கற்றலைத் தொடர்க

நீர் உள் நுழையவில்லை
உமது முன்னேற்றத்தைத் கண்காணிக்கவும், புள்ளிகளை சேகரிக்கவும், போட்டியினுள் நுழையவும் இப்போது பதிவு செய்க. பதிந்ததன் பின் நீர் கற்கும் தலைப்புகளுக்கான இலத்திரினியல் சான்றிதைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய model (மாதிரி) பிரிவு :

பாடம் ஹஜ்ஜின் அர்த்தமும் அதன் சிறப்புக்களும்

ஹஜ் என்பது : குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் மக்கா சென்று சில குறிப்பிட்ட செயற்கள் மூலம் அல்லாஹ்வை வணங்குவதாகும். இது இஸ்லாத்தின் ஐந்தாவது தூணாகும். ஹஜ்ஜின் அர்த்தம், அதன் சிறப்பு பற்றி இப்பாடத்தில் கற்போம்.

  • ஹஜ்ஜின் அர்த்தத்தை அறிதல்.
  • ஹஜ் கடமையாவதற்கான நிபந்தனைகளை அறிதல்.
  • ஹஜ்ஜின் சிறப்புக்களை அறிதல்.

இப்பாடத்தைப் பூர்த்தி செய்யுங்கள், மற்றுமொரு மணவனை count பண்ணுங்கள்:

ஹஜ் என்பதன் அர்த்தம்

ஹஜ் என்பது அல்லாஹ்வின் புனித மாளிகையை சில வணக்கங்களை நிறைவேற்றுவதற்காக நாடிச் செல்வதைக் குறிக்கும் ஒரு சொல்லாகும். கஃபாவை ஏழு தடவைகள் வலம் வருதல், ஸபா - மர்வா மலைகளுக்கு இடையில் வலம் வருதல், அரபா மைதானத்தில் தரித்தல், மினாவில் கல் எறிதல் போன்ற நபியவர்களின் சொல், செயல்களில் அறிவிக்கப்பட்டவை இதில் அடங்குகின்றன. இதில் ஓரிறைக் கொள்கைப் பிரகடனம், ஹாஜிகளுக்கு கிடைக்கும் மகத்தான பாவமன்னிப்பு, முஸ்லிம்களுக்கு இடையிலான அறிமுகம், மார்க்க அறிவு போன்ற பல பயனுள்ள விடயங்கள் உள்ளன.

ஹஜ் செய்வதன் சட்டம்

ஹஜ் இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையாகும். அதற்கு சக்தி பெற்ற ஒவ்வொரு முஸ்லிம் ஆண், பெண்களின் மீதும் வாழ்நாளில் ஒரு முறை கடமையாகும். அல்லாஹ் கூறுகின்றான்: "“இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான்”. (ஆலஇம்ரான் : 97).

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : “மனிதர்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். எனவே நீங்கள் ஹஜ் செய்யுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஆற்றிய உரையின்போது குறிப்பிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! ஓவ்வொரு ஆண்டுமா?” என்று கேட்டார். அவர் இவ்வாறு மூன்று தடவை கேட்கும் வரை நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்துவிட்டு “நான் ஆம் என்று கூறினால் அவ்வாறே கடமையாகிவிடும். அதற்கு நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள்” என்று விடையளித்தார்கள். (முஸ்லிம் 1337).

சக்தி பெறும் போது ஹஜ்ஜை துரிதமாக நிறைவேற்றுவது முஸ்லிமுக்குக் கடமையாகும்.

ஹஜ்ஜுடைய காலம்

ஹஜ்ஜுக்கென நிய்யத் வைக்க குறிப்பிட்ட காலங்களும் இடங்களும் உண்டு.

ஹஜ்ஜுடைய காலங்கள்

ஹஜ்ஜுக்கென சில குறிப்பிட்ட மாதங்கள் உள்ளன. அவற்றில் தான் நாம் அவ்வணக்கத்திற்காக நிய்யத் வைக்க வேண்டும். அவை ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ் ஆகிய மாதங்களாகும். துல்ஹஜ் மாதத்தின் எட்டு முதல் பதின்மூன்றாம் நாள் வரையிலான காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டே ஹஜ் வணக்கங்கள் உள்ளன. இஸ்லாமிய நாட்காட்டியில் சந்திர வருடத்தில் இது பன்னிரண்டாவது மாதமாகும்.

ஹஜ்ஜுக்கான நிய்யத் வைக்கும் எல்லைகள்

ஹஜ்ஜுக்குக்காக குறிப்பிட்ட எல்லைகளில் தான் நிய்யத் வைக்க வேண்டும், இஹ்ராம் நிய்யத் இன்றி அவ்விடங்களைத் தாண்டி மக்காவுக்குச் செல்ல முடியாது. மதீனா வாசிகளுக்கு துல்ஹுலைஃபா, சிரியா வாசிகளுக்கு ஜுஹ்ஃபா, நஜ்த் வாசிகளுக்கு கர்ன் அல்மனாஸில், யமன் வாசிகளுக்கு 'யலம்லம்' ஆகியனவே இஹ்ராம் கட்டுமிடமாக ஆக்கப்பட்டுள்ளது. இவை அவர்களுக்கும் இவற்றின் வழியாக ஹஜ், உம்ரா செய்ய யார் நுழைகிறார்களோ, அவர்களுக்கும் அங்கு இஹ்ராம் கட்டும் இடங்களாகும். இந்த இடங்கள் அனுபவமுள்ளவர்கள் மற்றும் நவீன வரைபடங்களால் அறியப்படுகின்றன.

ஹஜ் கடமையாவதற்கான நிபந்தனைகள்

١
ஹஜ் கடமையானவர் : முஸ்லிம்
٢
பருவமடைந்தவர்
٣
புத்தியுள்ளவர்
٤
சுதந்திரமானவர்
٥
சக்தியுள்ளவர்
٦
பெண்ணாக இருந்தால் மஹ்ரம் இருத்தல். (கணவர் அல்லது திருமணம் செய்யத் தகாத ஆண் துணை).

முதல் நிபந்தனை : இஸ்லாம்

ஹஜ் முஸ்லிமுக்கே கடமையாகும், காபிருக்குக் கடமையாக மாட்டாது, அவனிடமிருந்து செல்லுபடியாகவும் மாட்டாது. ஏனெனில் வணக்கம் செல்லுபடியாக இஸ்லாம் ஒரு நிபந்தனையாகும்.

இரண்டாவது நிபந்தனை : புத்தி

பைத்தியகாரருக்கு ஹஜ் கடமையில்லை, அவரிடமிருந்து செல்லுபடியாகவும் மாட்டாது. ஏனெனில் வணக்கம் கடமையாகவும், செல்லுபடியாகவும் புத்தி ஒரு நிபந்தனையாகும். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள் : ''மூன்று நபர்களின் குற்றங்கள் (அவர்களின் வினைச்சுவடியில்) எழுதப்பட மாட்டா : தூங்கிக் கொண்டிருப்பவர் கண்விழிப்பதற்கு முன்பு வரை செய்யும் குற்றங்கள், சிறியவர் பெரியவராகும் முன்பு செய்யும் குற்றங்கள், பைத்தியகாரர் தெளிவடையும் முன்பு செய்யும் குற்றங்கள்''. (அபூ தாவூத் 4401). இது ஆதாரபூர்வமான நபிமொழியாகும்.

மூன்றாவது நிபந்தனை : பருவமடைதல்.

சிறார்களுக்கு ஹஜ் கடமையாக மாட்டாது. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள் : ''மூன்று நபர்களின் குற்றங்கள் (அவர்களின் வினைச்சுவடியில்) எழுதப்பட மாட்டா : தூங்கிக் கொண்டிருப்பவர் கண்விழிப்பதற்கு முன்பு வரை செய்யும் குற்றங்கள், சிறியவர் பெரியவராகும் முன்பு செய்யும் குற்றங்கள், பைத்தியகாரர் தெளிவடையும் முன்பு செய்யும் குற்றங்கள்''. (அபூ தாவூத் 4401). இது ஆதாரபூர்வமான நபிமொழியாகும்.

சிறு பிள்ளை ஹஜ் செய்தால் ஹஜ் செல்லுபடியாகும், எனினும் இஸ்லாமிய கடமையான ஹஜ்ஜாக அது அமையமாட்டாது. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "ஹஜ் செய்த எந்த சிறு பிள்ளையும் பின்னர் பருவமடைந்தால் அவர் மீது மற்றுமொரு ஹஜ் கடமையாகும்". (இமாம் பைஹகீயின் ஸுனன் அல்குப்ரா 2/ 140).

நான்காவது நிபந்தனை : சுதந்தரிமாக இருத்தல்.

அடிமைக்கு ஹஜ் கடமையில்லை. அவன் தனது எஜமானுக்குப் ப ணிவிடை செய்வதில் ஈடுபடுவதால் அவனுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. எஜமானின் அனுமதியின் படி ஹஜ் செய்தால் அது செல்லுபடியாகும், எனினும் இஸ்லாமிய கடமையான ஹஜ்ஜாக அது அமையமாட்டாது. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "ஹஜ் செய்த எந்த அடிமையும் பின்னர் உரிமையிடப்பட்டால் அவர் மீது மற்றுமொரு ஹஜ் கடமையாகும்". (இமாம் பைஹகீயின் ஸுனன் அல்குப்ரா 2/ 140).

ஐந்தாவது நிபந்தனை : சக்தி பெறுதல்

சக்தி, வலிமையுள்ளவருக்கே ஹஜ் கடமையாகும். உடலாரோக்கியமும், பிரயாணம் செய்யும் சக்தியும் இருந்து, ஹஜ்ஜுக்காக சென்று வருவதற்குப் போதியளவு அடிப்படை வசதிகளும் உள்ளவரே சக்தியுள்ளவராவார். ஹஜ் செய்ய விரும்பும் பெண்ணுடன் அப்பயணத்தில் உடன் செல்ல அவளுடைய மஹ்ரம் (கணவன் அல்லது திருமணம் செய்யத் தகாத ஆண் துணை) இருத்தலும் சக்தி பெறுவதில் அடங்கும். ஏனெனில் பெண் ஹஜ்ஜுக்கோ, வேறு பயணத்திற்கோ மஹ்ரமின்றி செல்ல முடியாது.

அல்லாஹ் கூறுகின்றான்: “இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும்”. (ஆலஇம்ரான் : 97).

வசதியிருந்தும் தள்ளாடும் வயது அல்லது தீராத நோய் காரணமாக செல்ல முடியாவிட்டால் அவருக்குப் பதிலாக ஒருவரை ஹஜ் செய்ய நியமிப்பது அவசியமாகும். பழ்ல் பின் அப்பாஸ் (ரலி) கூறுகின்றார்கள் : ஒரு மனிதர் நபியவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தை வாகனத்தில் நிலையாக உட்கார்ந்து பயணிக்க முடியாதளவு வயோதிபத்தை அடைந்த போதுதான் இஸ்லாத்தில் இணைந்தார். அவருக்குப் பதிலாக நான் ஹஜ் செய்யவா?" என வினவினார். "அவருக்கு கடன் இருந்து நீர் அதனை நிறைவேற்றினால் அது அவருக்கு செல்லுபடியாகுமா?" என நபியவர்கள் வினவ, அவர் "ஆம்" என்றார். "அப்படியாயின் உனது தந்தைக்காக ஹஜ்ஜும் செய்வீராக" என நபியவர்கள் கூறினார்கள். (அஹ்மத் 1812).

ஹஜ் செய்ய சக்தி பெறுவதன் சில நிலைகள்

١
தன்னால் சுயமாக ஹஜ் செய்ய முடியுமாயிருத்தல். அதாவது வழமைக்கு மாற்றமான அதிகபடியான சிரமங்கள் ஏதுமின்றி சுயமாக மக்காவுக்குச் செல்ல முடியுமாயிருப்பதுடன் அதற்குத் தேவையான பொருளாதார வசதியும் இருத்தல். இவர் தானாக ஹஜ் செய்ய வேண்டும்.
٢
தன்னால் முடியாது, பிறர் மூலம் செய்ய முடியுமாயிருத்தல். வயோதிபம், நோய் போன்ற காரணங்களால் சுயமாகச் செல்ல முடியாது, எனினும் அவருக்குப் பதிலாக ஹஜ் செய்யும் ஒருவர் இருக்கின்றார், அதற்குத் தேவையான பண வசதியும் உண்டு. இவர் தனக்குப் ஹஜ் செய்பவருக்கான செலவினத்தைக் கொடுத்து அதனை நிறைவேற்ற வேண்டும்.
٣
தன்னாலும் முடியாது, பிறராலும் முடியாது. சக்தியில்லாமலிருக்கும் வரை இவருக்கு ஹஜ் கடமையாக மாட்டாது. உதாரணமாக தனது குடும்பத்தின் அவசியத் தேவைக்கு மேலதிகமாக ஹஜ் செய்யும் அளவு பொருளாதார வசதியற்றவர். இவர் ஹஜ் செய்வதற்காக நிதி திரட்ட வேண்டிய அவசியமில்லை. எப்போது வசதி ஏற்படுகின்றதோ அப்போது அவருக்கு கடமையாகின்றது.

பெண் ஹஜ் செய்ய மஹ்ரம் நிபந்தனை

பெண்ணுக்கு ஹஜ் கடமையாக மஹ்ரம் இருப்பதும் ஒரு நிபந்தனையாகும். தன்னுடன் பிரயாணத்தில் துணை நிற்கும் ஒரு மஹ்ரம் இல்லாவிடில் அவளுக்கு ஹஜ் கடமையாக மாட்டாது. பின்வருவோர் அவளுடைய மஹ்ரம்கள் ஆவர் : கணவர், அல்லது தந்தை, பாட்டன், மகன், பேரப்பிள்ளை, சகோதரர்கள், அவர்களது புதல்வர்கள், தந்தையின் சகோதரர், மாமா போன்ற என்றும் திருமணம் செய்யத் தகாத ஆண்கள்.

பாதுகாப்பான முறையில் ஒரு பெண்மஹ்ரமின்றி ஹஜ் செய்தால் அவளுடைய ஹஜ் செல்லுபடியானதாகி விடும்.

ஹஜ்ஜின் சிறப்புக்கள்

ஹஜ் செய்வதில் உள்ள பல சிறப்புக்களும் நலவுகளும் கூறப்பட்டுள்ளன. அவற்றில் சில :

1. சிறந்த நற்செயல்களில் இதுவும் ஒன்று.

அமல்களில் சிறந்தது எது என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்புவது” என்று விடையளித்தார்கள். “அதற்கு அடுத்தபடியாக எது?” என்று கேட்கப்பட்டது. “அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வது” என்றார்கள். “அதற்கு அடுத்தபடியாக எது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்” என்று விடையளித்தார்கள். (புஹாரி 1519, முஸ்லிம் 83).

2. பாவமன்னிப்புக்கான மகத்தான ஒரு பருவம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “உடலுறவு கொள்ளாமல், தீயகாரியங்களில் ஈடுபடாமல் யாரேனும் ஹஜ் செய்தால் அன்று பிறந்த பாலகன் போன்று பாவமற்றவராக அவர் திரும்புகிறார்.” (புஹாரி 1521, முஸ்லிம் 1350).

3. நரக விடுதலை பெற பாரிய ஒரு சந்தர்ப்பம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “அரபா தினத்தலன்றி வேறெந்த தினத்திலும் அல்லாஹ் அதிகளவில் அடியார்களை நரகிலிருந்து விடுதலை செய்வதில்லை.” (முஸ்லிம் 1348).

4. ஹஜ்ஜுக்குரிய கூலி சுவனமே.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவனத்தைத் தவிர வேறு கூலியில்லை.” (புஹாரி 1773, முஸ்லிம் 1349). இது போன்ற சிறப்புக்கள் உண்மையாக, நல்லெண்ணத்துடன், உள்சுத்த்துடன் நபியவர்களை முறையாகப் பின்பற்றி ஹஜ் செய்தவர்களுக்கே கிடைக்கும்.

உமது பாடத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளீர்


பரீட்சையை ஆரம்பிக்கவும்