கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் முஸ்லிம் பெண்ணின் தூய்மை

முஸ்லிம் பெண்ணின் தூய்மையுடன் தொடர்பான சட்டங்களை இப்பாடத்தில் கற்போம்,

  • பெண் தனது சுத்தம் தொடர்பான சட்ட திட்டங்களைக் கற்பதன் மார்க்க சட்டத்தைத் தெளிவுபடுத்தல்.
  • ஜனாபத்து, மாதவிடாய், பிரசவ இரத்தம் மற்றும் அவற்றுடன் தொடர்பான சில சட்டங்களை அறிமுகப்படுத்தல்.
  • மாதவிடாய், பிரசவ இரத்தமின்றி ஒரு பெண்ணிடமிருந்து வெளிப்படும் வேறு திரவங்களின் சட்டங்களைத் தெளிவுபடுத்தல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

மாதவிடாய், தொடருதிரப்போக்கு, பிரசவ இரத்தம் போன்ற பெண்ணுடன் தொடர்பான சட்டங்கள் பற்றி அறிந்துகொள்ளும்படி முஸ்லிம் பெண்ணிற்கு இஸ்லாம் கட்டாயப்படுத்தியுள்ளது.

ஒரு பெண் அறிந்து, செயல்படுத்த வேண்டிய விடயங்களாவன :

١
ஜனாபத்திற்காகக் குளித்தல்
٢
மாதவிடய் நின்றதும் குளித்தல்
٣
பிரசவ இரத்தம் நின்றதும் குளித்தல்.

ஜனாபத்துக்காக குளித்தல்

மொழி ரீதியாக ஜனாபத்து என்பது தூரமாகுதல் என்பதைக் குறிக்கின்றது. இஸ்லாமிய சட்ட வழக்கில் ஜுனுபாளி என்பவர் விந்து வெளியானவர், அல்லது உடலுறவு கொண்டவராகும். இச் சொல் ஆண், பெண் இரு பாலருக்கும் பிரயோகிக்கப்படுகின்றது. தூய்மையடையும் வரை தொழுமிடங்களை நெருங்காமல் தூரமாகும் படி ஏவப்பட்டுள்ளதால் இவர்களுக்கு ஜுனுபாளி எனும் பெயர் கூறப்பட்டுள்ளது. ஜனாபத்திலிருந்து குளித்து சுத்தமாகுதல் கடமையாகும், அல்லாஹ் கூறுகின்றான் : "நீங்கள் பெருந்தொடக்குடையோராக இருந்தால் குளித்துக் கொள்ளுங்கள்". (மாஇதா : 6).

மாதவிடாய் நின்றதும் குளித்தல்

முஸ்லிம் பெண் தனது மாதவிடாய் நின்றதும் குளிப்பது கடமையாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது ஓர் உபாதையாகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.". (பகரா : 222). "அவர்கள் தூய்மையடைந்த பின்" எனும் வார்த்தை குளித்தலையே குறிக்கின்றது,

மாதவிடாயும் தொடருதிரப்போக்கும்

பிரசவம், நோய் போன்ற வெளிக்காரணிகள் ஏதுமின்றி ஒரு பெண்ணின் கருவிலிருந்து ஆரோக்கிய நிலையில் வெளிப்படும் இரத்தமே மாதவிடாய் எனப்படுகின்றது. நோய், இயல்புநிலை பாதிப்பு போன்ற காரணிகளால் வழமைக்கு மாறான காலங்களில் பெண்ணின் கருவறையிலிருந்து இரத்தம் வழிவது தொடருதிரப் போக்காகும்.

பெண்களின் நிலைகள், சூழல்களின் மாற்றங்களுக்கு ஏற்ப அவர்களின் மாதவிடாய்க் காலமும் வேறுபடுகின்றது. அதில் அதிகபட்ச காலம் பதினைந்து நாட்கள் என்பது அதிகபட்ச அறிஞர்களின் கருத்தாகும். அதற்கு மேலதிகமாக வரும் உதிரப்போக்கு இஸ்திஹாழா எனப்படும் தொடருதிரப்போக்காகும், அது மாதவிடாய் இரத்தமல்ல. எனினும் பெரும்பாலும் ஆறு அல்லது ஏழு நாட்களே அது நீடிக்கின்றது.

பிரசவ இரத்தம் நின்றதும் குளித்தல்

பிரசவ இரத்தம் ஏற்பட்ட பெண்கள் அது நின்றதும் குளிப்பது கடமையாகும்,என்பது அனைத்து அறிஞர்களின் ஒருமித்த கருத்தாகும்,

பிரசவ இரத்தம்

இது குழந்தை பிரசவித்ததன் பின்னர், அல்லது அதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் வலியுடன் ஒரு பெண்ணிடமிருந்து வெளிப்படும் இரத்தமாகும். இது பிரசவத்திற்காகவும், அதன்பின் சுமார் நாற்பது நாட்களுக்கும் கருப்பை வெளிப்படுத்தும் இரத்தப்போக்காகும். பிரசவ இரத்தம் நீடிக்கும் காலம் பெரும்பாலும் நாற்பது நாட்களாகும், அதன் குறைந்த பட்ச அளவிற்கு வரையறை கிடையாது. எப்போது அப்பெண் தூய்மடையந்திருப்பதைக் காண்கிறாளோ அப்போது குளித்து, தொழ ஆரம்பித்து விட வேண்டும்.

மாதவிடாய் மற்றும் பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சட்டங்கள்

١
உடலுறவு கொள்வது ஹராமாகும்.
٢
விவாகரத்துச் செய்வது ஹராமாகும்.
٣
தொழுவதும், நோன்பு நோற்பதும் ஹராமாகும்.
٤
கஃபாவை வலம் வருவது ஹராமாகும்.
٥
அல்குர்ஆனைத் தொடுதல் ஹராமாகும்.
٦
பள்ளிக்குள் தரித்து நிற்றல் ஹராமாகும்.

உடலுறவு கொள்வது ஹராமாகும்

ஒருவர் மாதவிடாய் நிலையிலுள்ள தனது மனைவியுடன் உறவு கொள்வது ஹராமாகும். அதற்கான ஆதாரம் பின்வரும் இறைவசனமாகும் : மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.” (பகரா : 222) . அதேபோன்று தான் பிரசவ இரத்தமுள்ள பெண்ணுடன் உறவு கொள்வதும் ஹராம் என்பது அறிஞர்களின் ஒருமித்த கருத்தாகும்.

விவாகரத்துச் செய்வது ஹராமாகும்

அதற்கான ஆதாரம் பின்வரும் இறைவசனமாகும் : "நபியே! நீங்கள் பெண்களைத் “தலாக்” சொல்வீர்களானால் அவர்களின் “இத்தா”வைக் கணக்கிட ஏற்ற வகையில் (மாதவிடாய் அல்லாத காலங்களில்) தலாக் கூறுங்கள். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்” (தலாக் : 01). அதாவது மாதவிடாய், பிரசவ இரத்தத்தின் போதோ, சுத்தமான நாட்களில் உடலுறவு கொண்டு, கருத்தரித்திருப்பது தெளிவாகாத நிலையில் விவாகரத்துக் கூற வேண்டாம்.

தொழுவதும், நோன்பு நோற்பதும் ஹராமாகும்.

அதற்கான ஆதாரம் பின்வரும் நபிமொழியாகும் : ''ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா? அதுதான் மார்க்கத்தில் அவளுக்குள்ள குறைபாடாகும்''. (புஹாரி 1951).

கஃபாவை வலம் வருவது ஹராமாகும்.

அதற்கான ஆதாரம் பின்வரும் நபிமொழியாகும் : நபியவர்கள் ஆஇஷா (ரலி) அவர்களுக்கு ஹஜ்ஜில் மாதவிடாய் ஏற்பட்ட போது : "'இந்த மாதவிடாய் ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே நீர் சுத்தமாகும் வரை கஃபாவை வலம்வருவதைத் தவிர்த்து ஹாஜிகள் செய்கிற மற்ற அனைத்தையும் செய்து கொள்” என்றார்கள். (புஹாரி 305, முஸ்லிம் 1211).

அல்குர்ஆனைத் தொடுதல் ஹராமாகும்.

இது "சுத்தமானவர்களைத் தவிர அதனைத் தொட மாட்டார்கள்" (வாகிஆ : 79) என்ற குர்ஆன் வசனத்திற்கமையவாகும். வலுவான கருத்தின் பிரகாரம் ஜுனுபாளிக்கு மாற்றமாக மனனமாக அல்குர்ஆன் ஓதலாம். ஜுனுபாளி குளிக்கும் வரை ஓத முடியாது. அல்குர்ஆனை மீட்டுதல், கற்பித்தல் போன்ற தேவைகள் மாதவிடாய், பிரசவ இரத்தப் பெண்களுக்கு ஏற்பட்டால் கையுறை, டிஷூகள், துணிகள் போன்றவற்றால் அல்குர்ஆனைத் தொடலாம்.

பள்ளிக்குள் தரித்து நிற்றல் ஹராமாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "மாதவிடாய் பெண்ணுக்கும், ஜுனுபாளிக்கும் நான் பள்ளியை அனுமதிக்க மாட்டேன்" . (அபூ தாவூத் 232). அதனைக் கடந்து செல்லல், அல்லது நிர்ப்பந்தத்திற்காக உள்ளே நுழைதல் போன்றன ஆகுமாகும். ஆஇஷா (ரலி) கூறினார்கள் : நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் பள்ளியிலிருந்து தொழும் விரிப்பை எடுத்து வரும்படி கூறிய போது நான் மாதவிடாய் நிலையில் உள்ளேன் எனக் கூறினேன். அப்போது நபியவர்கள் "உமது மாதவிடாய் மாதவிடாய் உமது கரத்திலல்ல" எனக் கூறினார்கள் . (முஸ்லிம் 298).

மாதவிடாய் கணக்கிலெடுக்கப்படும் சந்தர்ப்பங்கள்

١
பருவமடைதல்
٢
விவாகரத்து பெற்ற பெண் இத்தா அனுஷ்டித்தல்.

பருவமடைதல்

பருவமடைதலின் மூலமே மார்க்கத்தில் சட்டதிட்டங்கள் கடமையாகின்றன, ஒரு யுவதியின் பருவவயதிற்குரிய மிக உறுதியான அடையாளம் மாதவிடாயாகும்.

விவாகரத்து பெற்ற பெண் இத்தா அனுஷ்டித்தல்.

விவாகரத்துப் பெற்ற பெண் வழமையாக மாதவிடாய் ஏற்படுபவளாக இருந்தால் அவளது இத்தாக் கால முடிவு மூன்று மாதவிடாய் சுழற்சியை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றது. அல்லாஹ் கூறுகின்றான் : "தலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று "குர்உ"கள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும்" (பகரா : 228).

பெண் மாதவிடாயிலிருந்து சுத்தமாகிவிட்டதை அறியும் முறை

١
வெள்ளை படுதல்
٢
இரத்தம் நின்று, உலர்தல்

வெள்ளை படுதல்

இது பெரும்பாலும் மாதவிடாயிலிருந்து தூய்மையாகும் காலத்தில் பெண் காணும் வெள்ளை நூலை ஒத்த சுரப்பியாகும். இது பெரும்பாலும் மாதவிடாயிலிருந்து தூய்மையாவதற்குரிய அறிகுறியாகும்.

இரத்தம் நின்று, உலர்தல்

இது ஒரு பெண் துணித் துண்டொன்றை தனது மர்ம உறுப்பில் நுழைவித்துப் பார்க்கும் போது இரத்தமோ, பழுப்பு, மஞ்சள் நிறத் திரவமோ அத்துணியில் படாதிருப்பதாகும்.

குளிப்பின் கடமைகள்

குளிப்புக்கு இரண்டு கடமைகள் உள்ளன, ஒன்று நிய்யத் வைத்தல், மற்றது சுத்தமான நீர் மூலம் முழு உடலையும் நனைத்தலாகும். முழு உடலும் எனும் போது அது தோல், முடி, நகம், என அனைத்துப் பாகங்களிலும் நீர் படுமாறு குளிப்பதாகும். முடிகள் மென்மையா இருந்தாலும், அடர்த்தியாக இருந்தாலும் அதற்குக் கீழுள்ள சருமத்திற்குச் சேருமாறு நீரை ஊற்ற வேண்டும்.

குளிப்பு முறை

குளிப்பு முறை பற்றி நபிமொழியில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது. ஆஇஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "அஸ்மா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், மாதவிடாய்க் குளியல் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உங்களில் ஒருவர் (மாதவிடாய்க் குளியலின் போது) தண்ணீரையும் இலந்தை இலைகளையும் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள்ளட்டும். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி நன்றாகத் தேய்த்து தலையின் சருமம் நனையும்வரைக் கழுவட்டும். பிறகு உடம்புக்குத் தண்ணீர் ஊற்றட்டும். அதன் பின்னர் கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து சுத்தம் செய்துகொள்ளட்டும்" என்று சொன்னார்கள். அதற்கு அஸ்மா (ரலி) அவர்கள், அதை வைத்து அவள் எவ்வாறு சுத்தம் செய்வாள்? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்!). அதனால் சுத்தம் செய்துகொள்ளட்டும் என்று (மீண்டும்) சொன்னார்கள்.உடனே நான், இரத்தம் படிந்த இடத்தில் தடவிக்கொள் என்று -பிறர் காதில் விழாதவாறு அதை இரகசியமாகச்- சொன்னேன். மேலும், அஸ்மா நபி (ஸல்) அவர்களிடம், பெருந்தொடக்கிற்காகக் குளிக்கும் முறை பற்றிக் கேட்டார். அதற்கு அவர்கள்,தண்ணீர் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி தலையின் சருமம் நனையும் அளவுக்கு நன்கு தேய்த்துக்கொள். பின்னர் உன் (மேனியின்) மீது தண்ணீர் ஊற்று! என்றார்கள். ஆஇஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: பெண்களிலேயே மிகச் சிறந்தவர்கள் அன்சாரிப் பெண்களாவர். மார்க்கத்தை விளங்கிக் கொள்வதில் வெட்கம் அவர்களுக்குத் தடையாக இருந்ததில்லை.". (புஹாரி 314, முஸ்லிம் 332).

உடலின் ஏதாவதொரு பாகத்தில் தண்ணீர் படுவதைத் தடுக்கும் வகையில் இருக்கும் என்ன பொருளும் குளிப்பை பாதித்து, செல்லுபடியற்றதாக ஆக்கிவிடும். உதாரணமாக பெண்கள் நீர் படுவதைத் தடுக்கும் வகையிலுள்ள வண்ணப்பூச்சுகளைப் பூசுதல், அல்லது நகத்துக்குக் கீழ் அழுக்குகள் இருத்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

மஞ்சள் மற்றும் பழுப்பு நிற சுரப்பிகள்

மாதவிடாய்க்கு முன் அல்லது பின் பெண்ணின் மர்ம உறுப்பிலிருந்து சில சுரப்பிகள் வெளிப்படுகின்றன. அவை மாதவிடாயுடன் சேர்ந்தே வெளிப்பட்டால் அதன் சட்டமே இதற்கும் வழங்கப்படுகின்றது. எனவே தொழுகை உட்பட அக்காலத்தில் தவிர்ந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் விட்டுத் தவிர்ந்து கொள்ள வேண்டும். மாதவிடாய்க்காலத்துடன் சேர்ந்ததாக அது இல்லாவிட்டால் அதனால் தாக்கம் ஏதுமில்லை. உம்மு அதிய்யா (ரலி) கூறுகின்றார்கள் : சுத்தமடைந்ததன் பின் வெளிப்படும் பழுப்பு, மஞ்சள் நிறத் திரவங்களை நாம் பொருட்படுத்துவதில்லை. (புஹாரி 326, அபூதாவூத் 307, அவ்வார்த்தை அபூதாவூதிலிருந்து பெறப்பட்டதாகும்.)

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்