கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் நபி (ஸல்) அவர்களின் வரலாறு (2)

நபி (ஸல்) அவர்களுக்கு இறைச்செய்தி இறங்கியதும் அன்னாரின் வாழ்வு மாறிவிட்டது, மறுமை வரை புவியின் மேற்பரப்பே மாறிவிட்டது. இப்பாடத்தில் நபித்துவத்தின் பின் நபி (ஸல்) அவர்களின் வரலாற்றில் சிலவற்றைக் கற்போம்.

நபி (ஸல்) அவர்களின் நபித்துவம் முதல் அன்னாரின் மரணம் வரை நபிவரலாற்றில் முக்கிய நிகழ்வுகளை அறிதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

முஹம்மத் (ஸல்) அவர்கள் இஸ்லாமியத் தூது கொடுத்து அனுப்பப்படல்

நபி(ஸல்) அவர்களுக்குத் துவக்கத்தில் இறைச்செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று தெளிவாக இருக்கும். இவ்வாறு ஆறு மாதங்கள் கடந்து சென்ற பின் வஹீ இறங்க ஆரம்பித்தது.

நபி (ஸல்) அவர்களுக்கு நாற்பது வயது நெருங்கியதும் தனிமையிலிருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. ஹிரா குகையில் அவர்கள் ரமழான் மாதத்தைக் கழித்தார்கள். அங்கே அவர்கள் தனித்திருந்து அல்லாஹ்வை வணங்குவார்கள். இவ்வாறு அன்னார் மூன்று வருடங்கள் இருந்த போது ஒரு தனிமை சந்தர்ப்பத்தில் அன்னாருக்கு வஹீ வந்தது.

நாற்பது வயது பூரணமாகியதும் நபித்துவ ஒளி பிரகாசிக்க ஆரம்பித்தது. அல்லாஹ் தனது தூதைக் கொண்டு அன்னாரை கண்ணியப்படுத்தி, தனது படைப்பினங்குத் தூரதராக அனுப்பினான். தனது கண்ணியத்தின் மூல் பிரத்தியேக அதிகாரத்தை வழங்கி, தனக்கும் தனது அடியார்களுக்கும் இடையில் தனது நம்பிக்கையாளராக அவர்களை அல்லாஹ் ஆக்கினான். அல்லாஹ்வின் கட்டளைப் பிரகாரம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள். அகிலத்தாருக்கோர் அருட்கொடையாகவும், அனைவருக்கும் நற்செய்தி வழங்குபவராகவும், எச்சரிப்பவராகவும் அனுப்பினான்.

மக்காவில் நபியவர்களின் அழைப்புப் பணி

“(போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே!, நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக". (முத்தஸ்ஸிர் : 1, 2) என்ற வசனத்தின் மூலம் இத்தூதை எத்திவைக்கும் படி தனது இரட்சகனின் ஏவல் நபியவர்களுக்குக் கிடைத்த போது அல்லாஹ்வை மாத்திரம் வணங்குவதற்காகவும், அல்லாஹ் தன்னை அனுப்புய இம்மார்க்கத்தைப் பின்பற்றவும் மக்களை அழைக்கலானார்கள்.

இரகசிய அழைப்புப் பணி

நபிகள் (ஸல்) அவர்கள், மக்காவாசிகளை எரிச்சலடையச் செய்யும் ஒன்றைக் கொண்டு திடீரென அவர்களை எதிர்நோக்கக் கூடாது என்பதற்காக, இரகசியமாக இஸ்லாத்திற்கு அழைப்பு விடுக்கத் தொடங்கினார்கள். தனது குடும்பத்தவர், நண்பர் வட்டாரங்களில் மிக நெருக்கமானவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துரைக்க ஆரம்பித்தார்கள். சத்தியம், நலவுகளை நேசிப்போராகத் தான் அடையாளம் காணுவோரிடமும் எடுத்துரைத்தார்கள்.

முதலில் இஸ்லாத்தை ஏற்றவர்.

முதலில் இஸ்லாத்தை ஏற்றோர் அன்னாருடைய மனைவி கதீஜா (ரலி), தோழர் அபூ பக்ர் (ரலி), பெரிய தந்தையின் புதல்வர் அலீ பின் அபீ தாலிப் (ரலி), அடிமை ஸைத் பின் ஹாரிஸ் (ரலி) ஆகியோராவர்.

பகிரங்க அழைப்புப் பணி

பின்பு “ஆதலால் உமக்குக் கட்டளையிடப் பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக; இணைவைத்து வணங்குபவர்களை புறக்கணித்துவிடுவீராக!". (ஹிஜ்ர் : 94) என்ற வசனத்தின் மூலம் இத்தூதை பகிரங்கமாக எத்திவைக்கும் படி அல்லாஹ்வின் ஏவல் வந்தது. எனவே அல்லாஹ் ஏவியபடி நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய அழைப்பை வெளிப்படுத்தி, சத்தியத்தை வெளிப்படையாகவே கூறலானார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அழைப்புப் பணியை பகிரங்கப்படுத்தியதும் குரைஷித் தலைவர்கள் முஸ்லிம்களை உதறித் தள்ளவும், அவர்களை மனதளவில் பலவீனப்படுத்தவும், இஸ்லாமியப் போதனைகளை சிதைக்கவும் பரிகசித்தல், இழிவுபடுத்துதல், எள்ளி நகையாடுதல், பொய்ப்பித்தல் போன்ற பல வழிகளில் இப்பணியைப் புறக்கணித்து, தடுத்து நிறுத்த முற்பட்டனர். மேலும் சந்தேகங்களை கிளறுதல், பொய்ப்பிரச்சாரங்களை முடுக்கிவிடுவதல், குறித்த சில கிரயங்களுக்காக இப்பணியை விடுமாறு நபியவர்களிடம் பேரம் பேசுதல் போன்ற வழிகளையும் கையாண்டு பார்த்தனர்.

எத்தியோப்பியாவுக்குப் புலம்பெயர்தல்.

மேற்கண்ட வழிமுறைகள் எந்தவொன்றும் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை, நபி (ஸல்) அவர்கள் தனது அழைப்புப் பணியில் தொடர்ந்து செல்கின்றார்கள் என்பதைக் கண்ட இணைவைப்பாளர்கள் இஸ்லாத்துடன் போரிடத் தீர்மானித்தனர். நபி (ஸல்) அவர்களையும், அவர்களுடன் ஈமான் கொண்ட தோழர்களையும் துன்புறுத்தி, சித்திரவதை செய்ய ஆரம்பித்தனர். அவர்களுடைய நோவினை கடுமையாகிய போது நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு எத்தியோப்பியா நாட்டிற்குப் புலம் பெயருமாறு பணித்தார்கள். நபித்துவம் ஐந்தாம் ஆண்டில் ஆண்கள், பெண்கள் என இரு பாலருமாக ஒரு தொகையினர் அங்கு புலம் பெயர்ந்து சென்றனர்.

இஸ்ராஃ மிஃராஜ்

நபி(ஸல்) அவர்களின் அழைப்புப்பணி வெற்றிக்கும் துன்புறுத்தலுக்கும் இடையிலான பாதையை உருவாக்கும் இந்த கட்டத்தில் இருந்தபோது இஸ்ராஃ மிஃராஜ் எனும் இராப்பயணம் நிகழ்ந்தது. நபி (ஸல்) அவர்களை ஸ்திரப்படுத்தவும், நீண்ட கால அழைப்புப் பணிக்காகவும், அதன்போது இணைவைப்பாளர்களிடமிருந்து ஏற்பட்ட துன்புறுத்தல், மறுப்பு, குரோதம் போன்றவற்றைப் பொறுமையுடன் எதிர்கொண்டதற்காகவும் அன்னாரை கண்ணியப்படுத்துவதற்காகவே இந்நிகழ்வு நடந்தது.

மக்காவிற்கு வெளியில் அழைப்புப் பணி

மக்காவிற்கு வெளியிலும் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எடுத்துரைத்தார்கள். தாஇப் நகரிற்குச் சென்று, அங்கு எதிர்ப்பையும், புறக்கணிப்பையும் கண்ட போது மக்காவிற்கே திரும்பினார்கள். ஹஜ் பருவத்தில் கோத்திரங்கள் மற்றும் தனிநபர்களுக்கு இஸ்லாத்தை முன்வைத்தார்கள்.

அகபா உடன்படிக்கை

நபித்துவத்தின் பதினொறாவது ஆண்டு ஹஜ்ஜுடைய காலத்தில் நபி (ஸல்) அவர்கள் பிற்காலத்தில் மதீனாவெனப் பெயரிட்ட யஸ்ரிப் நகரைச் சேர்ந்த ஆறு நபர்களை சந்தித்து, அவர்களுக்கு இஸ்லாத்தை முன்வைத்து, அதன் யதார்த்தத்தைத் தெளிவுபடுத்தினார்கள். அல்லாஹ்வின்பால் அழைப்பு விடுத்து, அல்குர்ஆனையும் ஓதிக் காட்டினார்கள். அவர்களும் நபி (ஸல்) அவர்களின் கையில் இஸ்லாத்தைத் தழுவினார்கள். பின் ஊருக்குத் திரும்பி தமது சமூகத்திற்கும் அழைப்பு விடுத்தார்கள். அவர்களுக்கு மத்தியில் இஸ்லாம் பரவியது. பின்னர் நபித்துவத்தின் பன்னிரண்டாம் ஆண்டு ஹஜ் பருவத்தில் முதலாவது அகபா உடன்படிக்கை நடந்தேறியது. அதனைத் தொடர்ந்து நபித்துவத்தின் பதின்மூன்றாம் ஆண்டு இரண்டாவது அகபா உடன்படிக்கையும் நடந்தேறியது. இவை இரகசியமாகவே நடந்தது. உடன்படிக்கை பூர்த்தியானதும் தம்முடனிருந்த முஸ்லிம்களுக்கு மதீனாவிற்குப் புலம்பெயர்ந்து செல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் பணித்தார்கள். எனவே அவர்கள் சிறு சிறு குழுக்களாகச் வெளியேறிச்சென்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில்

முஸ்லிம்களில் அனேகமானவர்கள் மக்காவிலிருந்து புலம்பெயர்ந்த பின் நபி (ஸல்) அவர்களும் அபூ பக்ர் (ரலி) அவர்களும் மதீனா நோக்கி புலம்பெயர்ந்து சென்றார்கள். இருப்பினும் தமது விடயத்தை குரைஷிகள் அறியாமலிருக்க வழமையான விட்டு, மாற்று பாதையிலேயே இருவரும் சென்றனர். ஸவ்ர் எனும் குகையில் மூன்று தினங்கள் தங்கிவிட்டு, பின் அவர்கள் செங்கடல் கடற்கரைக்கு அருகில் மக்களுக்கு அறிமுகமில்லாத சாலை வழியாக மதீனாவை நோக்கி புறப்பட்டனர். இருவரும் மதீனாவின் புறநகரை அடைந்த போது மகிழ்ச்சியும், இன்பமும் நிறைந்த ஓர் ஆரவாரமான ஊர்வல்த்தில் முஸ்லிம்கள் அவர்களை வரவேற்றனர்.

மதீனாவை வந்தடைந்த நபி (ஸல்) அவர்கள் முதலில் மேற்கொண்ட காரியம் மஸ்ஜிதுந் நபவியை நிர்மாணித்ததும், மதீனா மக்களாகிய அன்ஸாரிகளுக்கும், புலம்பெயர் மக்கா வாசிகளான முஹாஜிர்களுக்கும் மத்தியில் சகோதரத்துவத்தை ஏற்படுத்தியதுமாகும். அதன் மூலம் புதியதொரு முஸ்லிம் சமூகத்திற்கான அஸ்திவாரத்தை நட்டார்கள்.

மதீனாவிற்குப் புலம்பெயர்ந்து சென்ற பின் ஸகாத், நோன்பு, ஹஜ், அறப்போர், அதான், நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் போன்ற இஸ்லாமிய சட்ட திட்டங்கள் தொடர்ச்சியாக இறங்கத் தொடங்கின.

நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட போர்கள்

முஸ்லிம்கள் தமது மார்க்கத்தையும், நாட்டையும் பாதுகாக்கவும், நிலையான இஸ்லாமியத் தூதைப் பரப்பவும் அல்லாஹ் அவர்களுக்கு எதிரிகளுடன் போரிட அனுமதி வழங்கினான். அவன் கூறுகின்றான் : "போர் தொடுக்கப்பட்டோருக்கு - அவர்கள் அநியாயம் செய்யப் பட்டிருக்கின்றார்கள் என்பதனால் (அவ்வாறு போர் தொடுத்த காஃபிர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு) அனுமதி அளிக்கப் பட்டிருக்கிறது". (ஹஜ் : 39). போருக்கு அனுமதி வழங்கிய முதலில் இறங்கிய வசனம் இதுவே. நபி (ஸல்) அவர்கள் 27 யுத்தங்களில் நேரடியாகக் கலந்து கொண்டதுடன் 56 படைகளையும் அனுப்பியுள்ளார்கள்.

ஹிஜ்ரத் பயணத்திற்குப் பின் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் சில

மதீனாவிற்கான ஹிஜ்ரத் பயணத்திற்குப் பின் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் சிலதின் சுருக்கம் வருமாறு

ஹிஜ்ரி முதலாம் ஆண்டு

١
ஹிஜ்ரத் பயணம் (புலம் பெயர்தல்)
٢
மஸ்ஜிதுந் நபவி நிர்மாணிக்கப்படல்.
٣
முதல் இஸ்லாமிய அரசின் அடித்தளத்தை அமைத்தல்

ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு

ஸகாத், நோன்பு ஆகிய கடமைகள் விதியாகுதல், பத்ரு போர். அதிலே அல்லாஹ் முஸ்லிம்களைக் கண்ணியப்படுத்தி, குரைஷிக் காபிர்களுக்கு எதிராக அவர்களுக்கு உதவி செய்தான்.

ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டு

உஹதுப் போர், அதிலே கனீமத் பொருட்களை சேகரிப்பதற்காக மலையில் நிறுத்தப்பட்ட அம்பெறியும் வீரர்கள் இறங்கியதன் மூலம் நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு மாறு செய்ததன் விளைவாக முஸ்லிம்களுக்குத் தோல்வி ஏற்பட்டது.

ஹிஜ்ரி நான்காம் ஆண்டு

பனூ நழீர் யுத்தம், இதில் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டமைக்காக பனூ நழீர் எனும் யூதர் வர்க்கத்தினரை மதீனாவை விட்டும் வெளியேற்றினார்கள்.

ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டு

பனுல் முஸ்தலக், கன்தக் அகழ், பனூ குரைழா ஆகிய யுத்தங்கள்.

ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு

முஸ்லிம்களுக்கும் குரைஷியருக்கும் இடையிலான ஹுதைபியா ஒப்பந்தம்

ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு

கைபர் போர். மேலும் இவ்வருடத்தில்தான் நபி (ஸல்) அவர்களும், தோழர்களும் மக்காவினுள் பிரவேசித்து, முந்திய வருடம் ஹுதைபியாவினால் தவறிய உம்ரா வணக்கத்தை நிறைவேற்றினார்கள்.

ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு

முஸ்லிம்களுக்கும் ரோமர்களுக்கும் இடையிலான முஃதா யுத்தம், மக்கா வெற்றி, மற்றும் ஹவாஸின், ஸகீஃப் கோத்திரங்களுக்கு எதிரான ஹுனைன் யுத்தம் ஆகியன.

ஹிஜ்ரி ஒன்பதாம் ஆண்டு

நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட இறுதி யுத்தமாகிய தபூக் போர். இவ்வாண்டில் பல குழுக்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி வந்து, அல்லாஹ்வின் மார்க்கத்தில் கூட்டங் கூட்டமாக நுழைந்தார்கள். இதனால் இவ்வருடத்திற்கு ஆமுல் வுபூத் (குழுக்கள் ஆண்டு) எனப் பெயரிடப்பட்டது.

ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு

ஹஜ்ஜதுல் வதாஃ. இதில் நபி (ஸல்) அவர்களுடன் இணைந்து ஒரு இலட்ச்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஹஜ் வணக்கத்தை நிறைவேற்றினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மரணம்

அழைப்புப் பணி பூர்த்தியடைந்து, அரேபியத் தீபகற்பத்தின் பல பகுதிகளிலும் இஸ்லாம் பரவி, மக்கள் சாரி சாரியாக இஸ்லாத்தில் நுழைந்து, உலகுமெங்கும் இஸ்லாம் பரவுவதற்கான சமிக்ஞைகள் தென்பட ஆரம்பித்து, அனைத்து மார்க்கங்களை விட இஸ்லாம் மிகைத்த போது நபி (ஸல்) அவர்கள் தமது காலம் முடிவடைவதை உணர்ந்தார்கள். எனவே தனது இரட்சகனை சந்திப்பதற்காக தயாரானார்கள். அழிந்து போகும் இவ்வுலக வாழ்க்கைக்குப் பிரியாவிடை கொடுக்கும் அறிகுறிகள் அன்னாரது சொற்களிலும், செயற்களிலும் வெளிப்பட்டன.

ஹிஜ்ரி பதினோறாம் ஆண்டு ரபீஉல் அவ்வல் மாதம் பன்னிரண்டாம் நாள் ஒரு திங்கட்கிழமை நபி (ஸல்) அவர்கள் இவ்வுலகிற்குப் பிரியாவிடை கொடுத்து இறைவனடி சேர்ந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தனது 63வது வயதில் மரணித்தார்கள். அதில் நபித்துவத்திற்கு முன்னர் 40 வருடங்களும், நபியாக, இறைத்தூதராக 23 வருடங்களும் வாழ்ந்தார்கள். அந்த இருபத்துமூன்று வருடங்களில் 13 வருடங்கள் மக்காவிலும், 10 வருடங்கள் மதீனாவிலும் கழித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள்தான் மரணித்தார்கள். ஆனால் அன்னார் கொண்டுவந்த இம்மார்க்கம் நிலைத்திருக்கின்றது. எந்தவொரு நல்ல விடயத்தையும் இச்சமூகத்திற்குக் காட்டித்தரமால் விடவில்லை, எந்தத் தீய விடயத்தையும் விட்டு இச்சமூகத்தை எச்சரிக்காமல் இருக்க வில்லை. அன்னார் காட்டித்தந்த நல்ல விடயங்களாவன ஓரிறைக் கொள்கை மற்றும் அல்லாஹ் நேசித்து, பொருந்திக் கொள்ளும் அனைத்து விடயங்களுமாகும். அன்னார் எச்சரித்த தீய விடயங்களாவன இணைவைப்பும், அல்லாஹ் வெறுக்கக் கூடிய அனைத்து விடயங்களுமாகும்.

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்