர்ஆன் ஓதுவதற்கு முன்னர் கடைபிடிக்கப்பட வேண்டியதாயினும், ஓதும்போதும் இதனைக் கடைபிடிக்க வேண்டும்.
٢
சிறு, பெரு தொடக்குகளிலிருந்து தூய்மையாகுதல். அல்லாஹ் கூறுகின்றான் : "தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்". (வாகிஆ : 79).
٣
மிஸ்வாக் செய்து வாயைத் தூய்மைப் படுத்திக் கொள்ளல், ஏனெனில் வாயினால்தான் குர்ஆன் ஓதப்படுகின்றது. நபி(ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழும்போது பல் துலக்குவார்கள் என ஹுதைஃபா (ரலி) அறிவிக்கின்றார்கள். (புஹாரி 1136).
٤
ஓதும் போது கிப்லாத் திசையை முன்னோக்குவது சிறந்ததாகும், ஏனெனில் அதுதான் திசைகளில் மிக மகத்தானதாகும். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தலை உள்ளது. சபைகளின் தலையானது கிப்லாவை முன்னோக்குவதாகும்". (தபரானீ 2354. இதன் அறிவிப்பாளர் வரிசை ஹஸன் எனும் தரத்திலுள்ளது).
٥
ஓத முன் அஊது கூறி ஷைத்தானை விட்டும் பாதுகாப்புத் தேடிக்கொள்ள வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான் : "மேலும் (நபியே!) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) வெருட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடிக்கொள்வீராக". (நஹ்ல் : 98).
٦
ஒரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலிருந்து ஓதும் போது “பிஸ்மில்லாஹிர் ரம்மானிர் ரஹீம்” எனக் கூறுதல். அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே இருந்தார்கள். அப்போது அவர்கள் (திடீரென) உறங்கிவிட்டார்கள். (சிறிது நேரத்திற்குப்) பிறகு புன்னகைத்தவர்களாகத் தமது தலையை உயர்த்தினார்கள். அப்போது நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் சிரிக்கக் காரணம் என்ன? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், "சற்று முன் (குர்ஆனின் 108ஆவது அத்தியாயமான அல்கவ்ஸர் எனும்) ஓர் அத்தியாயம் எனக்கு அருளப்பெற்றது என்று கூறிவிட்டு அந்த அத்தியாயத்தை (பின்வருமாறு) ஓதிக் காட்டினார்கள்: "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். இன்னா அஃத்தைனாகல் கவ்ஸர். ஃபஸல்லி லி ரப்பிக்க வன்ஹர். இன்ன ஷானிஅக்க ஹுவல் அப்தர்" (கவ்ஸர் 1 -3)". (முஸ்லிம் 400).

ஓதும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் :

١
அல்குர்ஆனை நிதானமாக, நிறுத்தி நிறுத்தி ராகத்துடன் ஓதுதல். அல்லாஹ் கூறுகின்றான் : "மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக". (முஸ்ஸம்மில் : 4).
٢
அல்குர்ஆனைத் தஜ்வீதுடன் ஓதுதல். 'நபி(ஸல்) அவர்களின் ஓதுதல் முறை எப்படியிருந்தது?' என அனஸ் (ரலி) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கவர்கள், 'நீட்டி ஓதலே அவர்களின் வழக்கம் என்று கூறிவிட்டு, 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்பதில் 'பிஸ்மில்லா..ஹ்' என நீட்டுவார்கள், 'அர்ரஹ்மா..ன்' என்றும் நீட்டுவார்கள்; 'அர்ரஹ்மா..ன்' என்றும் நீட்டுவார்கள்; 'அர்ரஹீ...ம்' என்றும் நீட்டுவார்கள்'' என்று பதிலளித்தார்கள். (புஹாரி 5045).
٣
அழகிய குரலில் ஓதுதல். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பராஃ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "அல்குர்ஆனை நீங்கள் அழகிய குரலில் ஓதுங்கள்". (அபூ தாவூத் 1468).
٤
ரஹ்மத் பற்றிய வசனங்களின் போது அதனை அல்லாஹ்விடம் கேட்டல், தண்டனை பற்றிய வசனங்களின் போது அதனை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கேட்டல், தஸ்பீஹுடைய வசனங்களின் போது அவனைத் துதித்தல், ஸஜ்தா திலாவதின் வசனங்களின் போது ஸஜ்தா செய்தல். ஹுதைபா (ரலி) அவர்கள் நபியவர்களுடன் தொழுத தொழுகை பற்றி அறிவிக்கும் நபிமொழியில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது : "பிறகு ஆலு இம்ரான் எனும் (3ஆவது) அத்தியாயத்தை ஆரம்பித்து நிறுத்தி நிதானமாக ஓதினார்கள். அவற்றில் இறைவனைத் துதிப்பது பற்றிக் கூறும் வசனத்தை ஓதிச்செல்லும்போது (ஒதுவதை நிறுத்திவிட்டு), (சுப்ஹானல்லாஹ் - அல்லாஹ் தூயவன் என) இறைவனைத் துதித்தார்கள்; (இறையருளை) வேண்டுவது பற்றிக்கூறும் வசனத்தைக் கடந்து செல்லும்போது (ஓதுவதை நிறுத்திவிட்டு), (இறையருளை) வேண்டினார்கள். (இறை தண்டனையிலிருந்து) பாதுகாப்புக் கோருவது பற்றிக் கூறும் வசனத்தை ஓதிச் செல்லும்போது (ஓதுவதை நிறுத்திவிட்டு, இறைவனிடம்) பாதுகாப்புக் கோரினார்கள்". (முஸ்லிம் 772).
٥
ஸஜ்தா திலாவத்தின் வசனங்களைத் தாண்டும் போது ஸஜ்தா திலாவத் செய்வது விரும்பத்தக்கது. ஆஇஷா (ரலி) கூறுகின்றார்கள் : "நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையில் ஸஜ்தா திலாவதில் "ஸஜத வஜ்ஹீ லில்லதீ கலக்கஹு வ ஸவ்வரஹு, வ ஷக்க சம்அஹு வ பஸரஹு பிஹவ்லிஹீ வகுவ்வதிஹீ" என்று பல தடவைகள் கூறுவார்கள்". (அபூதாவூத் 1416).
٦
அல்குர்ஆன் ஓதும் போது உள்ளச்சம், அமைதி, கண்ணியத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான் : "(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் - அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்". (ஸாத் : 29).

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்