தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவம்
இறைத்தூதர்களுக்கான மனிதகுலத்தின் தேவை
அல்லாஹ்வின் ஞானம் அவன் ஒவ்வொரு சமூகத்திலும் ஓர் எச்சரிப்பவரை அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவர் அல்லாஹ் தனது அடியார்களுக்கு இறக்கிய, அவர்களது ஈருலக நிலைகளும் நன்றாக இருக்க வழிவகுக்கும் மார்க்கம் மற்றும் நேர்வழியைத் தெளிவுபடுத்துவார். அல்லாஹ் கூறுகின்றான் : “அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை". (பாதிர் : 24).
ஏனெனில் இறைத்தூதர்கள் மூலமே தவிர இம்மையிலோ, மறுமையிலோ வெற்றி, மகிழ்ச்சிக்கான வழி அடைய முடியாது. அவர்கள் மூலமே தவிர நல்லது, தீயதை விரிவாக அறிய முடியாது. அவர்களின் கரங்களிலே தவிர அல்லாஹ்வின் திருப்தியை அடைய முடியாது. சொல், செயல், பண்பாடு அனைத்திலும் நல்லது அவர்கள் கொண்டு வந்த வழிமுறை மாத்திரமே.
முஹம்மத் (ஸல்) அவர்களை நபியாகவும், ரஸூலாகும் நம்பிக்கை கொள்ளல்
முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய அடியாரும், தூதருமாவார், முன்சென்றோர், பின்வருவோர் அனைவருக்கும் அவர்கள்தான் தலைவராகும். அனைத்து நபிமார்களுக்கும் அவர்தான் முத்திரையாகும். எனவே அவர்களுக்குப் பின் நபிமார்களில்லை. அவர் தூதை முறையாக எத்திவைத்தார், அமானிதத்தை நிறைவேற்றி விட்டார், சமூகத்திற்கு நலவு நாடியுள்ளார், அல்லாஹ்வின் பாதையில் உண்மையாகவே அறப்போர் புரிந்தார் என்பதை நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
அல்லாஹ் கூறுகின்றான் : “முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார்". (பத்ஹ் : 29).
அவர் அறிவித்ததை உண்மைப் படுத்துவதும், ஏவியதை எடுத்து நடப்பதும், விலக்கியதைத் தவிர்ந்து கொள்வதும், அவர் வழிப்பிரகாரம் மாத்திரமே அல்லாஹ்வை நாம் வணங்குவதும், அன்னாரைப் பின்பற்றுவதும் அவசியமாகும்.
முஹம்மத் (ஸல்) அவர்கள் நபிமார்கள், தூதர்களுக்கெல்லாம் முத்திரை (இறுதியானவர்). அவர்களுக்குப் பின் நபிமார்கள் யாருமில்லை. அவர்களது தூதுதான் முன்னைய இறைத்தூதுகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளியாகும். அவர்களது மார்க்கம்தான் இறுதி மார்க்கமாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் : “முஹம்மது (ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்". (அஹ்ஸாப் : 40).
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "என்னுடைய நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்களின் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங்கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டுவிட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்துவிட்டு ஆச்சரியடைந்து, 'இச்செங்கல் (இங்கே) வைக்கப்பட்டிருக்கக் கூடாதா?' என்று கேட்கலானார்கள். நானே அச்செங்கல். மேலும், நானே இறைத் தூதர்களில் இறுதியானவன்". (புஹாரி 3535).
நபிமார்கள், இறைத்தூதர்களில் மிகச் சிறந்தவர்
எமது நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் நபிமார்களில் மாத்திரமல்ல, ஒட்டுமொத்த மக்களிலும் மிகச் சிறந்தவராகும். அல்லாஹ்விடத்தில் மிக மகத்தானவராகும். அவர்களை அல்லாஹ் மகத்தாக்கி, உயர்வான இடத்தை வழங்கியுள்ளான். எனவே அவர்கள்தான் அவனிடம் மக்களில் சிறந்தவர், கண்ணியமிக்கவர், மகத்தானவர். அல்லாஹ் கூறுகின்றான் : "மேலும் அல்லாஹ் உம் மீது வேதத்தையும் ஞானத்தையும் இறக்கியுள்ளான்; நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்குக் கற்றுக் கொடுத்தான். உம் மீது அல்லாஹ்வின் அருட்கொடை மகத்தானதாகவே இருக்கின்றது". (நிஸா : 113).
எனவே அவர்கள்தான் மானிடர்களின் தலைவர், மண்ணறையிலிருந்து முதலில் வெளியேறுபவர், முதலில் பரிந்துரைப்பவர், அவருடைய பரிந்துரைதான் முதலில் ஏற்க்கப்படும், மறுமையில் புகழின் கொடி அவரது கரத்தில்தான் இருக்கும், ஸிராத் எனும் பாலத்தை முதலில் கடப்பவரும் அன்னார்தான், முதலில் சுவனக் கதவைத் தட்டி, அதனுள் முதலில் நுழைபவரும் அன்னார்தான்.
அகிலத்தாருக்கோர் அருட்கொடை
மேலும் கூறுகின்றான் : "இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்குமாகவேயன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை". (ஸபஃ : 28). மேலும் அல்லாஹ் கூறுகின்றான் : "(நபியே!) நீர் கூறுவீராக: “மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்". (அஃராப் : 158).
-
அன்னாரை நம்பிக்கை கொண்டு, பின்பற்றுவது அவசியமாகும்
முஹம்மதியத் தூது முன்னைய அனைத்து தூதுகளையும் மாற்றியமைத்து விட்டது. எனவே முஹம்மத் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதன் மூலமே தவிர அல்லாஹ் யாரிடமிருந்தும் எந்த மார்க்கத்தையும் ஏற்க மாட்டான். அன்னார் சென்ற பாதை மூலமே தவிர யாரும் சுவன இன்பங்களை அடைய முடியாது. அவர்கள்தான் அனைத்துத் தூதர்களிலும் மிக கண்ணியமானவர். அவரது சமூகம்தான் சிறந்த சமூகம், அவர்களது மார்க்கம்தான் பூரணமான மார்க்கமாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் : "இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்". (ஆலஇம்ரான் : 85).
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "முஹம்மதின் உயிர் எவன் கைவசமுள்ள அந்த நாயன் மீது சத்தியமாக என்னுடைய சமூகத்திலுள்ள எந்தவொரு யூதரோ, கிறிஸ்தவரோ என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு, பின் நான் அனுப்பப்பட்ட தூதை விசுவாசிக்காத நிலையில் மரணிக்கின்றானோ அவன் நரக வாதியாகவே தவிர வேறில்லை". (அஹ்மத் 8609).
நபி (ஸல்) அவர்களது தூதைப் பறைசாற்றும் அற்புதங்களில் சில
எமது நபி (ஸல்) அவர்களது கரத்திலிருந்து அல்லாஹ் பல பிரமிக்கவைக்கும் அற்புதங்கள், மற்றும் தெளிவான அத்தாட்சிகளை நிகழ்த்தினான். அவற்றில் அன்னாரது நபித்துவம், தூதின் உண்மை நிலைக்கு சான்றும் சாட்சியும் உள்ளன. அவ் அற்புதங்கள் சில :
எமது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட மிக மகத்தான அத்தாட்சி உள்ளங்களுடனும், புத்திகளுடன் உரையாடும் புனித அல்குர்ஆனாகும். மறுமை வரை என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய அத்தாட்சியாகும். அதில் எவ்விதத் திரிபோ மாற்றமோ நிகழ மாட்டாது. குர்ஆன் அதன் மொழி நடை, போக்கிலும் அற்புதமாகும், அதன் சட்ட திட்டங்களிலும் அற்புதமாகும், அது தெரிவிக்கும் தகவல்களிலும் அற்புதமாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் : "“இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் ஒரு சிலர் சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வரமுடியாது” என்று (நபியே) நீர் கூறும்". (இஸ்ரா : 88).
அல்லாஹ் கூறுகின்றான் : "(இறுதி) நேரம் நெருங்கி விட்டது; சந்திரனும் பிளந்து விட்டது. எனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்து விடுகிறார்கள்; “இது வழமையாக நடைபெறும் சூனியம் தான்” என்றும் கூறுகிறார்கள்". (கமர் : 1, 2). நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் இது நிகழ்ந்தது, குரைஷியரும் இதனை நேரடியாகக் கண்டனர்.
குறைவாக இருந்த உணவு அன்னாரின் கரத்தில் பெருகுதல்
அன்னார் அறிவித்தது போன்றே அவை நிகழும். நபி ஸல் அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவற்றில் பல நிகழ்ந்து விட்டன, இன்னும் பல நடந்து கொண்டிருப்பதை நாம் கண்டு கொண்டும் இருக்கின்றோம்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள் : உமர் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்துகொண்டவர்களைப் பற்றி அவர்களிடம் கூறலானார்கள். பத்ருப் போருக்கு முந்தைய நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் பத்ருப் போரில் எதிரிகள் மாண்டு கிடக்கவிருக்கும் இடங்களைக் காட்டலானார்கள். "அல்லாஹ் நாடினால் இதுதான் நாளை இன்ன மனிதன் மாண்டு கிடக்கும் இடம்" என்று குறிப்பிட்டார்கள். சத்திய (மார்க்க)த்துடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அனுப்பியவன் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடங்களில் பிசகாமல் சரியாக அவர்கள் மாண்டு கிடந்தனர். (முஸ்லிம் 2873) .
நபி (ஸல்) அவர்களுக்கு அன்னாரின் சமூகம் செய்ய வேண்டிய கடமைகள் பல உள்ளன. அவற்றுள் சில வருமாறு :
1. அன்னாரது நபித்துவத்தை நம்பிக்கை கொள்ளல்
அன்னாரது நபித்துவம் மற்றும், தூதை நம்பிக்கை கொள்ளல். முன்னைய அனைத்து தூதுகளையும் அன்னாரது இத்தூது மாற்றி விட்டது என உறுதிகொள்ளல்.
2. அன்னாரை உண்மைப்படுத்தல்.
அவர் அறிவித்ததை உண்மைப் படுத்துவதும், ஏவியதை எடுத்து நடப்பதும், விலக்கியதைத் தவிர்ந்து கொள்வதும், அவர் வழிப்பிரகாரம் மாத்திரமே அல்லாஹ்வை நாம் வணங்குவதும், அன்னாரைப் பின்பற்றுவதும் அவசியமாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்". (ஹஷ்ர் : 7).
3. அன்னார் கொண்டு வந்த மார்க்கத்தை ஏற்றல்.
நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தை ஏற்றுக் கொள்வதும், அன்னாரது ஸுன்னாவிற்குக் வழிப்படுவதும், அன்னாரது வழிமுறையை கண்ணியத்திற்குரியதாக, மகத்தானதாக ஆக்குவதும் எம்மீது கடமையாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்". (நிஸா : 65).
4. அன்னாரது கட்டளைக்கு மாறு செய்வதை விட்டும் எச்சரிக்கையாக இருத்தல்.
நபி (ஸல்) அவர்களது கட்டளைக்கு மாறு செய்வதை விட்டும் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். ஏனெனில் அன்னாரது கட்டளைக்கு மாறு செய்வதானது குழப்பம், வழிகேடு, கடுமையான வேதனைக்குரிய காரணமாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "ஆகவே எவர் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்". (நூர் : 63).
5. எந்த மனிதர் மீதான நேசத்தை விடவும் அன்னாரது நேசத்தை முற்படுத்தல்.
எமது உயிர், பெற்றோர், பிள்ளைகள் அனைவரினது நேசத்தை விடவும் நபி (ஸல்) அவர்கள் மீதான நேசத்தை முற்படுத்துவது அவசியமாகும். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, அவரின் குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராகும் வரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்". (புஹாரி 15).
6. அன்னார் தனது தூதை எத்திவைத்தார்கள் என நம்பிக்கை கொள்ளல்.
நபி (ஸல்) அவர்கள் தூதை முறையாக எத்திவைத்தார்கள், அமானிதத்தை நிறைவேற்றி விட்டார்கள், சமூகத்திற்கு நலவு நாடியுள்ளார்கள், எந்தவொரு நலவாக இருந்தாலும் அதனைத் தனது சமூகத்திற்கு அறிவித்து, ஊக்கப்படுத்தாமலில்லை. எந்தவொரு தீங்காக இருந்தாலும் அதனைத் தனது சமூகத்திற்கு அறிவித்து, எச்சரிக்காமலில்லை. அல்லாஹ் கூறுகின்றான் : “இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்". (மாஇதா : 3).
நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜான ஹஜ்ஜதுல் வதாஃவில், தோழர்கள் ஒன்று சேர்ந்த மாபெரும் ஒன்றுகூடலில் அன்னார் இம்மார்க்கத்தை எத்திவைத்ததாக அனைவரும் சாட்சியமளித்துள்ளனர். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : ""(மறுமை நாளில்) உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "நீங்கள் (இறைச்செய்திகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்துவிட்டீர்கள்; (உங்களது நபித்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்தார்மீது) அக்கறையுடன் நடந்துகொண்டீர்கள் என நாங்கள் சாட்சியமளிப்போம்" என்று கூறினர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது சுட்டுவிரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு அதை மக்களை நோக்கித் தாழ்த்தி, "இறைவா! இதற்கு நீயே சாட்சி" என்று மூன்று முறை கூறினார்கள்". (முஸ்லிம் 1218).