தற்போதைய model (மாதிரி) பிரிவு :
பாடம் ஹஜ் செய்யும் முறை
ஹஜ் செய்ய முன்று முறைகள் உள்ளன. அவை : தமத்துஃ, கிரான், இப்ராத். ஹஜ் செய்யும் ஒருவர் தனது வணக்கத்தை நிறைவேற்ற இம்மூன்று முறைகளில் ஒன்றைத் தெரிவு செய்யலாம்.
ஆஇஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : "நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்காக புறப்பட்டோம். அப்போது அவர்கள் : "உங்களில் ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்து இஹ்ராம் கட்ட விரும்புவர் அவ்வாறு செய்து கொள்ளட்டும். ஹஜ்ஜுக்காக மாத்திரம் இஹ்ராம் கட்ட விரும்புவர் அவ்வாறு கட்டிக் கொள்ளட்டும். உம்ராவுக்காக மாத்திரம் இஹ்ராம் கட்ட விரும்புவர் அவ்வாறு கட்டிக் கொள்ளட்டும்" என்று கூறினார்கள்". முஸ்லிம் 1211).
தமத்துஃ முறை
தமத்துஃ செய்யும் முறை : ஹஜ்ஜுடைய மாதங்களில் உம்ராச் செய்ய "லப்பைகல்லாஹும்ம உம்ரதன் முதமத்திஅன் பிஹா இலல் ஹஜ்ஜி" எனக் கூறி நிய்யத் வைத்து, உம்ராவை நிறைவேற்ற வேண்டும். உம்ரா முடிந்தவுடன் இஹ்ராமைக் களைந்து அதன்போது தடுக்கப்பட்டவற்றை அனுபவிக்கலாம். மீண்டும் துல் ஹஜ் மாதம் எட்டாம் நாள் மக்காவில் இஹ்ராம் நிய்யத் வைத்து பெருநாள் தினத்தில் ஜம்ரா எனும் இடத்தில் கல்லெறியும் வரை அதே இஹ்ராமில் தொடர்ச்சியாக இருத்தல். அவர் அனுபவித்த சுகங்களுக்காக ஒரு பிராணி அறுத்துப் பலியிட வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான் : "ஹஜ் வரை உம்ரா செய்வதின் சவுகரியங்களை அடைந்தோர் தனக்கு எது இயலுமோ அந்த அளவு குர்பானி கொடுத்தல் வேண்டும்”. (பகரா : 196).
கிரான் முறை
கிரான் செய்யும் முறை : ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்து செய்வதாக "லப்பைகல்லாஹும்ம உம்ரதன் வஹஜ்ஜன்" எனக் கூறி இஹ்ராம் நிய்யத் வைத்தல். மக்கா வந்தடைந்ததும் வருகைக்கான தவாபை செய்ய வேண்டும், ஸபா- மர்வாக்கிடையில் ஒரு முறை ஸஈ செய்தால் போதுமானதாகும். அதனை வருகைக்கான இந்த தவாபுடன் சேர்த்து முற்படுத்தியும் செய்யலாம், அல்லது தவாபுல் இபாழா எனப்படும் ஹஜ்ஜுடைய தவாபுடன் பிற்படுத்தியும் செய்யலாம், இவர் தவாப் முடிந்ததும் முடிகளை நீக்கவோ, இஹ்ராமைக் களையவோ கூடாது. மாறாக பெருநாள் தினத்தில் ஜம்ரா எனும் இடத்தில் கல்லெறிந்து முடிகளை நீக்கும் வரை அதே இஹ்ராமில் தொடர்ச்சியாக இருத்தல் வேண்டும். இவ்வாறு கிரான் முறையில் ஹஜ் செய்தவரும் அறுத்துப் பலியிட வேண்டும்.
இப்ராத் முறை
இப்ராத் செய்யும் முறை : "லப்பைக ஹஜ்ஜன்" எனக் கூறி ஹஜ்ஜுக்காக மாத்திரம் இஹ்ராம் நிய்யத் வைத்தல். மக்கா வந்தடைந்ததும் வருகைக்கான தவாபை செய்ய வேண்டும், ஸபா- மர்வாக்கிடையில் ஒரு முறை ஸஈ செய்தால் போதுமானதாகும். அதனை வருகைக்கான இந்த தவாபுடன் சேர்த்து முற்படுத்தியும் செய்யலாம், அல்லது தவாபுல் இபாழா எனப்படும் ஹஜ்ஜுடைய தவாபுடன் பிற்படுத்தியும் செய்யலாம், இவர் தவாப் முடிந்ததும் முடிகளை நீக்கவோ, இஹ்ராமைக் களையவோ கூடாது. மாறாக பெருநாள் தினத்தில் ஜம்ரா எனும் இடத்தில் கல்லெறிந்து முடிகளை நீக்கும் வரை அதே இஹ்ராமில் தொடர்ச்சியாக இருத்தல் வேண்டும். இவ்வாறு இப்ராத் முறையில் ஹஜ் செய்தவர் அறுத்துப் பலியிட வேண்டியதில்லை.
நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்த முறையிலும், தனது தோழர்களுக்கு ஏவிய முறையிலும் தனது ஹஜ்ஜை நிறைவேற்றுவதில் ஆர்வம் கொள்வது முஸ்லிமுக்கு அவசியமாகும். ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : "நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தினத்தில் தனது வாகனத்தில் அமர்ந்தவாறு பின்வருமாறு கூறிக் கொண்டு கல்லெறிவதைக் கண்டேன் : "உங்களது வணக்க முறைகளை எடுத்துக் கொடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் எனது இந்த ஹஜ்ஜுக்குப் பின்னால் மீண்டுமொரு ஹஜ் செய்வேனா என்பதை அறிய மாட்டேன்"." (முஸ்லிம் 1297).
ஹஜ் செய்யவிருக்கும் ஒருவர் நிர்ணயிக்கப்பட்ட எல்லையை அடைந்ததும், இஹ்ராம் நிய்யத் வைக்கும் போது தனது ஆடைகளைக் களைந்து, குளித்து விட்டு, தலைக்கும் தாடிக்கும் நறுமணம் பூசிக்கொண்டு இஹ்ராத்திற்கான தைக்கப்படாத ஆடையை அணிந்து கொள்ள வேண்டும். பின் கடமையான தொழுகை நேரமாக இருந்தால் அதனை நிறைவேற்ற வேண்டும், அல்லது வுழூவின் ஸுன்னத் இரு ரக்அத்களைத் தொழ வேண்டும்.
தொழுது முடிந்ததும் இவ்வணக்கத்தைத் தான் நிறைவேற்ற விரும்பும் முறையில் உள்ளத்தால் நிய்யத் வைக்க வேண்டும். பின் :
பின் அதிகமாகத் தல்பியா கூற வேண்டும். “லப்பைக ல்லாஹும்ம லப்பைக, லப்பைக லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல் முல்க், லாஷரீக லக்”. ஆண்கள் இதனை சத்தமிட்டுக் கூறுவதுடன், பெண்கள் தமக்குப் பக்கத்திலுள்ளவர் கேட்குமளவு கூற வேண்டும். அத்துடன் இஹ்ராம் நிய்யத் வைத்த நிலையில் செய்வதற்குத் தடைசெய்யப்பட்ட விடயங்களைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
மக்காவினுள் நுழையும் போதும் குளித்துக் கொள்வது விரும்பத்தக்கது. பின் மஸ்ஜிதுல் ஹராத்திற்குச் சென்று தமத்துஃ செய்பவராக இருந்தால் உம்ராவை நிறை வேற்ற வேண்டும். கிரான், இப்ராத் முறைகளில் ஹஜ் செய்பவராக இருந்தால் தவாபுல் குதூம் எனும் வருகைக்கான தவாபை செய்ய வேண்டும்.
மஸ்ஜிதுல் ஹராமை அடைந்ததும் பள்ளிக்குள் நுழையும் போது ஓத வேண்டிய துஆவை ஓதி வலது காலை முன்வைத்து நுழைய வேண்டும். கஃபாவை அடைந்ததும் தவாப் செய்ய முன் தல்பியாவை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆண்கள் மாத்திரம் மக்கா சென்றதும் செய்யும் தவாஃபில் ‘இழ்திபாஃ’ எனப்படும் முறையில் இஹ்ராம் ஆடையை மாற்றிக் கொள்வது ஸுன்னத்தாகும். ஆடையின் மத்தியை வலது புயத்தில் கீழ் போட்டு வலது புயம் வெளியில் தெரியுமாறும், ஆடையின் இரு ஓரங்களையும் இடது புயத்தின் மேலும் போடுவதே ‘இழ்திபாஃ’ எனப்படுகிறது.
பின் தவாபை ஆரம்பிப்பதற்காக ஹஜருல் அஸ்வத் எனும் கல்லை நெருங்கி அதனை முத்தமிட முடியுமென்றால் முத்தமிட வேண்டும். இயலாத பட்சத்தில் அதனை முன்னோக்கி கையினால் சைகை மாத்திரம் செய்ய வேண்டும். தனது இடது புறம் கஃபா இருக்க அவ்வாறே முன்னோக்கி நகர்ந்து ஏழு முறை சுற்ற வேண்டும். முதல் மூன்று சுற்றிலும் காலடிகளை சிறியதாக எடுத்து வைத்து அவசர அவசரமாக நடந்து செல்ல வேண்டும். இதற்கு "ரமல்" எனப்படுகின்றது.
ருக்னுல் யமானீ எனும் முனையை அடைந்தால் அதனை முத்தமிடாமல் தொட வேண்டும். முடியாவிட்டால் சைகை செய்ய வேண்டிய அவசியமில்லை. ருக்னுல் யமானீ ஹஜருல் அஸ்வத் ஆகியவற்றுக்கிடையில் “ரப்பனா ஆதினா ஃபித் துன்யா ஹஸனஹ், வஃபில் ஆகிரதி ஹஸனதவ் வகினா அதாபன் நார்” எனும் துஆவை ஓத வேண்டும்.
ஒவ்வொரு சுற்றிலும் ஹஜருல் அஸ்வத் கல்லைத் தாண்டும் போது தக்பீர் கூற வேண்டும். தவாபின் ஏனைய பகுதிகளில் தான் விரும்பிய திக்ரு, துஆக்களை ஓதுவதுடன் அல்குர்ஆனையும் ஓதலாம்.
தவாப் ஏழு சுற்றுக்களையும் நிறை வேற்றி முடிந்த பிறகு இஹ்ராம் துணியை முறையாக அணிந்து கொள்ள வேண்டும். பின் முடியுமாயிருந்தால் மகாம் இப்ராஹீமுக்கு பின் நின்று முடியாவிட்டால் பள்ளியின் எப்பகுதியிலும் நின்று இரண்டு ரக்அத்துகள் தொழ வேண்டும். முதல் ரக்அத்தில் பாதிஹாவுக்குப் பின் ஸூரத்துல் காஃபிரூனும், இரண்டாவது ரக்அத்தில் ஸூரத்துல் இக்லாஸும் ஓத வேண்டும்.
பின் ஸஈ செய்யுமிடத்திற்குச் சென்று ஸபாக் குன்றை நெருங்கியதும் இன்னஸ் ஸபா வல் மர்வத மின் ஷஆஇரில்லாஹ் என ஓதிவிட்டு, அல்லாஹ் ஆரம்பித்ததிலிருந்தே நானும் ஆரம்பிக்கின்றேன் எனக் கூற வேண்டும்.
ஸபா குன்றிலிருந்தே ஸஈயை ஆரம்பிக்க வேண்டும்.
அதன் பிறகு ஸபா குன்றில் ஏறி கிப்லாவை முன்னோக்கி நின்று இரு கைகளையும் உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்நது, பிரார்த்தனை புரிய வேண்டும். நபியவர்கள் தனது பிரார்த்தனையில் பின் வருமாறு கூறினார்கள் : “லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர், லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, அன்ஜஸ வஃதஹ், வ நஸர அப்தஹ், வ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ்.” அதைப் போன்று மூன்று விடுத்தம் கூறினார்கள். அதன் பிறகு தான் விரும்பிய துஆக்களை கேட்டார்கள்.
பின் ஸபாவிலிருந்து இறங்கி மர்வா குன்றை நோக்கி நடக்க வேண்டும். இடையில் பச்சை நிற இரு விளக்குகளுக்கு இடையில் ஆண்கள் முடியுமானளவு வேகமாக ஓடுவது விரும்பத்தக்கது. பெண்கள் அவ்விடங்களில் ஓடுவது மார்க்கத்திலுள்ளதல்ல. மாறாக ஸஈ முழுவதிலும் நடந்தே செல்ல வேண்டும்.
பின் மர்வா வரை தொடர்ந்து நடந்து சென்று அக்குன்றில் ஏறி கிப்லாவை முன்னோக்கி குறிப்பிட்ட அல்குர்ஆன் வசனத்தைத் தவிர ஸபா குன்றில் ஓதிய அனைத்துப் பிரார்த்தனை, திக்ருகளையும் இங்கும் ஓத வேண்டும்.
ஏழு சுற்றுக்கள் முடியும் வரை இவ்வாறு செய்ய வேண்டும். ஸஃபா” வில் இருந்து “மர்வா” வை நோக்கி செல்வது ஒரு விடுத்தமாகவும், மீண்டும் “மர்வா” வில் இருந்து “ஸஃபா” நோக்கி வருவது இன்னுமொரு விடுத்தமாகவும் கருதப் படும். ஸஈயில் முடியுமானளவு பிரார்த்தனை, திக்ருகளை அதிகப்படுத்துவதும், சிறு, பெரு தொடக்குகளிலிருந்து சுத்தமாயிருப்பதும் விரும்பத்தக்கது.
தமத்துஃ செய்பவர் உம்ராவுடைய ஸஈ, ஹஜ்ஜுடைய ஸஈ என இரு ஸஈக்கள் செய்ய வேண்டும். கிரான், இப்ராத் செய்பவர் ஒரு ஸஈ மாத்திரம் செய்ய வேண்டும். அதனை வருகைக்கான தவாப், அல்லது ஹஜ்ஜுடைய தவாபிற்குப் பின் செய்ய வேண்டும்.
தமத்துஃ செய்பவர் ஸஈ செய்து முடிந்ததும் தலைமுடியை மழிக்க வேண்டும், அல்லது கத்தரிக்க வேண்டும். ஆண்களுக்கு மழித்தல்தான் மிகச் சிறந்தது. எனினும் உம்ராவுடைய ஸஈக்குப் பின் கத்தரித்து விட்டு, ஹஜ்ஜுடை ஸஈக்குப் பின் மழிக்க வைத்தால் அதுவும் நல்லதுதான். பெண் தனது முடிகளை ஒன்று சேர்த்து விரல் மடிப்பளவு கத்தரிக்க வேண்டும். மேற்கூறப்பட்டவற்றை இஹ்ராம் அணிந்த ஒருவர் நிறைவேற்றினால் அவரது உம்ரா நிறைவடைந்து விடுகின்றது. ஏற்கனவே தடுக்கப்பட்டிருந்த அனைத்தும் அனுமதிக்கப்படுகின்றது. எனினும் கிரான், இப்ராத் முறையில் ஹஜ் செய்பவர் ஸஈக்குப் பின் முடிகளை நீக்காமல் இஹ்ராத்துடனேயே தொடர்ந்திருக்க வேண்டும்.
துல் ஹஜ் மாதத்தின் எட்டாம் நாளே தர்வியா தினமாகும். அன்றைய தினம்தான் ஹஜ்ஜுடைய நிகழ்வுகள் ஆரம்பிக்கின்றன. தமத்துஃ செய்தவர் தான் இருக்குமிடத்திலேயே அன்றைய தின ழுஹா வேளையில் குளித்து, நறுமமணம் பூசி, இஹ்ராம் ஆடையை அணிந்து, தொழுது விட்டு, பின் லப்பைகல்லாஹும்ம ஹஜ்ஜன் எனக்கூறி ஹஜ்ஜுக்காக நிய்யத் வைக்க வேண்டும். இப்ராத், கிரான் செய்தவர் முன்னைய இஹ்ராமிலேயே தொடர்ந்திருக்கின்றனர். பின் ஹாஜிகள் ழுஹருக்கு முன் மினாவை நோக்கி புறப்பட்டு. அங்கு ழுஹர், அஸர், மஃரிப், இஷா மற்றும் அடுத்த நாள் ஃபஜ்ர் ஆகிய ஐந்து தொழுகை களையும் நிறை வேற்ற வேண்டும். நான்கு ரகஅத் உடைய தொழுகைகளை மாத்திரம் இரண்டிரண்டு ரகஅத்களாக சுருக்கி சேர்த்தாமல் உரிய நேரங்களில் தொழ வேண்டும். தல்பியா, திக்ரு, குர்ஆன் ஓதல் போன்ற வணக்கங்களில் அதிக நேரத்தை செலவிட வேண்டும்.
துல் ஹஜ் மாதத்தின் ஒன்பதாம் நாளாகிய அரபா தினம் சூரியன் உதயமானதும் மினாவை விட்டும் புறப்பட்டு அமைதியாகவும், நிதானமாகவும் அல்லாஹ்வை திக்ரு செய்து, தல்பியாக் கூறிய நிலையில் அரபா எல்லைக்கு வந்து விட வேண்டும். நமிரா எனும் இடத்தில் சூரியான் மேற்குப் பக்கம் சாயும் வரை தரிக்க முடியுமென்றால் அதுவும் விரும்பத்தக்கது. அவ்வாறில்லையெனில் நேரடியாகவே அரபாவுக்குள் நுழைந்து அங்கு ளுஹரையும், அஸரையும் முற்படுத்தி சுருக்கித் தொழ வேண்டும். அரபாவில் அல்லாஹ்வை திக்ர் செய்வதிலும், அதிகமாக அல்லாஹ்விடம் துஆக் கேட்பதிலும், இரைஞ்சுவதிலும் தனது நேரங்களைப் பயன்படுத்த வேண்டும். துஆக் கேட்கும் போது கிப்லாவை முன்னோக்கி இரு கரங்களையும் நன்றாக உயர்த்தி துஆக் கேட்பது சுன்னத்தாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “அரபா தினத்தலன்றி வேறெந்த தினத்திலும் அல்லாஹ் அதிகளவில் அடியார்களை நரகிலிருந்து விடுதலை செய்வதில்லை அவன் நெருங்கி வருகின்றான், பின் இவர்களைப் பற்றி வானவர்களிடம் பெருமதப்பட்டு, இவர்கள் எதனைத் தான் நாடி வந்திருக்கிறார்கள் எனக் கூறுகின்றான்.” (முஸ்லிம் 1348).
சூரியன் சாய்ந்ததிலிருந்து மறையும் வரையிலான நேரமே அரபாவில் தரிக்க வேண்டிய கால அளவாகும். சூரியன் மறைந்ததும் முஸ்தலிபா நோக்கிச் செல்ல வேண்டும்.
ஹாஜிகள் முஸ்தலிபா சென்றதும் மஃரிப், இஷா ஆகிய தொழுகைகளை ஒரு அதானும், இரு இகாமத்தும் கூறி பிற்படுத்தி சேர்த்தும், சுருக்கியும் தொழ வேண்டும். அங்கே இராத் தரிக்க வேண்டும். பஜ்ரு உதயமானதும் அதனைத் தொழுது விட்டு, நன்கு வெளுக்கும் வரை கிப்லாவை முன்னோக்கி இரு கரங்களையும் உயர்த்தி துஆ, திக்ருகளில் ஈடுபட வேண்டும்.
துல் ஹஜ் மாதம் பத்தாம் நாள் நன்கு வெளுக்க ஆரம்பித்ததும் சூரியன் உதயமாவதற்கு முன்னர் மினாவிற்குச் செல்லப் புறப்பட வேண்டும். போகும் வழியில் கடலை விதையை விட சற்று பெருத்த ஏழு சிறு பொடிக்கற்களை புறக்கிக் கொள்ளலாம். மினாவை அடைந்ததும் மக்கா திசையிலுள்ள பெரிய ஜம்ரா அல்லது ஜம்ரதுல் அகபா எனும் தூணுக்கு ஏழு கற்களையும் ஒவ்வொன்றாகத் தக்பீர் கூறிய ஏறிய வேண்டும். அது முடிந்ததும் அறுத்துப் பலியிட வேண்டிய பிராணியை அறுக்க வேண்டும். பின் முடியை மழிக்க வேண்டும், அல்லது கத்தரிக்க வேண்டும். பெண் தனது முடியிலிருந்து விரல் மடிப்பளவு கத்தரிக்க வேண்டும். அதன் பின் நறுமணம் பூசிக்கொள்வது விரும்பத்தக்கதாகும். பின் மக்க சென்று ஹஜ்ஜுடைய தவாப், மற்றும் ஸஈயை நிறைவேற்ற வேண்டும். பின் மினாவுக்குத் திரும்பி பதினொறாம் நாளிரவை அங்கு கழிக்க வேண்டும்.
ஹாஜிகள் மினாவில் 11ம், 12ம், இரவுகளிலும் தாமதித்துச் செல்பவர்கள் 13ம் நாள் இரவிலும் தரிப்பது அவசியமாகும். சூரியன் சாய்ந்த பின் மூன்று ஜம்ராக்களுக்கும் கல்லெறிய வேண்டும்.
கல்லெறியும் முறை
மஸ்ஜிதுல் கைஃபை அடுத்துள்ள முதலாவது ஜம்ராவுக்கு ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து ஏழு கற்களை தக்பீர் கூறிய வண்ணம் எறிய வேண்டும். பின் சற்று முன்னோக்கி நகர்ந்து விரும்பிய துஆவைக் கேட்க வேண்டும். பின் மத்தியிலுள்ள ஜம்ரதுல் வுஸ்தாவுக்கு ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து ஏழு கற்களை தக்பீர் கூறிய வண்ணம் எறிய வேண்டும். பின் இடது புறம்சென்று கிப்லாவை முன்னோக்கி, கைகளை உயர்த்தி துஆக் கேட்க வேண்டும். பின் ஜம்ரதுல் அகபாவிற்கு ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து ஏழு கற்களை தக்பீர் கூறிய வண்ணம் எறிய வேண்டும். பின் துஆக் கேட்காமல் உடனே திரும்பி விட வேண்டும்.
12ம் நாள் கல்லெறிந்து முடிந்தால் விரும்பியவர் தனது கிரியைகளை முடித்துக் கொண்டு மினாவை விட்டுப் புறப்பட்டுச் செல்லலாம். விரும்பியவர் தாமதித்து 13ம் இரவு அங்கு கழித்து அன்றைய தினம் பகலில் சூரியன் சாய்ந்த பின் மூன்று ஜம்ராக்களுக்கும் கல்லெறிய வேண்டும். இவ்வாறு தாமதித்துச் செல்வதே சிறந்தது.
ஹஜ் கிரியைகள் முடிந்து ஹாஜிகள் மக்காவிலிருந்து ஊர் திரும்ப விரும்பினால் தவாபுல் வதாஃ செய்யாமல் புறப்படலாகாது. புறப்படுவதற்கு முன்னரான இறுதி செயற்பாடாக இந்த தவாபை அமைத்துக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : "தனது கடைசிக் கிரியையாக பைத்துல்லாவில் தவாப் செய்யாமல் யாரும் புறப்பட்டுச் செல்ல வேண்டாம்". (முஸ்லிம் 1327). பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் இந்த தவாப் அவளுக்குக் கடமையில்லை.