கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் வாழ்வு, மரணம் என்பவற்றின் யதார்த்தம்

அல்லாஹ் இவ்வுலகில் எம்மைப் படைத்து, உருவாக்கியிருப்பது எம்மை சோதிப்பதற்காகவே. மரணத்துடன் மனிதனின் காரியம் முடிந்து விடுவதில்லை, மாறாக பின்னாலுள்ள மறுமையின் முதல் கட்டத்தை ஆரம்பிப்பதற்காக அவனது சோதனைக் காலம் நிறைவுறுகின்றது. அங்கு மறுமையில்தான் மக்கள் தமது செயல்களுக்குரிய கூலிகளைப் பெற்றுக்கொள்வர். வாழ்வு, மரணம் என்பவற்றின் யதார்த்தம் பற்றி சில விடயங்களை இப்பாடத்தில் கற்போம்.

  • வாழ்வு, மரணம் என்பவற்றின் யதார்த்தம் பற்றி சில விடயங்களை அறிதல்.
  • மரணத்துடன் தொடர்பான சட்டதிட்ட மற்றும், ஒழுங்குகள் பற்றி அறிதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

வாழ்வு, மரணம் என்பவற்றின் யதார்த்தம்

மரணம் என்பது இறுதி முடிவல்ல, மாறாக அது மனிதனுடைய மற்றுமொரு புதிய அத்தியாயம், மறுமையின் முழுமையான வாழ்வின் ஆரம்பம். மனிதன் பிறந்தது முதல் அவனது உரிமைகளில் கவனம் செலுத்திய இஸ்லாம் அவன் மரணித்த பின்னரும் அவனது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களை வலியுறுத்தி, அவனது குடும்பத்தினர், உறவினர்களின் நிலையிலும் கவனம் செலுத்தியுள்ளது.

அல்லாஹ் இவ்வுலகில் எம்மைப் படைத்து, உருவாக்கியிருப்பது எம்மை சோதிப்பதற்காகவே. அவன் கூறுகின்றான் : "உலகில் அழகிய செயலுடையவர் யாரென உங்களைச் சோதிப்பதற்காகவே மரணத்தையும் வாழ்வையும் அவன் படைத்தான்" (முல்க் : 02). இறைநம்பிக்கை கொண்டு அவனை அஞ்சியவர் சுவனம் நுழைவார், வழிகேட்டைத் தேர்வு செய்தவர் நரகில் நுழைவார்.

மனிதனுடைய வாழ்நாள் எவ்வளவு நீண்டாலும் நிச்சயம் ஒரு நாள் அது முடிந்து விடக்கூடியதுதான். நிலைத்திருப்பது, நிரந்தர வாழ்க்கை எல்லாம் மறுமையில் தான். அல்லாஹ் கூறுகின்றான் : "அவர்கள் அறிவார்களாக இருந்தால் நிச்சயமாக மறுமை வீடே நிரந்தரமான வாழ்வாகும்" (அன்கபூத் : 64).

படைப்பினங்களில் அல்லாஹ்விடம் மிகச் சிறந்தவர் இறைத்தூதர் ஸல் அவர்கள் தான். மக்கள் மரணிப்பதைப் போன்று நீங்களும் மரணிப்பீர்கள் என அல்லாஹ் அவர்களைப் பார்த்தே கூறுகின்றான். மறுமையில் தீர்ப்பு வழங்குவதற்காக அனைவரும் அல்லாஹ்வின் முன்னிலையில் இருப்பார்கள். அல்லாஹ் கூறுகின்றான் : "நபியே நிச்சயமாக நீரும் மரணிக்கக் கூடியவரே, இன்னும் அவர்களும் மரணிக்கக் கூடியவர்களே. பின்னர் நிச்சயமாக மறுமை நாளில் உமது இரட்சகனிடத்தில் தர்க்கித்துக் கொள்வீர்கள்" (ஸுமர் : 30, 31).

இவ்வுலக நிலை, அதன் குறுகிய காலத்தை நபியவர்கள் ஒரு மரத்தடி நிழலில் சற்று தூங்கி, ஓய்வெடுத்துவிட்டு பின்னர் அவ்விடத்தை விட்டு நகரும் ஒரு பிரயாணிக்கு ஒப்பிட்டு வர்ணித்துள்ளார்கள். (திர்மிதி 2377, இப்னுமாஜா 4109).

அதே போன்று அல்லாஹ் நபி யஃகூப் (அலை) தனது புதல்வர்களுக்கு செய்த உபதேசத்தையும் கூறிக் காட்டுகின்றான் : "நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு இம்மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துள்ளான். எனவே முஸ்லிம்களாகவே அன்றி நீங்கள் மரணிக்க வேண்டாம்". (பகரா : 132).

அல்லாஹ் தனக்கு நிர்ணயித்துள்ள காலக்கெடு எப்போது, எங்கு முடிவுறும் என்பதை ஒருவன் அறியாத போது, அதனை யாராலும் மாற்றிட முடியாது என்கிற போது உண்மையான புத்திசாலி தனது கால, நேரங்களை நற்செயல்கள், மார்க்க விடயங்களால் நிரப்புவது அவசியமாகும். ஏனெனில் அல்லாஹ் கூறுகின்றான் : "அவர்களுக்குரிய காலக்கெடு வந்து விட்டால் அவர்கள் ஒரு கணப்பொழுதும் முந்தவும் மாட்டார்கள், பிந்தவும் மாட்டார்கள்". (அஃராப் 34).

உடலிலிருந்து உயிர் பிரிவதன் மூலம் மரணிக்கும் அனைவரினதும் மறுமை அந்த வினாடியிலிருந்து ஆரம்பித்து மறுமைக்கான அவனது பயணம் ஆரம்பித்து விட்டது. இது மனித அறிவால் விளாவாரியாக அறிய முடியாத மறைவான அறிவைச் சார்ந்த விடயமாகும்.

மனிதன் பிறந்தது முதல் அவனது வளர்ச்சி, சிறுபிராயம் அனைத்திலும் சட்டங்கள், ஒழுக்கங்களில் கவனம் செலுத்திய இஸ்லாம் அவன் மரணித்த பின்னரும் அவனது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களை, ஒழுக்கங்களை வலியுறுத்தி, அவனது குடும்பத்தினர், உறவினர்களின் நிலையிலும் கவனம் செலுத்தியுள்ளது. இம்மார்க்கத்தை முழுமைப்படுத்தி, தனது அருட்கொடைகளைப் பூரணப்படுத்தி இம்மகத்தான மார்க்கத்திற்கு வழி காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

இவ்வுலகம் மறுமைக்குச் செல்லும் வெறும் குறுகிய பயணமே.

-

மரணத்தை நெருங்கும் போது

நோயாளியை நலம் விசாரிக்கச் சென்றவர் அவரது நோய் குணமடைந்து ஆரோக்கியமடையவும், அந்நோய் அவரது பாவங்கள், தவறுகளுக்குப் பரிகாரமாகவும், தூய்மைப்படுத்தலாகவும் அமைய பிரார்த்திக்க வேண்டும். நபி ஸல் அவர்கள் நோயாளியை நலம் விசாரிக்கச் சென்றால் "கவலைப்பட வேண்டாம். இறைவன் நாடினால் (இது உங்கள் பாவத்தை நீக்கி) உங்களைத் தூய்மைப்படுத்திவிடும்'' என்று கூறுவார்கள். (புஹாரி 3616).

நோயை எதிர்கொண்டு, நிவாரணம் பெறுவதை நம்பிக்கையூட்டும் வகையில் பொருத்தமான வார்த்தைகளைப் பயன்படுத்தி அந்நோயாளியை நலம் விசாரக்க வேண்டும். அவரை நல் வழியின் பால் அழைக்க பொருத்தமான சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி, அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நிதானமாகவும் அழகாகவும் அவருக்கு நினைவூட்ட வேண்டும். இதற்கு சிறந்த உதாரணமாக நபியவர்கள் இருந்ததை ஒரு நபித்தோழர் எமக்கு அறிவிக்கின்றார். "நபி(ஸல்) அவர்களுக்குப் பணி விடை செய்து கொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே, அவனை நோய் விசாரிக்க நபி(ஸல்) அவர்கள் அவனிடம் வந்து, அவனுடைய தலை மாட்டில் அமர்ந்து, 'இஸ்லாதை ஏற்றுக் கொள்!' என்றார்கள். உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர், 'அபுல் காஸிம் (நபி(ஸல்) அவர்களின் கூற்றுக்குக் கட்டுப்படு'' என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றான். உடனே நபி(ஸல்) அவர்கள், 'இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே சகல புகழும்'' எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்". (புஹாரி 1356).

மரணத்தருவாயில் இருப்பவருக்கு கலிமாச் சொல்லிக் கொடுத்தல்.

நோயாளியிடம் மரணம் நெருங்குவதற்குரிய அறிகுறிகள் தென்பட்டால் நிதானமாக, பொருத்தமான அமைப்பில் அவரை அணுகி, சுவனத்தின் திறவுகோல், ஏகத்துவ வார்த்தை லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை சொல்லிக் கொடுத்து, அதனைக் கூற உற்சாகப் படுத்த வேண்டும். "உங்களில் மரணத் தருவாயில் உள்ளவர்களுக்கு லாயிலாஹ ‎இல்லல்லாஹ் என்று சொல்லிக் கொடுங்கள்". என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.‎ (முஸ்லிம் 916).

இவ்வார்த்தைதான் ஒரு மனிதன் தனது வாழ்விலும், மரணிக்கும் போதும் மொழியும் உன்னதமான வார்த்தையாகும். தனது இறுதி வார்த்தையாக இது அமையப்பெற்றவர்கள் பெரும் பாக்கியம் பெற்றவர்களாவர். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "மரணிக்கும் ‎போது எவரது கடைசிப் பேச்சு லாஇலாஹ இல்லல்லாஹ் என்று ‎அமைந்து விடுகிறதோ அவர் சொர்க்கத்தில் ‎நுழைந்து விடுவார்". (அபூதாவூத் 3118).

மரணத்தருவாயில் இருப்பவரை கிப்லாத் திசையில் திருப்பி வைத்தல்.

மரணத்தருவாயில் இருப்பவரை கிப்லாத் திசையில் திருப்பி வைப்பது ஸுன்னத்தாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "புனித ஆலயம் (கஃபா)தான் உங்களில் வாழ்வோருக்கும், மரணித்தோருக்குமான கிப்லாவாகும்". (அபூதாவூத் 2875). கப்ரிலே வைப்பது போன்று அவரை வலது புறமாக பக்கவாட்டில் வைத்தில் கிப்லாத் திசையில் முகமிருக்குமாறு வைக்க வேண்டும்.

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்