கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் இறுதி நாளை நம்புதல்

அல்லாஹ் மனிதர்களை மண்ணறைகளிலிருந்து மீண்டும் எழுப்பி, அவர்களை விசாரணைக்குட்படுத்தி, அவர்களது செயல்களுக்கேற்ப கூலி வழங்கும் நாளே இறுதி நாளாகும். இறுதி நாளை நம்புவது ஈமானின் தூண்களில் ஒன்றாகும். இத்தினத்துடன் தொடர்பான பல விடயங்களை இப்பாடத்தில் நாம் கற்போம்.

  • மறுமை நாளை எது, அது இருப்பதன் காரணம் என்பவற்றை அறிதல்.
  • மறுமையின் சில அடையாளங்களை அறிதல்.
  • மறுமை நாளை நம்புவதுடன் தொடர்பான சில விடயங்களை அறிதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

இந்தப் பாடத்தின் மொழிபெயர்ப்பு பின்வரும் மொழிகளில் கிடைக்கிறது:

இறுதி நாளை நம்புவதன் அர்த்தம்

அல்லாஹ் மனிதர்களை மண்ணறைகளிலிருந்து மீண்டும் எழுப்பி, சுவனவாதிகள், நரகவாதிகள் தத்தமது இருப்பிடங்களில் நிலைத்திருப்பதற்காக அவர்களை விசாரணை செய்து, அவர்களது செயல்களுக்கேற்ப கூலி வழங்குவான் என்பதை ஆணித்தரமாக உண்மைப்படுத்துதல். இறுதி நாளை நம்புவது ஈமானின் தூண்களில் ஒன்றாகும். அதுவன்றி ஈமான் செல்லுபடியாக மாட்டாது. அல்லாஹ் கூறுகின்றான் : "எனினும் நன்மை என்பது அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவதாகும்". (பகரா : 177).

எது இறுதி நாள் ?

இறுதி நாள் : மக்கள் விசாரணைக்காகவும், கூலி வழங்கப்படவும் மீளெழுப்பப்பட்டு, சுவனம் அல்லது நரகில் அவர்கள் நிலைத்திருக்கும் நாளேஇறுதி நாளாகும். இதற்குப் பின் வேறு நாட்களில்லை என்பதாலே இதற்கு இறுதி நாள் எனப் பெயரிடப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் தமது இரட்சகன் முன்னிலையில் ஆஜராகுவது முதல் பல பாரிய நிகழ்வுகள் அத்தினத்தில் நிகழ்வதால் கியாம நாள் எனவும் இத்தினத்திற்குப் பெயருண்டு. மேலும் அஸ்ஸாஅஃ, யவ்முல் பஸ்ல், யவ்முத் தீன் போன்று வேறு பெயர்களும் இத்தினத்திற்குண்டு.

இறுதி நாளை நம்புவதை அல்குர்ஆன் ஏன் வலியுறுத்திக் கூறியுள்ளது ?

மறுமையை நம்புவதை அல்குர்ஆன் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டி வலியுறுத்தியுள்ளது, அது நிச்சயமாக நிகழக்கூடியது என்பதை அரபு மொழியின் பல பாணிகளில் உறுதிப்படுத்தியுள்ளது, பல இடங்களில் அதனை அல்லாஹ்வை நம்புவதுடன் இணைத்துக் கூறியுள்ளது.

அல்லாஹ்வையும், அவனது நீதத்தையும் விசுவாசிப்பதில் மறுமையை விசுவாசிப்பது தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகும். அது எவ்வாறெனில் :

அல்லாஹ் ஒரு போதும் அநியாயத்தை அங்கீகரிப்பதில்லை, அநீதியிழைத்தவனைத் தண்டிக்காமலோ, அநீதியிழைக்கப்பட்டவனுக்கு நியாயம் வழங்கமலோ விடமாட்டான். நல்லவர்களுக்கு கூலி, வெகுமதிகள் வழங்காமல் விடவும் மாட்டான். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குரியதைக் கொடுத்து விடுவான். அநியாயக்காரனாகவே வாழ்ந்து, தண்டிக்கப்படாமல் அநியாயக்காரனகவே மரணிக்கும் பலரை இவ்வுலகில் நாம் காண்கிறோம், அதேபோன்று அநீதியிழைக்கப்பட்டவனாகவே வாழ்ந்து, நியாயம் கிடைக்காமல் அநீதியிழைக்கப்பட்டவனாகவே மரணிக்கும் பலரை இவ்வுலகில் நாம் காண்கிறோம், அவ்வாறெனில் அல்லாஹ் அநீதியை ஏற்க மாட்டான் என்பதன் அர்த்தம்தான் என்ன? நாம் தற்போது வாழும் வாழ்க்கையல்லாத வேறொரு வாழ்க்கை அவசியமென்பதே இதன் அர்த்தமாகும். நல்லவர்களுக்குக் கூலியும், கெட்டவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டு, ஒவ்வொருவரும் தமக்குரியதை எடுக்க வேறொரு காலக்கெடு அவசியமாகின்றது என்பதே இதன் அர்த்தமாகும்.

மறுமை நாளின் அடையாளங்கள்

மறுமை நாளின் அடையாளங்கள், அறிகுறிகளை நம்புவதும் மறுமையை நம்புவதில் உள்ளதாகும், இவை மறுமைக்கு முன் அது நெருங்குவதை சுட்டிக் காட்டும் விதத்தில் நடக்கும் சில நிகழ்வுகளாகும், இவ்வடையாளங்கள் இரு வகைப்படும் :

1. சிறிய அடையாளங்கள்

அவை மறுமைக்கு முன் வெவ்வேறு காலங்களில் நிகழும் சில அடையாளங்களாகும். காலணிகளில்லாத, முறையான ஆடைகளற்ற, வறியவர்களான ஆடுமேய்ப்போர் ஆடம்பரமாக கட்டிடங்களைக் கட்டுவதில் போட்டி போட்டுக் கொள்வதும் அது போன்ற அடையாளங்களில் ஒன்றாக நபிமொழிகளில் இடம் பெற்றுள்ளது. நபியவர்கள் கூறினார்கள் : 'மேலும் காலணிகளில்லாத, முறையான ஆடைகளற்ற, வறியவர்களான ஆடுமேய்ப்போர் ஆடம்பரமாக கட்டிடங்களைக் கட்டுவதில் போட்டி போட்டுக் கொண்டிருப்பதைப் பார்ப்பீர்கள்’. (ஆதாரம் : முஸ்லிம் 08).

2. பெரிய அடையாளங்கள்

அவை மறுமை நெருங்கும் போது நிகழும் பிரமாண்ட சம்பவங்களாகும். அவை 10 உள்ளன. ஹுதைஃபா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நாங்கள் (நபி (ஸல்) அவர்களது அறைக்குக் கீழே) பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களை எட்டிப்பார்த்து, "எதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். மக்கள், "மறுமை நாளைப் பற்றி (பேசிக் கொண்டிருக்கிறோம்)" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் (பெரிய) பத்து அடையாளங்களைக் காணாத வரை மறுமை நாள் ஏற்படவே செய்யாது" என்று கூறிவிட்டு, அந்த அடையாளங்களைப் பற்றிக் கூறினார்கள்: புகை, தஜ்ஜால், (பேசும்) பிராணி, மேற்கிலிருந்து சூரியன் உதிப்பது, மர்யமின் புதல்வர் ஈஸா (அலை) அவர்கள் இறங்குதல், யஃஜூஜ், மஃஜூஜ், மூன்று நில நடுக்கங்கள். ஒன்று கிழக்கிலும், மற்றொன்று மேற்கிலும், இன்னொன்று அரபு தீபகற்பத்திலும், இறுதியாக யமன் நாட்டிலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி மக்களை விரட்டிக்கொண்டு வந்து ஓரிடத்தில் ஒன்றுகூட்டும். (ஆதாரம் : முஸ்லிம் 2901).

இறுதி நாளை நம்புவதன் உள்ளடக்கம் எவை ?

ஒரு முஸ்லிம் இறுதி நாளை நம்புவதில் பல விடயங்கள் உள்ளடங்குகின்றன :

1. மீளெழுப்பப்பட்டு மக்கள் ஒன்று சேர்க்கப்படுவதை நம்புதல் :

இது மரித்தோர் மீளெழுப்பப்பட்டு, அவர்களது உயிர்கள் தத்தமது உடல்களுக்கு மீளனுப்பப்படுவதைக் குறிக்கின்றது. அப்போது மக்கள் தமது இரட்சகனிடம் ஆஜராகுவார்கள். பின் ஓரிடத்தில் அவர்கள் முதலில் படைக்கப்பட்ட தோற்றத்திலேயே பாதணியற்றவர்களாகவும், நிர்வாணிகளாகவும் ஒன்று சேர்க்கப்படுவார்கள். அல்குர்ஆன், ஸுன்னா, பகுத்தறிவு, , இயற்கை உணர்வு அனைத்தும் மீளெழுப்படும் இந்நிகழ்வை உறுதிப்படுத்துகின்றன. எனவே மண்ணறையிலிருப்பவர்களை அல்லாஹ் எழுப்புவான், உயிர்கள் அவற்றின் உடல்களுக்கு திருப்பப்படும், மக்கள் அனைவரும் இரட்சகனிடம் ஆஜராகுவார்கள் என்பதை நாம் நம்புதல் வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான் : “இதன் பிறகு நீங்கள் மரணிப்பவர்கள். பின்னர் கியாமத் நாளில் உயிர்ப்பிக்கப் படுவீர்கள்”. (முஃமினூன் : 15, 16). அனைத்து வேதங்களும் இதில் ஒருமித்துள்ளன. இதுதான் மதிநுட்பத்திற்கு உகந்ததுமாகும். ஏனெனில் அல்லாஹ் தனது படைப்பினங்களுக்கு தூதர்கள் மூலம் பணித்ததற்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்குவதற்காக காலக்கெடுவொன்றை ஏற்படுத்துவதுதான் நியாயமாகும். அல்லாஹ் கூறுகின்றான் : “உங்களை வீணாகப் படைத்துள்ளோம் என்றும் நம்மிடம் திரும்பக் கொண்டு வரப்படமாட்டீர்கள் என்றும் நினைத்து விட்டீர்களா? ”. (முஃமினூன் : 115).

2. விசாரணை, செயல்கள் நிறுக்கப்படும் தராசு என்பதை நம்புதல்

உலக வாழ்வில் படைப்பினங்கள் செய்த செயல்களைப் பற்றி அல்லாஹ் விசாரணை செய்வான். ஓரிறைக் கொள்கையை ஏற்று, அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் வழிப்பட்டவர்களுடைய விசாரணை இலகுவாக இருக்கும். இணைவைப்பாளர்கள், பாவிகளுடைய விசாரணை கடுமையாக இருக்கும்.

செயல்கள் ஒரு பிரமாண்ட தராசில் போடப்பட்டு நிறுக்கப்படும். நன்மைகள் ஒரு தட்டிலும், தீமைகள் மறு தட்டிலும் வைக்கப்படும். நன்மைகளின் தட்டு கனத்தவர் சுவனத்திலும், தீமைகளின் தட்டு கனத்தவர் நரகிலும் நுழைவர். உமது இரட்சகன் யாருக்கும் அநீதியிழைக்க மாட்டான். அல்லாஹ் கூறுகின்றான் : “கியாமத் நாளுக்காக நீதியான தராசுகளை நிறுவுவோம். எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகு விதை அளவே இருந்தபோதும் அதையும் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும்”. (அன்பியா : 47).

3. சுவனம், நரகம்

சுவனம் என்பது அல்லாஹ் தனக்கும், தனது தூதருக்கும் வழிப்பட்ட இறையச்சமுள்ள விசுவாசிகளுக்காக தயார்படுத்தியுள்ள நிரந்தர இன்பம் கொண்ட வீடாகும். ஒவ்வொரு அத்மாவும் விரும்பக்கூடிய, கண்குளிரக்கூடிய அனைத்து வித இன்பங்களும் பல வகைகளில் அங்கு உண்டு. தனக்கு வழிப்பட்டு, வானம் பூமியளவு விசாலமுள்ள சுவனத்தின் பக்கம் விரையுமாறு தூண்டி அல்லாஹ் பின்வருமாறு கூறுகினறான் : “உங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கும் மன்னிப்பிற்கும், வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கும் விரையுங்கள்! (இறைவனை) அஞ்சுவோருக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது”. (ஆல இம்ரான் : 133).

நரகம் என்பது நிரந்தர வேதனைக்குரிய இடமாகும். அல்லாஹ்வை நிராகரித்து, அவனது தூதருக்கு மாறு செய்த இறை நிராகரிப்பாளர்களுக்கு அதனை அல்லாஹ் தயார்படுத்தி வைத்துள்ளான். கற்பனைக்கெட்டாத தண்டனைகள், வேதனைகள், நோவினைகளில் பல வகைகள் அங்குண்டு. காபிர்களுக்காகத் தயார்படுத்தியுள்ள நரகைப் பற்றித் தனது அடியார்களுக்குப் பின்வருமாறு எச்சரிக்கின்றான் : “மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது”. (பகரா : 24).

இறைவா நாம் உன்னிடம் சுவனத்தையும் அதன்பால் நெருக்கமாக்கும் சொல், செயலையும் வேண்டுகின்றோம். மேலும் நரகையும், அதன்பால் இட்டுச் செல்லும் சொல், செயலையும் விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றோம்.

4. மண்ணறையின் இன்ப, துன்பங்கள்

மரணம் உண்மையானது என நாம் விசுவாசிக்கின்றோம். அல்லாஹ் கூறுகின்றான் : “உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும், “மலக்குல் மவ்து” தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் - பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும். (ஸஜ்தா : 11). இது எவ்வித ஐயமுமின்றி கண்கூடாகக் காணும் விடயமாகும். இயற்கையாகவோ, கொலை செய்யப்பட்டோ எக்காரணத்தினால் மரணித்தாலும் அது அவனது ஆயுள் முடிவின் அடிப்படையிலேயே நிகழ்கின்றது. அவனது ஆயுளிலிருந்து எதுவும் குறைக்கப்பட மாட்டாது. அல்லாஹ் கூறுகின்றான் : “அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணப் பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்”. (அஃராப் : 34). ஒருவர் மரணித்தவுடன் அவருடைய கியாமத் உருவாகி, மறுமையின் பக்கம் அவரது பயணம் ஆரம்பமாகி விடுகின்றது.

நிராகரிப்பாளர்கள், பாவிகளுக்கு மண்ணறையில் வேதனை இருப்பதாகவும், விசுவாசிகள், நல்லடியார்களுக்கு இன்பங்கள் இருப்பதாகவும் பல நபிமொழிகள் உள்ளன. அவற்றை நாம் நம்ப வேண்டும், அது எவ்வொறென நாம் ஆராயக் கூடாது. ஏனெனில் இது சுவனம், நரகம் போன்று மறைவான உலகுடன் தொடர்புபடுவதால் அதன் யதார்த்தத்தையோ, விதத்தையோ அறியும் சக்தி மனித அறிவுக்கில்லை. நாம் பார்க்கும் உலகில் ஒன்றுக்கொன்று நிகரானவை, மற்றும் சட்டதிட்டங்களிலேயே மனித அறிவால் ஒப்பீட்டாய்வு செய்து, தீர்மானிக்கலாம். மறைவான உலகில் அவ்வாறு பகுத்தறிவால் தீர்மானிக்க முடியாது.

அத்துடன் மண்ணறை நிகழ்வுகள் புலன்களால் உணர முடியாத மறைவான விடயங்களில் உள்ளதாகும். அவ்வாறு புலன்களால் அறிய முடியுமாயிருந்தால் மறைவானவற்றை நம்புதல் என்ற பகுதிக்கு இஸ்லாத்தில் எவ்விதப் பயனுமிருக்காது. மனிதர்களுக்கான சட்டதிட்டங்கள் நீங்கிவிடும், மக்கள் மரணித்தோரை அடக்காமல் விட்டுவிடுவார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “நீங்கள் மரணித்தோரை அடக்கம் செய்யாமலிருப்பீர்களென்றால் மண்ணறை வேதனையில் நான் கேட்பதை உங்களுக்கும் கேட்கச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்திருப்பேன்”. (முஸ்லிம் 2868, நஸாஈ 2058). மேற்கண்ட காரணிகள் கால்நடைகளிடம் இல்லையாதலால் அவை அவ்வேதனையை செவிமடுத்து, உணர்கின்றன. வானங்களையும் பூமியையும் படைத்தவன், அவர்களைப் போன்றவர்களைப் படைக்கச் சக்தியற்றவனா? ஆம் (சக்தியுள்ளவனே!) மெய்யாகவே, அவனே (பல வகைகளையும்) படைப்பவன்; யாவற்றையும் நன்கறிந்தவன். (யாஸீன் : 81).

மறுமையில் மீளெழுப்பப்படல் பற்றிய அல்குர்ஆன் ஆதாரங்கள் :

-

அல்லாஹ் மனிதர்களை முதன் முறையாகப் படைத்து விட்டான். ஒன்றை முதலில் படைக்க சக்தி பெற்றவனுக்கு அதே பொருளை மீட்டெடுக்க இயலாமலாகாது. அல்லாஹ் கூறுகின்றான் : "அவனே முதன்முறையாகப் படைத்து பின்னர் மீட்டுகின்றான்" (ரூம் : 27). மேலும் இத்துப்போன எழும்பை மீள உயிர்ப்பிப்பதை மறுத்தவனுக்கு பதிலளிக்குமாறு அல்லாஹ் நபிக்கு பின்வருமாறு ஏவுகின்றான் : “முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக! (யாஸீன் : 79).

பூமி செழிப்பற்று வரட்சியாக இருக்கும் போது அதில் மழை பொழிந்து அப்பூமி பச்சைப்பசேலென உயிர்பெறுகின்றது. அதில் அழகான அனைத்து வித பயிர்களும் முளைக்கின்றன. இறந்த பூமியை உயிர்ப்பிக்க சக்தி பெற்றவன் இறந்த மனிதர்களையும் உயிர்ப்பிக்க சக்தி பெறுகின்றான். அல்லாஹ் கூறுகின்றான் : அன்றியும், வானத்திலிருந்து மிக்க பாக்கியமுள்ள தண்ணீரை (மழையை) நாம் இறக்கி வைத்து, அதைக் கொண்டு தோட்டங்களையும், அறுவடை செய்யப்படும் தானியங்களையும் முளைப்பிக்கிறோம். அடுக்கடுக்கான பாளைகளைக் கொண்ட (குலைகளையுடைய) நெடிய பேரீச்ச மரங்களையும் (உண்டாக்கினோம்). (அவற்றின் கனிகளை) அடியார்களுக்கு உணவாக (அளிக்கிறோம்), மேலும், அதைக் கொண்டு இறந்து கிடந்த ஊரை (பூமியை) நாம் உயிர்ப்பிக்கிறோம், இவ்விதமே, (இறந்தவர்கள் உயிர்ப்பிக்கப் பெற்று) வெளியேறுதலும் இருக்கிறது. (காப் : 9- 11)

ஒரு பாரிய விடயத்தை செய்ய ஆற்றலுள்ளவன் அதை விடச் சிறிய எதனையும் செய்ய மிக மிக ஆற்றலுள்ளவன் என்பதை புத்தியுள்ள அனைவரும் அறிவர். அல்லாஹ் பிரமாண்டமான வியக்கத்தக்க இவ்வானங்கள், பூமி, கோல்களை எவ்வித முன்னுதாரணமும் இன்றி படைத்துள்ளான். எனவே இவற்றையெல்லாம் படைத்த அவன் இத்துப்போன எலும்பை மீண்டும் உயிர்ப்பிக்க மிக ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான். அல்லாஹ் கூறுகின்றான் :“வானங்களையும் பூமியையும் படைத்தவன், அவர்களைப் போன்றவர்களைப் படைக்கச் சக்தியற்றவனா? ஆம் (சக்தியுள்ளவனே!) மெய்யாகவே, அவனே (பல வகைகளையும்) படைப்பவன்; யாவற்றையும் நன்கறிந்தவன்”. (யாஸீன் : 81).

இறுதி நாளை நம்புவதால் கிடைக்கும் பயன்கள் :

1. ஒரு முஸ்லிம் சரியாக வழிநடத்தப்பட்டு, அர்ப்பணிப்புடன் இறையச்சத்தையும் நற்செயல்களையும் கடைபிடித்து, முகஸ்துதி, சுயநலம் போன்றவற்றிலிருந்து தூரமாகிடவும் இறுதி நாளை நம்புவது பாரிய பங்காற்றுகின்றது. இதனால்தான் பல இடங்களில் நற்செயல்களுடன் இறுதி நாளை நம்புவது தொடர்புபட்டுள்ளது. அல்லாஹ் கூறுகின்றான் : "நிச்சயமாக அல்லாஹ்வின் பள்ளிகளை பராமரிப்பதெல்லாம் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் விசுவாசிப்பவர்களே". (தவ்பா : 18). மேலும் கூறுகின்றான் : “எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இதை நம்புவார்கள். இன்னும் அவர்கள் தொழுகையைப் பேணுவார்கள்”. (அன்ஆம் : 92).

2. நல்லறங்களில் போட்டியிட்டு, அல்லாஹ்வுக்கு வழிப்படுவதன் மூலம் அவனை நெருங்கும் முயற்சியில் நேரத்தை பயன்படுத்தாமல் உலக விடயங்களில் மூழ்கி அலட்சியமாக இருப்போருக்கு வாழ்க்கையின் யதார்த்தத்தையும், மறுமைதான் நிரந்தர வசிப்பிடம் என்பதையும் உணர்த்துதல். அல்குர்ஆனில் அல்லாஹ் இறைத்தூதர்களைப் புகழ்ந்து, அவர்களது செயல்களைக் கூறும்போது அச்செயல்களின் பால் அவர்களைத் தூண்டிய காரணத்தையும் சேர்த்தே புகழ்கின்றான். “நிச்சயமாக, நாம் இவர்களை (மறுமை) வீட்டை நினைவூட்டுவதற்காகவே பூரண பரிசுத்தமானவர்களாகத் தேர்ந்தெடுத்தோம்”. (ஸாத் : 46).

சில முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கு கட்டுப்பட பின்வாங்கிய போது அதை உணர்த்தும் விதத்தில் பின்வருமாறு கூறுகின்றான் : “மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டே நீங்கள் திருப்தியடைந்து விட்டீர்களா? மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பு இவ்வுலக வாழ்க்கையின் இன்பம் மிகவும் அற்பமானது”. (தவ்பா : 38). ஒரு மனிதன் மறுமையை நம்பும் போது இவ்வுலகிலுள்ள எந்த இன்பத்தையும் மறுமை இன்பத்துடன் ஒப்பிட முடியாது, மறு புறம் இவ்வுலக இன்பத்திற்காக மறுமை வேதனையில் ஒரு முறையேனும் மூழ்குவது சமனாக மாட்டாது., என்பதை உறுதியாக நம்புவான். மேலும் இவ்வுலகில் அல்லாஹ்வின் பாதையில் ஏற்படும் எந்தவொரு வேதனையும் மறுமை வேதனையுடன் ஒப்பிட முடியாது. மறுபுறம் மறுமை இன்பத்திற்காக இவ்வுலக வேதனையில் ஒரு முறையேனும் மூழ்குவது சமனாக மாட்டாது.

3. மனிதன் தனக்குரிய பங்கை எவ்வாறேனும் அடைந்து கொள்வான் என்பதில் அமைதியடைதல். உலகப் பொருட்களில் ஏதேனும் தவறினால் அதற்காக நிராசையடைந்து தற்கொலை வரை சென்று விடாமல் அல்லாஹ் நல்லறங்கள் செய்வோரின் கூலியை வீணாக்க மாட்டான் என்பதை உறுதி கொண்டு தொடரந்து முயற்சிக்க வேண்டும். அவனிடமிருந்து ஏமாற்றப்பட்டோ, அநீதமாகவோ அனுவளவேனும் ஏதாவது அபகரிக்கப்பட்டால் அதற்குரிய பிரதிபலன் மறுமையில் மிகத்தேவையான சந்தர்ப்பத்தில் அவனுக்கு நிச்சயம் கிடைக்கும். தனது பங்கு மிக முக்கியமான ஆபத்தான தருணத்தில் எவ்வித ஐயமுமின்றி தன்னை வந்தடையும் என்பதை அறிந்தவன் எவ்வாறு கவலைப்பட முடியும் ? தனக்கும் தனது எதிரிக்குமிடையில் நீதம் செலுத்தப்போவது நீதிபதிக்கெல்லாம் பெரிய நீதிபதியான அல்லாஹ்தான் என்பதை அறிந்தவன் எவ்வாறு கவலைப்பட முடியும் ?

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்